ஞாயிறு, 28 ஜூலை, 2013

இரண்டு ரூபாய்ப் பொருளுக்கு 200 கோடியில் ஆராய்ச்சி தேவையா?


அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் சிண்டைப் பிய்த்துக் கொண்டார்கள். விண்வெளிப் பயணங்களில் யார் வெற்றிக்கொடி நாட்டுவது என்பதில் பெரும் போட்டி நிலவிய காலம். விண்வெளியில் ஈர்ப்பு விசை கிடையாது. ஆகவே மைப் பேனாவைக் கொண்டு அங்கே போய் எழுத முடியாது. மையே வெளியில் வராதே. ஈர்ப்பு விசை அற்ற நிலையில் எழுதுவதற்குரிய ஒரு சாதனத்தைக் கண்டுபிடிக்கக் கோடிக் கணக்கில் செலவு செய்து ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வந்தார்கள்.

இதைப் பற்றியெல்லாம் கவலையே படாமல் கால்காசுச் செலவில் இரஷ்யர்கள் ஓரு மாற்று ஏற்பாட்டைக் கண்டுபிடித்தார்கள். அது பற்றிப் பிறகு பார்ப்போம்.
உங்களுக்குப்  பென்சில் தெரியும். காகிதப் பென்சில் என்பீர்கள். சிலர் இதனை லெட் பென்சில் என்றும் குறிப்பிடுவார்கள். ஏன் அப்படிலெட் என்றால் காரீயம் இல்லையாஎழுதுகிற பென்சிலில் காரீயத்திற்கு என்ன வேலைதாளின் மேல் கறுப்பாக எழுதுகிற அந்தத் துண்டுதான் காரீயம் என்கிறீர்களாஅதுதான் இல்லை.  அதன் பெயர் கிராபைட். நமது பேச்சு வழக்கில் காக்கைப் பொன்.

எழுதுவதற்கான பென்சிலைக் கண்டுபிடித்த பெருமை இங்கிலாந்துக்காரர்களையே சாரும். அவர்கள் பென்சிலைக் கண்டுபிடிக்க வேண்டும் என்பதற்காகவெல்லாம் முயற்சி செய்யவில்லை. தற்செயலாக ஒரு பெரும் கிராபைட் சுரங்கத்தைக் கண்டுபிடித்தார்கள். கம்பிரியா என்ற பகுதியில் பாரோடேல் என்ற இடத்தில் 1594 ஆம் ஆண்டு இந்தச் சுரங்கம் இருப்பது தெரிய வந்தது.



அங்கு கிடைத்த தாதுவைப் பாளம் பாளமாக வெட்டி எடுத்தார்கள். கம்பிகளைப் போல் சீவிக் கொண்டார்கள். காகிதத்தின் மேல் தொட்டு இழுத்தபோது கறுப்புக் கோடு விழுந்தது. அதுதான் முதல் பென்சில். கிராபைட் தாதுவை அப்படியே வெறுங்கையில் பிடித்துக் கொள்ள வசதிப்படவில்லை. எனவே மரக்குச்சி ஒன்றில் ஒரு துளையைக் குடைந்து அதற்குள் கிராபைட்டை நுழைத்து ,பிடித்து எழுதுவதற்கு வசதி செய்து கொண்டார்கள்.
சரி..இதை ஏன் லெட் பென்சில் என்றார்கள்தப்புத்தான். தப்பான கணிப்புத்தான். கறுப்பாக இருக்கும் ஈயம் என்றுதான் கிராபைட்டை நினைத்துக் கொண்டார்கள். அதைக் கறுப்பு ஈயம் என்று பொருள் இலத்தீன் சொல்லான plumbago விலிருந்து எடுத்துக் கொண்டார்கள். அப்போதெல்லாம் கிராபைட் என்ற பெயரே உருவாக்கப்படவில்லை.

உலகில் வேறு எங்கும் கிராபைட் சுரங்கங்கள் அந்தக் காலத்தில் கண்டுபிடிக்கப்படாததால் ஆங்கிலேயர்களே பென்சில் தயாரிப்பில் கொடி கட்டிப் பறந்து கொண்டிருந்தார்கள். கிராபைட்டைப் பொடி செய்து அதைக் கொண்டு குச்சி போல் தயாரித்து எழுத முற்பட்டார்கள் ஜெர்மானியர்கள். அது அத்தனை தூரம் வசதியானதாக இருக்கவில்லை.
நெப்போலியனால் எத்தனையோ நன்மைகள் உலகிற்குக் கிடைத்திருக்கின்றன. பென்சிலும் அவற்றுள் ஒன்று என்றுதான் சொல்லவேண்டும். நெப்போலியனிடம் படைத் தளபதியாக இருந்த Nicholas Jacques Conte 1795 ஆம் ஆண்டு, களிமண்ணுடன் கிராபைட்டைக் கலந்து சூளையில் சுட்டெடுத்துப் பென்சில் தயாரிக்கும் முறையைக் கண்டுபிடித்தவர். கணிமண்ணின் அளவை மாற்றினால் பென்சிலின் கடினத் தன்மையும் மாறும். எச்பி2எச்பி என்பதெல்லாம் இந்தக் கணக்குத்தான்.


ஆரம்ப காலங்களில் ஓவியர்கள்தான் பென்சில்களைப் பயன்படுத்தி வந்தார்கள். பென்சில் என்ற சொல்லும் இலத்தீன் மொழியில் உள்ள penicillus என்ற சொல்லில் இருந்து வந்ததுதான். சின்ன வால் என்று இதற்குப் பொருள். ஏனென்றால் பண்டைய உரோமானிய  ஓவியர்கள் விலங்குகளின் வால்முடியைக் குச்சமாகக் கட்டிக் கொண்டுதான் ஓவியங்களைத் தீட்டி வந்தார்கள். வேதி அடிப்படையி;ல் கிராபைட்டை ஆய்வு செய்தவர் K.W. Scheele என்பவர். இதுநடந்தது 1779ஆம் ஆண்டில். அதற்குப் பிறகு பத்தாண்டுகள் கழித்து கிராபைட் என்ற பெயரைச் சூட்டியவர்A.G. Werner என்பவர். இது கிரேக்க மொழிச் சொல். எழுதுவதற்கு என்று பொருள்படும்.

பென்சிலின் வரலாற்றில் இன்னும் பல மர்மங்களும் உண்டு. அது இருக்கட்டும். இரஷ்யர்கள் கண்டுபிடித்த சிக்கனமான தீர்வு என்ன என்று புரிந்துவிட்டதா?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக