என்னடா
இது பஞ்ச் டயலாக் மாதிரி இருக்குன்னு பார்க்குறீங்களா... நாளைய தமிழகத்தினை வடிவமைக்கப்
போகும் இளந்தலைமுறைகளுக்கான வாய்ப்புகளை பற்றி பேசுவது இந்த கட்டுரையின் நோக்கம். பத்தாம்
வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்புகளுக்கு பிறகு அவர்கள் முன் குவிந்து கிடக்கும் வாய்ப்புகளையும்
அதனை எவ்வாறு பயன்படுத்திக் கொள்ளலாம் என்பதனை பற்றியும் விளக்கும் ஒரு சிறிய வெளிச்சத்
தொடர்.
பொங்கல் வாழ்த்துக்களுடன் தொடரினை ஆரம்பிக்கிறோம்...
பொங்கல் வாழ்த்துக்களுடன் தொடரினை ஆரம்பிக்கிறோம்...
"கற்கை நன்றே! கற்கை நன்றே!! பிச்சைப் புகினும் கற்கே நன்றே!!!" என்ற அதிவீரராமபாண்டியரின் வரிக்கேற்ப தமிழர்கள் பிச்சையெடுத்தாவது தங்கள் குழந்தைகளை நன்கு படிக்கவைத்துவிட வேண்டும் என்ற எண்ணம் கொண்டோர். அதனால்தான் தமிழகத்தில் கற்றோர் எண்ணிக்கையும், இடைநிற்றல் சராசரியும் தேசிய அளவினை விட அதிகம். தமிழகத்தில் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் ஆங்கிலேய அரசினராலும்(எ.கா: சென்னை மருத்துவக் கல்லூரி(1835), சென்னை பல்கலைக்கழகம் (18835)), கிறித்தவ மிசனரிகளாலும் (வேலூர் மருத்துவக் கல்லூரி) இன்றளவில் புகழ்பெற்ற பல கல்வி நிறுவனங்கள் துவங்கப்பட்டன. பிற்பாடு நம்மவர்களாலும், பெரும் வணிகர்களாலும்(அண்ணாமலைப் பல்கலைக்கழகம் , அழகப்பா பல்கலைக்கழகம் ) கல்வி நிறுவனங்கள் துவங்கப்பட்டு மக்களுக்கு எளிதில் கல்வி கிடைத்திட வழிவகை செய்தனர். அன்றைய பிரெஞ்சு அரசினரால் 1823ல் ஜிப்மர் மருத்துவமனை புதுச்சேரியில் நிறுவப்பட்டது.
இந்தியாவிலேயே முதன்முறையாகப் பசியோடு இருக்கும் குழந்தைகள் எப்படிப் படிப்பர் என்று அப்பொழுதைய ஆட்சியாளர்கள் சிந்தித்ததின் விளைவு 1950களில் கடைசியினில் மதிய உணவுத் திட்டம் தமிழகத்தில் அறிமுகப்படுத்தப்பட்டு பிற்கால தமிழக ஆட்சியாளர்கள் அதனை மேலும் செம்மைப்படுத்தினர். பட்டறிவும் பகுத்தறிவும் தமிழர்களைப் பார் முழுக்க பரவச் செய்ய வழிசெய்தது. இந்தியாவின் மற்றைய மாநிலங்களை விட முந்திச் செல்ல கல்வி தலையாய கடமை புரிந்தது.
கல்வி என்பது நமது சிந்தையை தெளிவுப்படுத்துவதற்கே என்றாலும்; இன்றைய உலகில் செல்வம் ஈட்டுவதை நிர்ணயம் செய்வது கல்வி என்பதால், நமது மாணாக்கர்கள் தங்கள் பள்ளிப்படிப்பை முடித்த பிறகு தொடரவிருக்கும் கல்லூரி கல்வியே அவர்களின் எதிர்கால வாழ்வினை நிர்ணயம் செய்கிறது. அந்த வகையில் மாணவர்கள் எவ்விதமான படிப்பினை தேர்ந்தெடுக்கலாம் என்பதற்கு இந்தப் புத்தகம் ஒரு சிறிய வெளிச்சத்தை பாய்ச்சும் என நம்புகிறோம். மாணவர்கள் தங்கள் பள்ளிப் படிப்பை முடித்தபிறகு பெரும்பாலும் அவரவர் சுயவிருப்ப பாடங்களையே தொடர்ந்து தேர்ந்தெடுக்க வேண்டுமென்றாலும், வேலைச் சந்தையில் குறிப்பிட்ட துறையின் கடந்த கால மற்றும் எதிர்காலத்தில் அந்த துறையின் செயல்பாட்டினை பொருத்து தேர்வு செய்வது மாணவர்களின் எதிர்கால குடும்ப பொருளாதார சூழ்நிலையை எளிதில் மேம்படுத்த உதவும். பாடங்களைத் தேர்வு செய்வதைப் போலவை சிறந்த கல்லூரிகளையும் தேர்வு செய்து படிப்பது நமது வேலை வாய்ப்பை எளிதில் உறுதி செய்யும்.
இந்தியாவில் உயர்கல்வி/பட்டக்கல்வி என்பது UGCன் கீழ்வரும். பொதுவாக பல்கலைகழக மானிய குழுவின்(UGC, University Grant Commission) பணியானது இந்தியாவினுள் பல்கலைகழகங்களை ஒருங்கிணைப்பதும் அங்கீகரிப்பதாகும். மத்திய அரசினரால் நடத்தப்படும் மத்திய பல்கலைக்கழகங்கள்(Central University, 47no), மாநில அரசினரால் மாநில பல்கலைக்கழகங்கள்(State University, தமிழகத்தில் 21no), நிகர் நிலைப் பல்கலைழகங்கள்(Deemed University,தமிழகத்தில் 28no), தனியார் பல்கலைக்கழகங்கள்(பல்கலைகழக வளாகத்திற்கு வெளியே கல்லூரி நடத்த முடியாது) மற்றும் ஐஐடி, என்ஐடி, ஐஐஎம், எய்ம்ஸ் மற்றும் ஜிப்மர் போன்ற சிறப்பான தன்னாட்சி நிறுவனங்கள் இளங்கலை(Bsc,BA,BBA, Bcom, BS, BE,BTech, MBBS), முதுகலை(Msc, MA, MBA, Mcom, Ms, ME, Mtech, MD), PGDCA மற்றும் முனைவர்(Phd) பட்டங்களை வழங்குகிறது.
மேலும் 15க்கும் மேற்பட்ட தொழில்சார் சபைகள் குறிப்பிட்ட பாடங்கள்தோறும் கூடுதலான அனுமதியை வழங்குகிறது. அவை
·
All India Council of
Technical Education (AICTE) = தொழில்நுட்பம்
·
Medical Council of
India (MCI) = மருத்துவம்
·
Indian Council for
Agricultural Research (ICAR) = விவசாயம்
·
National Council for
Teacher Education (NCTE) = ஆசிரியர் கல்வி
·
Dental Council of
India (DCI) = பல்மருத்துவம்
·
Pharmacy Council of
India (PCI) = மருந்தகம்
·
Indian Nursing
Council (INC) = செவிலியர்
·
Bar Council of India
(BCI) = சட்டம்
·
Central Council of
Homeopathy (CCH) = ஹோமியோபதி
·
Central Council for
Indian Medicine (CCIM) = இந்திய மருத்துவம்
·
Council of
Architecture = கட்டிட கலை
·
Distance Education
Council (DEC) = தொலைதூர கல்வி
·
Rehabilitation
Council = மறுவாழ்வு
·
National Council for
Rural Institutes (NCRI) = கிராமபுற நிறுவனங்கள்
·
State Councils of
Higher Education (SCHE) = மாநில உயர்கல்வி சபை
நீங்கள் தேர்ந்தெடுக்கும் கல்லூரியானது பல்கலைக்கழக மானியக் குழுவினால்(UGC, University Grant Commission) அங்கீகரிக்கப்பட்டிருக்கவேண்டும். நாம் தேர்ந்தெடுக்கும் குறிப்பிட்ட பொறியியல் படிப்பு என்றால் AICTE அல்லது மருத்துவ படிப்பு என்றால் MCI அங்கீகாரம் பெற்றிருக்கவேண்டும். மேலும் மாணவர்கள் சேர்க்கையும் குறிப்பிட்ட எண்ணிக்கையிலேயே அங்கீகரிக்கப்பட்டிருக்கும். கடந்தகாலங்களில் கல்லூரிகள் குறிப்பிட்ட பாடபிரிவுக்கு/குறைந்த எண்ணிக்கையில் அங்கீகாரம் பெற்றுவிட்டு, அங்கீகாரம் பெறாத படிப்புகள்/அதிக அளவிலான சேர்க்கைகளை நடத்தி மாணவர்களை ஏமாற்றியதுண்டு. மேலும் கல்லூரி/பல்கலைகழகத்தின் NAAC/NAB கமிட்டியினால் வழங்கப்பட்ட தகுதி வரிசை என்னவென்று பாருங்கள்.(A++, A+, A, B++, B+, B, C)
கல்லூரிகளின் உள்கட்டமைப்பு வசதிகள்(லேப் வசதி, கணினி மற்றும் வகுப்புகளின் வசதி, நூலகம், விரிவுரையாளர்களின் தகுதி) ஆகியவற்றை மாணவர்கள் நேரடியாக உறுதிசெய்யவேண்டும். கடந்த வருடங்களில் கல்லூரி வளாகத்திலேயே நேர்முகத்தேர்வில் வெற்றி பெற்றவர்களின் எண்ணிக்கை ஆகியவற்றை கருத்தில் கொள்ளவேண்டும். மேலும் இது போன்ற பல காரணிகளை அந்த கல்லூரிகளின் மாணவர்களிடமும் நேரடியாக உரையாடி தெளிவுபெறவேண்டும். இன்றைய சூழ்நிலையில் அதிக பணம் கட்டி புகழ்பெற்ற கல்லூரிகளில் பெற்றோர்கள் அவரவர் குழந்தைகளை சேர்த்துவிடுகின்றனர், செல்வாக்குமிக்க கல்லூரிகளும் அவர்களது செயல்பாட்டினை உறுதிசெய்யும் வகையில் தனியார் கம்பெனிகளை நேர்முகத்தேர்வுக்கு அழைத்து எளிதில் வாய்ப்புகளை உருவாக்குகின்றனர்; இது மற்ற கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களை பாதிக்கிறது என்ற குற்றச்சாட்டினையும் மறுப்பதற்கில்லை.
Affiliated college vs
Autonomous college: Affiliated college ஏதேனும் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டு அவர்களது கொள்கை, பாடத்திட்டம், தேர்வுமுறை அனைத்தும் பல்கலைக்கழக விதிகளின் படி நடக்கும், பட்டமும் பல்கலைகழகமே வழங்கும். ஆனால் Autonomous college(தன்னாட்சி கல்லூரி) என்பது பல்கலைக்கழகத்துடன் இணைந்திருந்தாலும், தங்களது சொந்த பாடத்திட்டம், தேர்வுமுறை, கொள்கை என தாங்களாகவே முடிவு செய்துகொள்ளலாம், பட்டமும் பல்கலைக்கழகத்தின் பெயரில் தாங்களாகவே வழங்கலாம். தொடர்ச்சியாக நன்கு செயல்படும் எவ்விதமான Affiliated colleges-ம் தன்னாட்சி கல்லூரிக்கென UGCயிடம் விண்ணப்பிக்கலாம்.
இன்றைய காலக்கட்டத்தில் பெரும்பாலான மாணவர்கள் எட்டாம் வகுப்பு ஆரம்பத்திலேயே தங்கள் எதிர்கால தேவையான படிப்பினை தேர்ந்தெடுக்க விருப்பட்டு, அதற்கு தேவையான உத்திகளில் இறங்குகின்றனர். பெற்றோர்களும் தங்கள் குழந்தைகளுக்கு உந்துதல் ஏற்படுத்துவதில் தவறேதுமில்லை, ஆனால் முண்டியடிப்பது என்பது சில மாணவர்களுக்கு அதிக மன அழுத்தத்தினை ஏற்படுத்துகிறது என்பதில் இருவேறு கருத்துக்கு இடமில்லை.
வரும்....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக