நீண்ட நாட்களாக பார்க்க வேண்டிய படங்களின் பட்டியலில் இருந்த படம். நல்ல தரத்தில், முழு சப் டைட்டில்களோடு பார்க்கவேண்டும் என காத்திருந்தது வீண் போகவில்லை.
ஐந்து வருடங்களுக்கு முன்னால் உலகையே உலுக்கிய, இந்தியாவின் மிக முக்கிய நகரத்தின் முக்கியமான இடங்களில் நடைபெற்ற தீவிரவாதத் தாக்குதலைப் பற்றிய படம். இரண்டு,மூன்று நாட்கள் நடந்த தாக்குதலை நேரலையாக தொலைக்காட்சியில் பார்த்தாகிவிட்டது. பத்திரிக்கைகள் கதைகதையாக எழுதித் தள்ளியாயிற்று. தாக்கிய தீவிரவாதிகளில் ஒருவனும், பாகிஸ்தானை நேரடியாகக் குற்றஞ்சாற்றக்கூடிய வாய்ப்பை வழங்கக்கூடியவனுமான கசாப்பையும் தூக்கில் போட்டாயிற்று. இனி படம் வந்தால் அதில் பார்க்க என்ன இருக்கிறது என்று உட்கார்ந்தால் படம் ஆரம்பத்தில் இருந்து முடியும் வரை ஆணியடித்தாற்போல உட்காரவைத்து விட்டார் இயக்குனர் ராம்கோபால் வர்மா. ஒரே வார்த்தை... செம படம்.
மும்பை மாநகரின் கூடுதல் கமிஷனரான நானா படேகர் அன்று நடந்த சம்பவங்களின் தொகுப்பை வாக்குமூலமாக ஓர் அரசாங்கக்குழுவிடம் விளக்குவதில் படம் ஆரம்பிக்கிறது. தீவிரவாதிகள் இந்திய மோட்டார் படகொன்றை கைப்பற்றி மும்பை வந்து சேர்வது, அணிஅணியாகப் பிரிந்து கொடும் தாக்குதலை நடத்துவது, முதலில் அதிர்ச்சியடைந்து நிற்கும் காவல்துறை சுதாரித்து திருப்பித்தாக்கி கசாப்பைப் பிடிப்பது என சம்பவங்களை அடுக்கி அவனை தூக்கில் போடுவதில் முடிகிறது படம்.
உண்மைக்கு வெகு நெருக்கமாக எடுக்கப்பட்ட படம். அந்த இளம் தீவிரவாதிகள் மும்பை வந்து இறங்கும்போதே படபடப்பு ஆரம்பிக்கிறது. எப்படி துல்லியமாக திட்டமிட்டு, இரண்டிரண்டு பேராக பிரிந்து சென்று ஆங்காங்கே தாக்குதல் நடத்தினார்கள் என்று பார்க்கும்போது ரத்தம் சூடாகிறது. இந்து, முஸ்லிம், பெண்கள், குழந்தைகள் என்று எந்த வித்தியாசமும் பாராமல் 'மேக்ஸிமம் டேமேஜ் - அதிகபட்ச சேதாரம்' மட்டுமே குறி என்று ரத்தவெறியுடன் இயங்கிய அவர்களை முழுதும் தொடராமல் கசாப்பின் கதாபாத்திரத்தையே பின் தொடர்கிறது படம். தெளிவான திரைக்கதையும், நானா படேகர் என்கிற நடிப்பு ராட்சசனும் இருப்பதால் நம்மாலும் மற்ற சம்பவங்களைப் பற்றி யோசிக்காமல் படத்துடன் சுலபமாக ஒன்ற முடிகிறது.
ஒரு பப் & ரெஸ்டாரண்டில் தாக்குதல் நடத்திவிட்டு தப்பி செல்கிறார்கள் தீவிரவாதிகள். அதுதான் தாக்குதலின் ஆரம்பம். அங்கு வரும் காவல்துறை வெளியில் பதுங்கியிருந்து உள்ளே கல்லெடுத்து எறிகிறது. நம் காவல்துறையின் பலம், பயிற்சியின்மை போன்ற பல விஷயங்களை ஒரே விஷுவலில் போட்டுடைக்கிறார் இயக்குனர். அதையே இன்னொரு காட்சியில் நானா படேகர் தன் உணர்ச்சிகளை அடக்கிக்கொண்டு 'எங்களுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை' என்று பொருமும் இடம் டாப். படம் முழுவதும் நானா படேகர்தான். கோபமாகவும், ஆற்றாமையாகவும் அந்த தாக்குதலை விவரிக்கும்போது நமக்கும் அதே உணர்ச்சி. கசாப்பாக வரும் அந்த நடிகரும் நன்றாகவே நடித்திருக்கிறார். மூளை சலவை செய்யப்பட்ட அந்த இளைஞன் 'நாங்கள் இவ்வளவு செய்துவிட்டோம், உன்னால் என்ன செய்யமுடியும்' என்று கேட்கும்போதும், 'எங்களுக்கு சொர்க்கத்தில் இடம் கிடைக்கும், எங்கள் உடல் மீது நறுமணம் வீச நாங்கள் அழைத்து செல்லப்படுவோம்' என்று உணர்ச்சிவசப்பட்டு பேசும்போதும் - பின்னர் சவக்கிடங்கில் தன் கூட்டாளிகளின் சேதமடைந்த உடல்களைக் கண்டு கதறியழும்போதும் நல்ல நடிப்பு. கசாப்பை பேசவிட்டுவிட்டு அந்த சவக்கிடங்கில் 'குரானில் எத்தனை முறை ஜிகாத் என்ற வார்த்தை இருக்கிறது தெரியுமா' என்று நானா படேகர் கேட்க நிமிர்ந்து உட்கார்கிறோம். பின்வரும் வசனங்கள் நானா படேகர் 'யார்' என்று நமக்கு சொன்னாலும் இந்த விஷயம் படம் ஆரம்பிக்கும்போதே ஏதோ ஒருவிதத்தில் தெரிந்துவிடுகிறது.
கசாப் பிடிபடும் இடத்தில் அந்த காவல்துறை நபர் உயிரிழக்கும் இடம் நம்மை உலுக்கிப்போடும். பிண்ணனி இசையும் நன்றாகவே கைகொடுத்திருக்கிறது. மொத்தத்தில் நல்ல படம் பார்த்த திருப்தி. ஆனால், ஒரு விஷயம் மனதை நெருடுகிறது. 2008இல் மும்பையில் தாக்குதல் நடந்துகொண்டிருக்கும்போதே அத்வானி அங்கே செல்லும்போது கூடவே சென்றார் ராம்கோபால் வர்மா. அப்போதே அது விமர்சனத்திற்குள்ளானது. எல்லோரும் பதறிக்கொண்டிருந்த அந்த வேளையில் படம் எடுக்க விவரம் திரட்டசென்றது சரியா இயக்குனர் அவர்களே?


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக