எட்வர்ட் ஸ்நோடென் என்ற பெயர்தான் தற்போது அமெரிக்க அரசாங்கத்துக்கு கிலியை ஏற்படுத்தி, பல உயர் அதிகாரிகளின் தூக்கத்தை கெடுத்துக்கொண்டிருக்கிறது.
அமெரிக்காவின் சி.ஐ.ஏ.வில் தொழில்நுட்ப வல்லுனராக பணிபுரிந்த 29 வயது எட்வர்ட் ஸ்நோடென் அமெரிக்க உளவு வேலை ஒவ்வொரு தனி நபரின் சுதந்திரத்திலும் தலையிடுவதை பொறுத்துக்கொள்ளமுடியாமல், அமெரிக்கா இப்படி நடந்துகொள்கிறது என்பதற்கான ஆதாரங்களை திரட்டி 'தி கார்டியன்' எனும் இங்கிலாந்து பத்திரிக்கைக்கு வாரி வழங்கிவிட்டு ஹாங்காங்கில் தலைமறைவாக சென்றுவிட்டார். கடைசிகட்ட நிலவரப்படி தங்கியிருந்த விடுதியை விட்டு வெளியேறிவிட்டார். தற்போது இருக்குமிடம் தெரியவில்லை. அவர் திரட்டியிருந்த தகவல்கள் தேசிய பாதுகாப்பு ஏஜென்சிக்கு சொந்தமானவை.
ஆரம்பத்தில் 'யாரும் உங்களை ஒட்டு கேட்கவில்லை' என்று சொன்ன ஒபாமா அரசாங்கம் இப்போது அவர் மேல் அரசாங்க ஆவணங்களை வெளியிட்டதற்காக வழக்கு பதிந்து இவரை தீவிரமாக தேடிவருகிறது. எட்வர்ட் இங்கிலாந்தில் அடைக்கலம் புகலாம் என்ற கணிப்பினால் 'இந்த நபரை இங்கிலாந்து செல்லும் விமானங்களில் ஏற்றக்கூடாது' என்று எல்லா விமான நிறுவனங்களுக்கும் ரகசிய சுற்றறிக்கையும் அனுப்பியுள்ளது.
சரி இவர் என்ன செய்தார்?
2001 தீவிரவாதத் தாக்குதலுக்குப் பின்னால் தன் நாட்டின் பாதுகாப்பிற்காக உலகையே உளவு பார்க்கத்தயாரான அமெரிக்க பாதுகாப்புத்துறையின் திட்டம் தான் PRISM. மைக்ரோசாஃப்ட், ஃபேஸ்புக், யாஹூ, கூகுள், ஸ்கைப், பால்டாக்
(Paltalk), யூடியூப், AOL மற்றும் ஆப்பிள் நிறுவனங்களின் பயனீட்டாளர்களின் தனிவிவரம் முதல் அவர்களது தொலைபேசி, இணையவழி தொடர்புகள், யாருடன் என்ன, எவ்வளவு நேரம், எங்கிருந்து பேசுகிறார்கள் என்று சகலத்தையும் கண்காணிக்கும் திட்டம்தான் PRISM. இதற்கு அந்த ஒன்பது நிறுவனங்களும் ஒப்புக்கொண்டு ஏஜென்சி கேட்கும்போதெல்லாம் பயனீட்டாளர் விவரங்களை தந்துகொண்டிருந்தன.
தேசிய பாதுகாப்பு ஏஜென்சியிடம் இருந்த இந்த கட்டுப்பாடற்ற வசதி தனி மனிதர்களின் சுதந்திரத்திற்கு பெரும் ஆபத்து என்று கோபப்பட்ட எட்வர்ட் தன் உயிருக்கு மட்டுமல்லாது பெரும்பாலும் அரசு வேலைகளிலேயே இருக்கும் தன் குடும்ப உறுப்பினர்களின் பாதுகாப்பிற்கும் ஆபத்து என்று தெரிந்தும் துணிச்சலாக திட்டமிட்டு, தனக்கு தேவையான ஆதாரங்களைத் திரட்டிய கையோடு ஹாங்காங் சென்றுவிட்டார். அங்கிருந்தபடியே தகவல்களை 'தி கார்டியன்' மூலம் வெளியிட்டவர் தன அடையாளத்தை மறைக்க முற்படாமல் விரிவாக பேட்டியும் தட்டிவிட்டார். இப்போது அமெரிக்க அரசாங்கத்தின் மேல் சில அமைப்புகள் வழக்குகள் போட்டு நெருக்கடி கொடுக்க ஆரம்பித்துவிட்டன. இது ஒரு பக்கம் இருக்க அரசாங்கமும், அமெரிக்க பொது மக்களில் ஒரு சாராரும் இவரை 'துரோகி' என்றழைக்கத்தொடங்கியுள்ளனர். தேசிய பாதுகாப்பு ஏஜென்சிக்கு தகவல்களை அளித்து வந்ததாகக் கூறப்பட்ட, மேற்சொன்ன நிறுவனங்களில் சில அரசாங்கத்திலிருந்து வந்த ரகசிய கடிதங்களை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எப்படிப் பார்த்தாலும் அமெரிக்காவுக்கு தலைவலி.
எட்வர்ட் ஹாங்காங்கில் தங்கியிருப்பதால் சீன அரசு அவரைப் பாதுகாக்க முற்படும் எனத்தெரிகிறது. ஹாங்காங் மக்கள் ஏற்கனவே எட்வர்டுக்கு ஆதரவாக ஒரு பேரணி நடத்திவிட்டனர். ரஷியாவும் எட்வர்ட் தம் நாட்டுக்கு அடைக்கலமாக வந்தால் அதைப் பரிசீலிப்போம் என்று கூறியுள்ளது. இதன் நடுவே அமெரிக்காவுக்கு சிம்மசொப்பனமாகத் திகழ்ந்த ஜூலியன் அசாஞ்ச் தான் தலைமறைவாக உள்ள எட்வர்டுடன் தொடர்பில் இருப்பதாக கூறியிருக்கிறார். எட்வர்டுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே கண்ணாமூச்சி ஆட்டம் நடக்கிறது. எனினும், எட்வர்ட் இந்த தகவல்களை வெளியிடுவதன் மூலம் தன் உயிருக்கு ஆபத்து வரும் என்பதை அறிந்திருப்பதாக முன்பே சொல்லியுள்ளார்.





கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக