வெள்ளி, 14 ஜூன், 2013

ஒரு ஏக்கர் நிலம்; 10 லட்சம் வருமானம்!




நெல்லுக்கு மாற்றாக பல்வேறு பயிர்களை விளைவிக்கத் தொடங்கியிருக்கும் டெல்டா விவசாயிகளுக்கு இன்னும் ஒரு மகிழ்ச்சியான செய்தியை பகிர்ந்து கொள்கிறார் தஞ்சை பாப்பாநாடைச் சேர்ந்த விவசாயி கணேசன். ஒரு ஏக்கருக்கு 10 லட்சம் ரூபாய் சம்பாதிக்கலாம் என்ற ஆச்சிரியமான செய்திதான் அது. வரிசை முறை சாகுபடி மூலம் விவசாயம் செய்தால் மட்டுமே நான் சொல்லும் இந்த வருமானம் சாத்தியம்" என்ற கணேசனின் அனுபவங்கள்...



வரிசை முறை
வரிசைமுறையில் பாகற்காய், பீர்க்கங்காய், புடலை, அவரை சாகுபடி செய்கிறேன். வரிசை முறை பந்தல் என்பது 10 அடி உயரம் கொண்டது. 3 அடிக்கு ஒரு பார் அமைத்து கம்பிகள் மூலமாக இணைத்துக் கட்ட வேண்டும். இவ்வாறு வரிசை முறையில் பந்தல் அமைக்கும்போது அந்த வரிசைப் பந்தலில் பாவை உள்ளிட்ட கொடிகள் ஏறுவது எளிதாக இருக்கிறது. மேலும் இந்த வரிசை முறையில் முக்கியமான பயன் என்னவென்றால், உயரம் செல்லச் செல்ல கொடிகளின் காய்க்கும் திறன் அதிகரிக்கும். மேலும் காய்களின் அறுவடை என்பது இந்த முறையில் மிகவும் எளிதாக இருக்கும்.

ஓர் ஆண்டில் பாகற்காய் விளையும் காலகட்டத்தில் பாகற்காய் சாகுபடி செய்யவேண்டும். பிறகு அதன் காய்ப்பு நின்றவுடன் நாம் உடனடியாக புடலை, அதன் பிறகு பீர்க்கங்காய் என மாற்றி பயிர் விதைத்துக்கொண்டே இருக்க வேண்டும்.

வரிசை முறை பந்தல் அமைக்கும்போது இடையில் நல்ல வெயில் கிடைக்கிறது. இந்த நிலப்பரப்பில் கடலை, உளுந்து, கத்திரி, மிளகாய், தக்காளி என ஏதேனும் இரண்டு செடி வகைகளை எப்போதும் மாற்றி மாற்றி பயிர் செய்து வர வேண்டும். 3 கொடிவகைகள், 2 செடி வகைகளைத் தேர்ந்தெடுத்து ஓர் ஆண்டு முழுவதும் பயிர் செய்யவேண்டும். இதன் மூலம் மூன்று ஏக்கர் நிலத்தில் கிடைக்கும் வருமானம் ஒரு ஏக்கர் நிலத்திலேயே கிடைக்கும். மேலும் பயிர்களை மாற்றி மாற்றி பயிர் செய்யும்போது மண்ணின் கனிமத்தன்மை சீராகிறது.

மேலும் வயலைச்சுற்றி தென்னை, வாழை, பலா, நெல்லி, பப்பாளி, நார்த்தை, எலுமிச்சை மரங்களை நட்டு வளர்க்கும்போது அதன் மூலமும் தொடர்ச்சியான வருமானம் வந்துகொண்டே இருக்கும்.     

பயிர்ப் பாதுகாப்பு
உரக்குழி
மாட்டு சாணம், கோமியத்தைப் போல சிறந்த இடுபொருள் எதுவுமே கிடையாது. உரக் குழிகளில் இதை சேமிப்பது எளிது. இவ்வாறு சேமிக்கும்போது அந்தக் குழியின் மீதும் பந்தல் அமைத்து கொடிகளைப் படர விடலாம். இவ்வாறு படரவிடும்போது அதன் இலை, தழைகள் விழுந்து அவைகளும் சத்தாகின்றன. எப்போது நீர் பாய்ச்சினாலும் இந்த உரக்குழி வழியாகப் பாய்ச்சும்போது பயிர்களுக்குத் தேவையான சத்து இந்த நீரிலிருந்தே கிடைக்கிறது.

மேலும் இந்தக் குழியில் நண்டு நத்தை, தவளை, மீன் போன்ற நீர்வாழ் உயிரினங்களும் வாழ்வதால் அவையும் பூச்சிக்கட்டுப்பாட்டுக்கு பெரும் பங்காற்றுகின்றன.

ஆகாயப்படை
பூச்சிக்கட்டுப்பாட்டில் முக்கியப் பங்களிக்கும் உயிரினம் செவ்வெறும்பு. இந்தச் செவ்வெறும்பு அனைத்து இடங்களுக்கும் செல்வது போல நாம் கயிறுகள் மூலமாக வழி அமைத்துத்தர வேண்டும். இவ்வாறு அமைத்துத் தரும்போது செவ்வெறும்பு அனைத்து இடங்களுக்கும் சென்று, பயிர்களுக்கு ஊறு விளைவிக்கும் பூச்சி இனங்களைத் தின்று, உழவனுக்கு நண்பனாகத் திகழ்கிறது.

தரைப்படை
கோழி, வான்கோழி, ஆடு, போன்ற உயிரினங்களை வளர்ப்பதன் மூலம் அவை நேரடியாகச் சென்று வயல்களில் மேயும்போது செடிகளுக்கு இடுபொருளும் கிடைக்கும், பூச்சிகளும் கட்டுப்படியாகும். மேலும் இந்த வரிசை முறை பந்தலை அமைக்கும்போது நிறைய பறவைகள் வந்து அமருகின்றன.  அதன் மூலமாக விதைகளும் பரவுகின்றன. பூச்சிகளும் கட்டுப்படுகின்றன.

சந்தை
அனைத்தையும் முழுக்க முழுக்க இயற்கை வழியிலேயே செய்கிறேன். செயற்கையாக எந்தப் பொருளுமே பயன் படுத்துவது இல்லை. மேலும் இந்த முறைப்படி விவசாயம் செய்யும்போது ஆள் தேவையே கிடையாது. ஒரு ஏக்கரில் விவசாயம் செய்ய வீட்டில் இருக்கும் கணவன், மனைவி மட்டுமே போதும். எனவே, எந்தவிதமான செலவுமே இல்லாமல் மொத்த லாபத்தையும் எடுக்கலாம்.

மூன்று வகை கொடிகள் மூலமாக வருடத்திற்கு 50 டன் காய்கறி கிடைக்கிறது. அதைப்போலவே இரண்டு செடி வகைகள் மூலமாக 10 டன் வரை காய்கறிகள் கிடைக்கின்றன. மேலும் மரவகைகள் மூலமாக ஆண்டு முழுவதும் வருமானம் கிடைத்துக்கொண்டே இருக்கிறது.

இவ்வாறு இயற்கையோடு இணைந்த ஒருங்கிணைந்த பண்ணையாக அமைக்கும்போது மாடு, ஆடு, கோழி மூலமும் தொடர் வருமானம் கிடைக்கிறது.

இயற்கை முறையில் விளையும் காய்கறிகள் என்பதால், சந்தையில் நல்ல வரவேற்பு இருக்கிறது. எனவே, விற்பனையைப் பொருத்தவரை எந்தச் சிக்கலும் இல்லை" என்கிறார் கணேசன்.

ஒரு குடும்பத்திற்க்கு ஒரு ஏக்கர் நிலம் இருந்தால் போதும். ஆள் செலவு, உரச் செலவு இல்லாமல் 10 லட்சம் ரூபாய் வரை சம்பாதித்தது ஓகோவென வாழலாம்" என்கிறார், இந்த முன்னோடி விவசாயி.

தொடர்புக்கு: 96266 95141

சு.வீரமணி (புதிய தலைமுறை பயிற்சி பத்திரிக்கையாளர்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக