இன்னமும் சிலர் கிரிக்கெட் சூதாட்டத்தைப் பார்த்து கோபப்படுவதைப் பார்த்தால் பாவமாய் இருக்கிறது. ஜாம்பவான் அசாருதீனே பலியான களம் அது. ஸ்ரீசாந்த் எல்லாம் 'சப்பை'...
நாட்டில் நடக்கும் ஊழல்களையும், அதிகார சீர்கேடுகளையும், ஓட்டுப்போட்டு தேர்ந்தெடுத்து அனுப்பிய பிரதிநிதிகளின் துரோகங்களையும் பார்த்துப் பழகிவிட்ட மக்கள் ஐ.பி.எல் சூதாட்ட செய்திகள் வெளிவந்தவுடன் 'அப்படியா' என்று கேட்டுவிட்டு அன்றைய மாட்ச்சைப் பார்க்க போய்விட்டார்கள். இப்போதும் யார் யார் மாட்டுகிறார்கள் என்பதுதான் பொதுவான ஆர்வமே தவிர மற்றவர்கள் நல்லவர்கள் என்றோ, பிடிபட்டவர்கள் தண்டனைக்குள்ளாவார்கள் என்றோ யாரும் நம்பத்தயாரில்லை.
ஒரு மசாலா படத்தில் கதாநாயகன்தான் வெற்றி பெறுவான் என்பது ஆரம்பத்திலேயே தெரிந்தும் அது மக்களால் எப்படி விரும்பிப் பார்க்கப்படுகிறதோ, ஏறத்தாழ அதே மனநிலைதான் இங்கும். ஒரு அரசாங்கத்தை எதிர்த்து 2009இல் தென் ஆப்பிரிக்காவில் போட்டியை நடத்தும் அளவிற்கு துணிச்சல் கொண்ட, மத்திய அரசை வழிநடத்தும் கார்ப்பரேட்களின் ஆசீர்வாதம் கொண்ட, ஐபிஎல் அமைப்பு ஒரு புனிதமாக அமைப்பாக நிச்சயமாக இருக்கமுடியாது.
சர்வ வல்லமை கொண்டிருந்த லலித் மோடி சடாரென மண்ணைக் கவ்வியதை யாரும் மறந்திருக்கமாட்டோம். இதன் பின்னால் எவ்வளவோ மர்மக்கதைகள் ஒளிந்திருக்கும். ஆனால், நமக்கு லலித்மோடி லண்டன் சென்றதோடு விஷயம் முடிந்துபோனது.
பிசிசிஐ தலைவர் சீனுவாசன் தன் இந்தியா சிமெண்ட்ஸ் துணை அதிபராக தோனியை நியமித்துள்ளார். சீனுவாசனின் சிஎஸ்கே அணிக்கு தோனி கேப்டன். மருமகன் மெய்யப்பன் அணி உரிமையாளர். இந்தக் கட்டுரையை தட்டச்சு செய்யும் நேரத்தில் அவர் சிஎஸ்கேவில் எந்த பொறுப்பிலும் இல்லை என்று அறிவித்துவிட்டார்கள். அது உண்மை இல்லை என்று நிரூபிக்கும் ட்விட்டர் பக்கத்தின் விவரங்கள் வலம்வர ஆரம்பித்துவிட்டன.
இவர்கள் ஐபிஎல்லில் முறைகேடில் ஈடுபட்டார்களா என்பது ஒருபுறம் இருக்கட்டும், முதலில் இப்படி இருவரும் இணைந்து செயல்படுவது சரியா என்ற கேள்விக்கு பதில் உண்டா?
ஒரு பெரும் வணிகத்தில் முதலாளிகளின் முடிவுகளை கேள்விகள் கேட்கமுடியாமல் வேடிக்கை மட்டுமே பார்க்கக்கூடிய தொழிலாளிகள் போல பார்வையாளர்கள். ஒரு விளையாட்டில் தோல்வி அடைந்தால் அதிர்ச்சியில் உயிரையே இழக்கும் அளவுக்கு வெறித்தனமான ரசிகர்கள் இருக்கும்வரை விதம்விதமான வடிவங்களில் கிரிக்கெட்டை வியாபாரம் செய்து கொழிப்பார்கள் முதலாளிகள்.
இலவசமாக இணையத்தில் பார்க்கிறீர்களா அல்லது கொஞ்சம் பணம் கட்டி தொலைக்காட்சியிலா அல்லது வெறிகொண்டு வரிசையில் நின்று டிக்கெட் வாங்கி அரங்கத்தில் பார்க்கிறீர்களா... நட்டத்தின் அளவை நாம்தான் முடிவு செய்துகொள்ள வேண்டும். ஃபைனல்ஸ் ஞாயிற்றுக்கிழமை. பாக்க ரெடியா?



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக