மரக்காணத்தில் அரசுப்பேருந்துகளைஎரித்துவிட்டு, காலனி மக்களின் குடியிருப்புக்குள் புகுந்து கலவரம் செய்துவிட்டு மாமல்லபுரத்தில் மேடை போட்டு 'சிவன், பார்வதி எங்கள் சாதி' என்று சாதிவெறி ஏற்றிக்கொண்டார்கள் சில அரசியல் கோமாளிகள். இவர்கள் வெறும் கோமாளிகள் அல்ல, பதவிகளுக்காக எந்த நேரத்திலும் உயிர்பலி வாங்கக் காத்திருக்கும் ரத்தவெறி பிடித்த கோமாளிகள்.
தாழ்த்தப்படுத்தப்பட்ட மக்களை வன்முறையாளர்களாக சித்தரித்துவிட்டு, இன்று அவர்கள் வசிக்கும் குடியிருப்புக்குள் வீணாக சென்று வம்பு செய்துள்ளனர். சாதித்தலைவர்களை மேடையில் அமரவைத்து விட்டு தமிழகத்தில் சாதிக்கலவரம் வரும் என்று வன்முறை பேசியுள்ளனர். முன்னள் முதல்வரைக் கீழ்த்தரமாக ஏசியிருக்கிறார்கள். (அதுசரி, அவர் கூட்டணி பலத்துக்காக எதையும் நினைவில் வைத்துக்கொள்ளாமல் திரும்ப அவர்களிடம் செல்லும் வாய்ப்புள்ளதே...) மீண்டும் காதல் திருமணங்களுக்கெதிராக நச்சு பரப்பியிருக்கிறார்கள். குடும்பத்துக்குள்ளேயே திருமணம் செய்துகொள்ளுங்கள் என்று சொல்லாததுதான் பாக்கி.
சரி, இதையெல்லாம் படித்தால் கோபமும் சிரிப்பும் ஒருசேர வருகிறதா? இவர்களை ஓடஓட விரட்டவேண்டும் என்று தோன்றுகிறதா? ஆனால், விபரீதம் என்ன தெரியுமா? நன்கு படித்து, நல்ல வேலையில், நாடு முழுவதும் அல்லது உலகம் முழுவதும் பரவியிருக்கும் அந்த சாதி இளைஞர்கள் இப்போது சாதி விஷத்தால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். சமூக வலைத்தளங்களில் நேற்று இந்த சாதித்தலைவர்கள் பேசிய பேச்சுக்களை விமர்சனம் செய்வோரை தகாத வார்த்தைகளால் கடுமையாக திட்டிப்பேசுகிறார்கள். அதுதான் அதிர்ச்சி. இவர்கள் மெல்ல மெல்ல ஏற்றிய விஷம் எப்படி வேலை செய்கிறது பார்த்தீர்களா?
மகனுக்கு மந்திரி பதவியும், கூட இரண்டு எம்பி பதவியும் தூக்கிப்போட்டால் நாய் போல நாக்கைத்தொங்க போட்டபடி பின்னால் ஓடிவரக்கூடிய அந்தப் பெரியவர் இப்போது 'அய்யா' ஆகிவிட்டார், அவர்களுக்கு மட்டும். எந்த பெரியகட்சியும் கண்டுகொள்ளவில்லை; பத்திரிக்கைகள் வரும் பாராளுமன்றத்திற்காக ஏற்படக்கூடிய கூட்டணிகளை யூகம் செய்யும்போது கூட தங்கள் கட்சியை சேர்த்துக்கொள்ளவில்லை; என்ன சாதிவெறி ஏற்றினாலும் பெரும்பாலான மக்கள் தங்கள் அன்றாடப்பிழைப்பை நடத்துவதில்தான் இருக்கிறார்களே தவிர யாரும் கலவரம் செய்யவில்லை இதுதான் அந்தக்குடும்பத்தின் கவலை. அதற்காகத்தான் இந்த சாதி வெறி பரப்பல், காதல் திருமணங்களுக்கெதிராக வன்முறை அறைகூவல். இந்த சுயநல அரசியலை புரிந்துகொள்ளாமல் இந்த படித்த இளைஞர்கள் பலியாகிக்கொண்டிருப்பதுதான் கேடு. இதற்கு மருந்து கிடையாது. மரணம்தான் விளைவு, புத்தியின் மரணம்; பகுத்தறிவின் மரணம்; மனிதநேயத்தின் மரணம்; அன்பின் மரணம்.
எப்படியாவது தன் இன மக்களின் ஓட்டுக்களை முழுமையாகத் திருப்பி தான் அரசாங்கத்தை பிடிக்கவேண்டும். ஓட்டு சதவீதத்தை கூட்டிக்கொள்வதற்காக இன்னும் சில சாதிகளை சேர்த்துக்கொண்டார்கள். இப்போது அந்தக் கோமாளிக்கூட்டணி மாநிலம் முழுவதும் பயணம் செய்து தங்கள் புத்தியிலுள்ள நச்சை, படித்து வளரும் இளையத்தலைமுறையிடம் பரப்புகிறார்கள். ஆனால் அவர்கள் நினைப்பது 'சின்ன கொய்யா'வின் ஆயுள் இருக்கும்வரை கூட நடக்கப்போவதில்லை. தமிழகம் அனுதாப ஓட்டு கூட போடும். ஆனால் சாதி அரசியலுக்கு இதுவரை பலியானதில்லை.
சரி, என் சாதிதான் பெரிதென யாரும் சொல்லமுடியுமா? மற்றவன் எல்லாம் கீழ்சாதி என்று ஒதுக்கமுடியுமா? அப்படி இந்த உலகில் வாழமுடியுமா? முடியாது. அதனால்தான், அந்த நடைமுறை உண்மை மனதில் உறைப்பதால்தான் சாதி அரக்கன் இன்னும் பொதுமக்களிடையே வெற்றி பெற முடியவில்லை. உழைத்தால்தான் கஞ்சி என்ற உண்மையை உணர்ந்ததால்தான் உழைக்கும் வர்க்கம் இதுபோன்ற கும்பல்களை ஓரமாக ஒதுக்கி வைத்துவிட்டு தன் வேலையைப்பார்த்துக் கொண்டிருக்கிறது. சாதி என்பது சமூகத்திற்கு சமாதி எழுப்புவது என்பதைப் பகுத்துணர்ந்ததால்தான் படித்தவர்களும் எழுத்தாளர்களும் இவர்களை எள்ளி நகையாடி வருகிறார்கள். சாதித் தலைவர்களை ஒன்றிணைத்து பெரும் கூட்டணி அமைத்த திமுகவிற்குக் கிடைத்த தோல்வி நாடறியும். ஆக, இவர்கள் எப்போதும் தனிதான்.
உலக உண்மை எது தெரியுமா? கீழுள்ள புகைப்படத்தை பாருங்கள். வியாழனன்று காலை கோவையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கியிருந்தவர்களை காப்பாற்றும் முயற்சி நடந்துகொண்டிருக்கும்போது எடுக்கப்பட்ட புகைப்படம். அதன் வலது பக்கமுள்ள விளம்பர வாசகம் என்ன சொல்கிறதோ அதுதான் அருகில் நடந்துகொண்டிருக்கிறது. சாதி பேசி யாரும் முன்னேறப்போவதில்லை. புரிந்து கொள்ளுங்கள் படித்த மூடர்களே...!


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக