ஞாயிறு, 9 ஜூன், 2013

கணினியே தெரியாதவர்களும் கலக்கலாம் வாருங்கள் விளையாடுவோம் … பகுதி 004

உங்களுக்குக் கொடுக்கப்படும் வேலை என்ன என்பதைத் தெளிவாகத் தெரிந்து கொண்டீர்கள் இல்லையா? ஒன்று முதல் 100 வரையில் எண்களை எழுத வேண்டும். அந்த எண்கள் எந்தவித ஒழுங்கற்கும் கட்டுப்படாதவையாக இருக்க வேண்டும். எத்தனை முறை கேட்டாலும் கிடுகிடுவென்று எழுதித்தள்ள வேண்டும். தயக்கம் இருக்கக் கூடாது. வேலை விரைவாக ஆக வேண்டும்.

உங்களிடம் கொடுக்கப்பட்டிருக்கும் இந்த வேலையை ரேண்டம் நம்பர் ஜெனரேஷன் (Random Number Generation )என்று சொல்வார்கள். இது பல்வேறு பணிகளில் பலவிதங்களில் பயன்படுத்தப்படுகிறது. விடைத்தாள்களில் இது போன்ற எண்களை மாற்று எண்களாகப் பயன்படுத்துவார்கள். ஒதுக்கீடு செய்ய வேண்டிய வேலைகளுக்கும் இது பெரிதும் உதவும்.  பத்து இடங்கள் இருக்கின்றன. ஆனால் போட்டியாளர்கள் 100 பேர் இருக்கிறார்கள் என்போம். இந்த 100 பேர்களுள் யாராவது பத்துப் பேர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டிய நிலை என்போம். அதற்குரிய எளிய வழியை நீங்களே கண்டுபிடித்துப் பயன்படுத்திக் கொள்ளலாம். இதை நீங்கள் விரைவாகப் பயன்படுத்துவதற்கு எக்ஸெலில் வழி இருக்கிறது. இதற்கு நீங்கள் எக்ஸெல் அளிக்கும் ரேண்டம் பங்ஷன் (Random Function)என்ற வசதியைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இதைச் செயல்படுத்தினால் உங்களுக்கு வேண்டிய எண்களை வெகு விரைவாக அது உருவாக்கிக் கொடுக்கும்.

எல்லை முக்கியம்
உங்களுக்குப் பல எண்கள் தேவைப்படுகின்றன. இதிலிருந்து இது வரைக்குள்ளான எல்லைக்கு உட்பட்ட எண்களை மட்டும் எடுத்துக் கொடு என்று சொல்ல வேண்டும்.  இந்த எல்லை என்பதை ரேஞ்ச் (Range) என்று வைத்துக் கொள்ளலாம். நீங்கள் எந்த எல்லைக்கு உட்பட்ட எண்களை உருவாக்க வேண்டும்? 1 முதல் 100 வரையில் உள்ள 100 எண்களுக்குள் ஏதாவது சில எண்களைத் தேர்ந்தெடுத்து மளமளவென்று எழுதிக் கொண்டே போக வேண்டும்.
இதைச் செய்வதற்கு நீங்கள் 01 முதல் 100 வரையில் உள்ள 100 எண்களை மட்டும் உங்கள் எல்லையாக வைத்துக் கொள்கிறீர்கள். ஆகவே இந்த எல்லையை எப்படி வரையறை செய்து கொள்வது என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்.

படத்தைக் கவனியுங்கள்.


அதில் Type a brief description of what you want to do and then click Go என்று இருக்கும் இடத்தில் நீங்கள் தேர்வு செய்ய வேண்டிய செயல்பாட்டைப் பற்றிய சிறு விளக்கத்தை அடிக்க வேண்டும்.
இங்கு நீங்கள் RANDBETWEEN என்பதைத்தான் தேர்வு செய்ய வேண்டி இருக்கும். எனவே அந்தப் பட்டையைத் தேர்ந்தெடுத்து ஓகே செய்யுங்கள்.
இப்போது திரையில் என்ன வருகிறது?

இதில்தான் நீங்கள் Bottom என்பதில் 01 என்ற எண்ணையும் Top என்பதில் 100 என்ற எண்ணையும் கொடுத்து ஓகே செய்ய வேண்டும். செய்யுங்கள். இப்போது எக்ஸெல் சிற்றறறைக் கட்டத்திற்குள் எண்கள் இடம் பெற்றிருக்கின்றனவா? அவை என்னென்ன எண்கள்?
65, 79,6,71,28,70,81,56, 21, 20 என்று எண்கள் இடம் பெற்றிருப்பதைக் கவனித்தீர்களா? இந்த எண்கள் 01 முதல் 100  வரையிலான எல்லைக்கு உட்பட்டவையாக இருக்கின்றனதானே?
இதே நிபந்தனைக்கு உட்பட்ட மேலும் பல எண்களை உருவாக்க வேண்டும் என்று விரும்புகிறீர்களா? வரிசையின் கடைசியில் உள்ள 20 என்ற எண் இடம் பெற்றுள்ள கட்டத்தின் மேல் சுட்டியை நிறுத்துங்கள். அதன் கீழ் முனையில் உள்ள புள்ளியின் மேல் அம்பு முனையைக் கொண்டு வாருங்கள். அம்பு முனை கூட்டல் வடிவமாக மாறுகிறதா?
இப்போது சுட்டியின் இடது பொத்தானை அழுத்தியபடி கீழே இழுங்கள். எத்தனை எண்கள் வேண்டுமானாலும் வந்து கொண்டே இருக்கும். அந்த எண்கள் எல்லாமே ஒன்று முதல் 100 என்கிற எல்லைக்கு உட்பட்டவையாகவே அமைந்திருப்பதைக் காணலாம். இதை நீங்கள் நன்றாகப் புரிந்து கொண்டீர்கள் இல்லையா? ஆகவே உங்களது திறமைகளின் வரிசையில் மேலும் ஒன்று கூடி இருக்கிறது. அதன் அடுத்த கட்டத்திற்குச் செல்வோமா?
ஒன்று முதல் ஆயிரம் வரையிலான எல்லையை நிர்ணயித்துக் கொள்ளுங்கள். இதற்குள் இடம் பெறக் கூடிய வகை, வகையான எண்களை உருவாக்குங்கள்.

206,116,348,861,908,480,738,55,210,728 என்று எண்கள் வந்து கொண்டே இருப்பதைக் கவனித்தீர்களா? இப்படி எந்த எல்லைக்குள் வேண்டுமானாலும் சிக்கி நிற்கும் எண்களை எந்த ஒழுங்கிற்கும் கட்டுப்படாமல் எழுத முடிகிறது இல்லையா?
உங்களது எண்களின் எல்லையை -25 முதல் 10 வரை என்று வைத்துக் கொள்ள முடியுமா? இதற்கு நீங்கள் சரியான விடையைச் சொல்லிவிட்டால், அதைச் செயல்படுத்த முடிந்தால் நீங்கள் இன்னொரு விளையாட்டை விளையாடுவதற்குத் தயார் ஆகலாம். நீங்கள் எண்களை மட்டுமே எக்ஸெலில் அடிக்க வேண்டும். ஆனால் நீங்கள் இடுகின்ற எண்களைப் பொருத்து உங்களுக்கு ஒரு கோட்டுருவம் கிடைக்க வேண்டும். ஸ்பைரோகிராப் என்ற சாதனத்தை வைத்துக் கொண்டு விதவிதமான வட்டங்கள், வடிவங்களை வரைந்திருப்பீர்களே.. அதை இப்போது எக்ஸெலில் செய்து காட்ட வேண்டும். முடியுமா?
விடையை விரைவில்எதிர்பாருங்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக