வெள்ளி, 28 ஜூன், 2013

ஹலோ இங்கிட்டு "கோயிந்து" அங்கிட்டு?


​1. ஞானியின் கடிதம் ஏன் குறிஞ்சியில் போடுமளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததா? - சென்னையிலிருந்து கதிரவன்.

​நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேசன் மத்திய அரசின் மூதலீட்டினால் 1959ல் ஆரம்பிக்கப்பட்டு வெற்றிகரமாக நடத்தப்படும் ஓர் நவரத்தின பொதுதுறை நிறுவனம். முதலில் 600மெகாவாட் கொள்ளவோடு ஆரம்பிக்கப்பட்டு இப்பொழுது 2740மெகாவாட் கொள்ளவு கொண்டது. இந்த அமைப்பானது இ​ந்தியாவிலே மிகப்பெரிய திறந்தவெளி நிலக்கரி சுரங்கம் கொண்டது

வருடத்துக்கு 1400கோடி லாபம் ஈட்டும் ஓர் நிறுவனம்.ஏற்கனவே 7 சதவீத பங்குகளை சந்தையில் விற்றுவிட்டனர். இப்பொழுது 400கோடி மதிப்பிலான 5 சதவீத பங்குகளை விற்க முயலுகின்றனர். ​கடந்த திமுக அரசாங்கத்தின் போது நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேசனால் தமிழகத்தில் செயங்கொண்டத்தில் தொடங்கவிருந்த மற்றுமொரு அனல் மின் நிலையத்திற்கு எங்கிருந்தோ வந்த முட்டுக்கட்டையை அடுத்து அந்த நிறுவனம் ராஜஸ்தானுக்கு சென்றதாக தகவல். இங்கேயே நிலக்கரி எடுத்து இங்குள்ள தமிழர்களின் உழைப்பினையும் சுரண்டிக்கொண்டு சம்பாதித்த லாபத்தினைக் கொண்டு எங்கேயோ மின்சாரம் எடுப்பார்களாம். நல்லாருக்கு உங்க நியாயம்.

இந்த 5 சதவீத பங்குகளை தமிழக அரசாங்கம் வாங்கும் போது மேலும் வருங்காலத்தில் யார் ஆண்டாலும் இதை பின்பற்றியே தீர வேண்டும் ஆக மெல்ல மெல்ல பெரும்பான்மையான பங்குகளை நாம் கைப்பற்றிய பிறகு நாம் யாருக்கு மின்சாரம் வழங்க வேண்டும் என்பதை தீர்மானிக்கும் இடத்தில் இருப்போம் அல்லது அதிக விலை நிர்ணயித்து லாபம் பார்க்கலாம். அதை விடுத்து கர்நாடகாவிற்கு மின்சாரம் கொடுக்க கூடாது என நடிகர்களின் தலைமையில் ஏதேனும் நாடகங்கள் போடத் தேவையிருக்காது.

அ​து சரி யோவ் நீர் என்ன தகத்தகாய கதிரவனோ, ஞானின்னா உடனே எதிர் கேள்வி கேட்கிற, சரி விடு இப்பவாது திருப்தியா.

2. ராஜ்யசபை தேர்தலில் காங்கிரசின் கைங்கர்யத்தினால் கனிமொழி பெற்ற வெற்றியினால்  வரும் லோக்சபா தேர்தலில் திமுக பின்னடைவை சந்திக்குமா? கோவையிலிருந்து பாலா.

​மாணவர்களின் இயல்பான எழுச்சி என்று சொல்லப்படும் போராட்டத்தின் நிர்பந்ததின் விளைவினாலேயே அப்பொழுது திமுக கசப்போடு வெளிவந்தது. அதை உணராமல் உபிக்களும் வெடி வெடித்து கொண்டாடிவிட்டனர். மற்றபடி இப்பொதைக்கு காங்கிரசினை திமுகவால் உதறமுடியாது.ஏனெனில் காங்கிரசு போட்ட உடும்பு பிடி அப்படி இத்தனைக்கும் திமுக 2ஜியினால் அடைந்த லாபம் என்பது காங்கிரசு தலைமையடைந்த லாபத்தில் வெறும் 5 சதவீதம் மட்டுமே,ஆனால் உண்மையை சொன்னால் மொத்தத்திற்கும் திமுகவே விலை கொடுக்க நேரிடும் இதுவே வேற்றாளாய் இருந்தால் திமுக தலைமை  இதற்குள் ஆடுபுலி ஆட்டம் ஆடி காங்கிரசின் கையை ஓர் கை பார்த்திருக்கும், ஆனால் என்ன பண்ண பரமபத ஆட்டத்தில் இப்பொழுது இருப்பது தன் ரத்தமல்லவா.

இதுகுறித்து கலைஞரை நான் விமர்சிக்க விரும்பவில்லை அவர் சூழ்நிலை கைதியாகவே இன்றயை நிலையில் உள்ளார், ஆகவே நாம் அடுத்தடுத்த நிலையில் உள்ளவர்களை பார்ப்போம்.

இ​ங்கு எல்லோரும் கொள்ளை அடித்ததற்காக கனிமொழியை விமர்சிக்கின்றனர், எம்மைக் கேட்டால் 20% பங்குகளையே சகோதரி கனிமொழி அந்த டிவியில் வைத்துள்ளார், மீதமுள்ள 60% பங்குகள் நாளைய தலைமை எனப்படும் தளபதியின் கட்டுப்பாட்டில் அப்படி எனில் யாரை நாம் அதிகம் விமர்சிக்கவேண்டும்???, மேலும் கூட்டணியை விட்டு வெளிவந்ததும் அவர் இனி எக்காலத்திலும் காங்கிரசோடு கூட்டணி கிடையாது என்றார், அதுமட்டுமின்றி பாமகவின் அன்புமணியோடு யாரும் உங்களிடத்தில் கூட்டணி கேட்டு நிற்கவில்லை எனக் கூறிய இரண்டோரு நாட்களில் புளக்கடையோரம் போய் ராஜ்யசபை தேர்தலில் தங்கைக்கு ஓர் சீட்டுக்கு ஆதரவு வேண்டினார், இதுபற்றி ஏனோ எந்த பத்திரிக்கையும் வாய் திறப்பதில்லை. ஆ​யினும் நாம் ஏன் இதை இங்கு பதிவு செய்கிறோம் எனில் வருங்காலத்தில் களத்தில் அவர் அதிமுக தலைமையோடு ஓப்பிடும் பொழுது அடித்தட்டு மக்களுக்கு புனிதராக கட்டமைக்கப்படுவார், என்ன பண்ண அதுதான் நமது தலைவிதி என்றால் அனுசரித்துதான் போகவேண்டும். 

எ​ன்னைக் கேட்டால் சகோதரி கனிமொழி லோக்சபா தேர்தலில் தஞ்சையிலோ அல்லது நெல்லையிலோ நின்று வெற்றி பெற்றிருந்திருக்கலாம், அவர் மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டின்தொனியும் நாளடைவில் மறைந்திருக்கும்.  ஆனால் என்ன பண்ண அடுத்த தேர்தலில் தஞ்சையை குறிவைக்கும் ஓர் பழம் தின்னும் கொட்டை போட்ட அரசியல்வாதியின் முன்னே இவர் ஓர் அப்பிராணி ஆகவே அவர் விரித்த வலையினில் வீழ்ந்துவிட்டார், மேலும் சகோதரி கனிமொழியின் அப்பாவித்தனத்தினை பின்வரும் வார்த்தைகளிலே அறிந்துகொள்ளலாம் "வெற்றிக்காக காங்கிரசுக்கு டின்னர் பார்ட்டி கொடுக்கலாம் என்று கூறியதிலிருந்து".

மற்றபடி சகோதரி கனிமொழி மக்களோடு நெருங்கவதில் அவரது குடும்பத்தாருக்கே பிரச்சினை என்பதாகவே படுகின்றது. அவருக்கு யார் எடுத்து சொல்வார்கள் என்று புரியவில்லை அரசியலில் பதவி என்று வரும்பொழுது குடும்பமோ, நண்பர்களோ கிடையாது. பார்க்கலாம் வருங்காலத்தில் அரசியலில் அவரது எதிர் நீச்சல் எப்படி என்று.

சரி சரி கேள்விக்கு வருவோம், லோக்சபா தேர்தல் என்பது டெல்லியை பொருத்தவரையில் ஊழல் குற்றச்சாட்டுகள் அல்லது மோதியா, ராகுலா என்பதாகவே இருக்கும்.  ஆனால் தமிழக்த்தை பொருத்தவரையில் ஊழல் ஓர் பொருட்டே அல்ல ஏனெனில் காலம் காலமாக நாம் எரிகின்ற கொள்ளியில் எது பெட்டர் என்றே  தேர்ந்தெடுக்கும் சூழ்நிலையில் உள்ளோம், ஆகவே இங்கு மின்சாரம், விலைவாசி மற்றும் கூட்டணி ஆகியனவே வெற்றியே நிர்ணயிக்கும்.  ஆகவே திமுகவுக்கு லோக்சபா தேர்தலில் இது பிரச்சினையாக இருக்காது.  

ஆனால் வருங்காலம் எனப்படும் இளைஞர்களின் நம்பிக்கையை அவர்கள் மெல்ல மெல்ல இழந்து வருகிறார்கள். ஓட்டரசியலில் வேண்டுமானால் இவர்களால் இந்த இழப்பினை ஈடுக்கட்ட முடியும் ஆனால் திமுகவின் கொள்கை என்பது இன அரசியலே அங்கு அவர்கள் மெல்ல மெல்ல தங்கள் பிடியினை இழந்து வருகிறார்கள் ஆக இனி திமுகவின் தலைமைதான் இது குறித்து முடிவெடுக்க வேண்டும்.



3. விம்பிள்டன் போட்டியில் ரோஜர் பெடரரின் அதிர்ச்சி  தோல்வி குறித்து? -  நெல்லையிலிருந்து மதி.

​முதலில் டென்னிஸ் விளையாட்டின் "கிராண்ட்ஸ்லாம்" வரலாற்றினைப் பார்ப்போம். ​கிராண்டுஸ்லாம் என்ற வார்த்தை முதலில் கோல்ப் விளையாட்டு போட்டியில் பயன்படுத்தபட்டது. 

பிரான்சிலே முதலில் டென்னிஸ் விளையாடப்பட்டதாக வரலாறு கூறுகின்றது. டென்னிஸில் கிராண்டுஸ்லாம் டைட்டில் என்பது ஆஸ்திரேலிய, பிரெஞ்சு, விம்பிள்டன் மற்றும் அமெரிக்க யுஸ் டைட்டில்களை குறிக்கும்.  ஆஸ்திரேலிய ஓபன் என்பது ஜனவரி மாதமும், பிரெஞ்சு ஓபன் என்பது மே-ஜூனிலும்,  விம்பிள்டன் என்பது ஜூன்-ஜூலையிலும், யுஸ் ஓபன் என்பது ஆகஸ்டு- செப்டம்பரிலும் முறையே இரண்டு வாரங்கள் நடக்கும். 

​விம்பிள்டன் 1877முதலும்,  தொடர்ந்து யுஸ் ஓபன் 1881லும் பின்பு பிரெஞ்சு 1891லும் கடைசியாக ஆஸ்திரேலிய ஓபன் 1905முதலும் தொடர்ச்சியாக விளையாடப்பட்டு வருகின்றது. இந்த கிராண்டுஸ்லாம் பட்டங்களே அதிக பரிசு பொருளையும், மதிப்பெண்களையும் வழங்கும் ஆகவே இந்த பட்டங்களை வெல்வதற்கு அதிக போட்டி இருக்கும்.

இன்றைய அளவில் விம்பிள்டன் போட்டி புல் தரையிலும், பிரெஞ்சு போட்டி களிமண் தரையிலும், ஆஸ்திரேலிய மற்றும் யுஸ் போட்டி கடினமான தரையிலும் நடைபெறுகிறது.


1968 ​பிரெஞ்சு ஓபனில் முதல் முதலாக புரொபசனல் எனப்படும் பெரிய போட்டியளார்களும் அமெச்சூர்கள் எனப்படும் கற்றுக்குட்டிகளோடு மோதலாம் என அறிவித்தனர், அதுவே ஒபன் எரா(OPEN ERA) என அறியப்படுகின்றது. அ​தற்கு முன்பு தொழிற்முறையில் டென்னிஸை விளையாடும் புரோபசனல்கள் கிராண்டு ஸ்லாம்களில் பங்கேற்க முடியாது. அதனால்தான் அப்பொழுது கிரிக்கெட்டில் பிராட்மேனை போன்றோ, ஹாக்கியில் தயான்சந்தைப் போன்ற விளையாட்டு வீரர்கள் டென்னிஸில் பிரபலமடையவில்லை.

எ​வர் ஓருவர் இந்த நான்கு போட்டிகளையும் ஓரே ஆண்டில் வெல்வார்களோ அவர்களே பெரு வெற்றியாளர்கள் எனப்படுவர்,  ஆயினும் 1988க்கு பிறகு நான்கு ஆண்டுகளுக்கு ஓரு முறை நடக்கும் ஓலிம்பிக்கிலும் வெல்பவ்ர்களே பெரு வெற்றியாளார் ஆவர். 

​முதன்முறையாக அ​மெரிக்காவைச் சார்ந்த "ஜான் டொனால்டு பட்ஜ்" 1938ல் அனைத்து நான்கு கிராண்டு ஸ்லாம் பந்தயங்களையும் அமெச்சூர் வீரராக வென்றார்.

​முதன்முறையாக அமெரிக்காவைச் சார்ந்த "மொளரின் கேத்தரின்" என்ற பெண் போட்டியாளர் 1953ல் அனைத்து நான்கு பட்டங்களயும் வென்றவர்.

இ​ருமுறை நான்கு பட்டங்கள்:
ஆ​ஸ்திரேலியாவைச் சார்ந்த "ராட் லேவர்" 1962ல் அமெச்சூர் வீரராக அனைத்து நான்கு கிராண்டு ஸ்லாம் பந்தயங்களையும், 1969ல் புரோபசனல் வீரராக மீண்டும் ஓருமுறை அனைத்து நான்கு கிராண்டு ஸ்லாம் பந்தயங்களையும் வென்ற வீரர் ஆவார்.

​பின்பு ஒபன் எராவில் ஆஸ்திரேலியாவைச் சார்ந்த "மார்க்ரெட் கோர்ட்" என்ற பெண்மணி 1970ல் அனைத்து நான்கு பட்டங்களையும் வென்றவர்.

பெரு வெற்றியாளார்:
​முதன்முறையாக ஜெர்மனியைச் சார்ந்த ஸ்டெபிகிராப் மட்டுமே ஓரே ஆண்டில் 5 போட்டிகளிலும்(ஓலிம்பிக்கிலும்) வென்றவர்.

பெண்களைப் பொருத்தவரையில் மார்க்ரெட் கோர்ட்  அதிக முறையில் 24 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை பெற்றிருக்கிறார்,ஓபன் எராவில் ஸ்டெபிகிராப் 22 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை பெற்றிருக்கிறார்.

ஆ​ண்களைப் பொருத்தவரையில் ஸ்விட்ச்ர்லாந்தை சார்ந்த ரோஜர் பெடரர்  அதிகமாக 17 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்றிருக்கிறார். 

அய்யோ நான் கேள்விக்கே வரவில்லை...  சரி விடுங்க.
​ரோஜர் பெடரர் 2003ல் அவரது முதல் விம்பிள்டன் பட்டத்தை கைப்பற்றினார், அதற்கு முன்பு அவசரகுடுக்கையாகவும், ஆத்திரக்காரரகவும் இருந்த அவரை ஓர் விபத்து ஓட்டுமொத்தமாக புரட்டிபோட்டது. அது அவரது நெருங்கிய நண்பரின் விபத்து.  அது முதல் அவர் நிதானமாகவும் ஒருங்கினைந்த மன நிலையில் விளையாட ஆரம்பித்தார், வெற்றி அவரிடம் குவிந்தது. தற்போதைய நிலையில் அவருக்கு 32வயது ஆகின்றது ஆகவே வருங்காலத்தில் பிட்னஸ் அவருக்கு பெரிய பிரச்சனையாக இருக்கும் என நம்பபடுகின்றது.  ஆகவேதான் இந்த விம்பிள்டன் போட்டியில் அவரது வெற்றி கடைசி முறையாக இருக்கும் எனப் பேசப்பட்ட நிலையில் அதிரடி தோல்வியை சந்தித்துள்ளார். பார்ப்போம் மீண்டு வருவாரா என்று. 

அப்பாடா நீங்களாவது அரசியல் பற்றி பேசாமல் விளையாட்டு பற்றி கேள்வி கேட்டீர்கள் புண்ணியமா போகும், ஏன்னா இங்கிருக்கிற நண்பர்கள் எல்லோரும் என்னை கோத்துவிடுனம்கிற கோதாவிலே முன்னனியிலே இருப்பதாகப் படுகின்றது.

​4. கர்நாடகாவில் காங்கிரசு ஆட்சி எப்படி? - நாகர்கோவிலிருந்து பாஜக நண்பர் 

எ​லிக்கு பயந்து புலிக்கு வாக்க பட்டு போன கதைதான் போங்க.  பாஜக பெரிய ஊழல் நிர்வாகம் புரிந்தது என காங்கிரசுவினால் குற்றம் சாட்டப்பட்டது. கர்நாடகாவைப் பொருத்தவரையில் அரசியலையும்  சுரங்க ஊழலயும் பிரிக்க முடியாது என்பேன்.  முன்பு பாஜகவைச் சார்ந்த்  ரெட்டி சகோதரர்களுக்கும் ஆந்திராவின் முந்தைய முதலமைச்சருக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாக வந்த தகவல்களையெல்லாம் பத்திரிக்கைகள் மறைத்துவிட்ட்து என்றே படுகின்றது.

​மேலும் ஆ​ட்சிக்கு வந்ததும் வராதுமாக மல்டி பிரான்ட் வணிகத்திற்கு(அதாங்க வால்ட் மார்ட்) கதவை திறந்துவிட்டுள்ளன்ர்.  

​காங்கிரசு ஆளும் 11 மாநிலங்களில் அதிகாரம் கொடுத்தாச்சு வால்ட் மார்ட்டுக்கு.  அங்கே சிறு குறு வணிகர்கள் முழிக்கற மாதிரி தமிழக வணிகர்களும் எதிர்காலத்தில் முழிக்காம இருக்கனும்னா இப்பவே அரசியல் கட்சிகளிடம் பகிரங்கமாக மேடையில் எழுதி தர சொல்லவேண்டும்  அந்நிய நிறுவனங்களை அனுமதிக்க மாட்டோம்னு அல்லது கர்நாடக வணிகர்கள் மாதிரி  தும்பை விட்டு வாலை பிடித்த கதையாக புலம்ப வேண்டி இருக்கும்.

​மேலும் முன்னாள் முதல்வர் கிருஷ்ணாவின் நிர்வாக திறமையிலேயே பெங்களுர் வளர்ந்தததா இல்லை இயல்பான மென்பொருள் வளர்ச்சியில் பெங்களூர் வளர்ந்ததா எனப் பார்த்தால் இயல்பாக வளர்ந்ததாகவே எனக்கு படுகின்றது. ஏனெனில் இப்பொழுது அவர் மத்தியில் அடிக்கும் கூத்துகள் அப்படி இல்லையில்லை அவருக்கு வயசாச்சு அதனால்தான் தடுமாறுகின்றார் எனச் சொல்லும் காங்கிரசு நண்பர்களின் கூற்றையும் புறந்தள்ள முடியாது. மற்றபடி சித்தராமையாவின் நிர்வாக திறமையினை போகப் போக உங்களுக்கே புரியும்.  எது எப்படியோ யார் அங்கு வந்தாலும் நமக்கு காவிரியில் தண்ணீர் விடப்போவதில்லை அதனாலே பீரியா விடு பீரியா விடு மாமூ காவிரிக்கு இல்லை காரண்டி...

அடுத்த தபா கீழ்வரும் கேள்விக்கு பதில்:
​வாரிசு அரசியல் குறித்து, அடிமை, சொம்பு வித்தியாசங்கள் வரையவும், நித்தி பிரச்சினை போல் ஜக்கி பிரச்ச்சினையும் வளருமா, பீகாரும் 11-12% வளர்ச்சி கண்டுள்ளது அப்படின்னா நீதிஷ் பெட்டரா மோடியை விட? அதுவரை குறிஞ்சியோடு இணைந்திருங்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக