குடி குடியைக் கெடுக்கும் என்று ஏற்கனவே விகடனில் வந்த சகோதரர் பாரதிதம்பியின் கட்டுரையை மீண்டும் குறிஞ்சியின் வாயிலாக வெகுஜன மக்களுக்கு எடுத்துசெல்ல கட்டுரை வரத்தொடங்கிய ஆகத்து மாத முதல் வாரத்திலேயே நாமும் முடிவு செய்திருந்தோம். அவரது மற்ற கருத்துக்களில் நமக்கு முரண்பாடுகள் உண்டு என்றபொழுதிலும் இந்த கட்டுரையை எழுதிய அவருக்கும், விகடனாருக்கும் தனிப்பட்ட நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.
இந்தக் கட்டுரையை ஆளும் அரசாங்கத்தினையோ, இல்லை இப்பொழுது குடிக்கு எதிராக கொடி பிடிக்கும் புதிய புனிதர்களான எதிர்கட்சியினரையோ யோசிக்கவைக்க பகிரவில்லை நாம், குடிக்கிறவன் கையை பிடித்து தடுத்து நிறுத்த முடியுமா, குடியினால் யாருக்கு என்ன லாபம் நட்டம் என்று மேதாவித்தனமாக பேசிக்கொண்டிருப்பவர்களின் நெஞ்சில் எங்காவது ஈரம் ஒட்டிக்கொண்டிருக்குமாயின் இந்த தொடர் கட்டுரை அந்த ஈரத்தை வெள்ளமாக்கி குடிக்கு எதிராக மாற்றும் என்ற நம்பிக்கையுடன் பதிவிடுகிறோம். ஆம் இந்த கட்டுரையின் தாக்கம் நமக்கே ஏற்படவேண்டுமென்பதினால் பகிர்கிறோம்..
குறிஞ்சி ஏற்கனவே இது குறித்த ஆகத்து 4, 2014ல் பதிவிட்ட கட்டுரையை தவறவிட்டிருந்தால்... குடி உயர குடியைக் குறைப்போம்...
குடியினால் யாரோ எங்கோ சீரழியவில்லை, நமது உறவினர்கள், நண்பர்கள், அண்டை வீட்டாரே குறிப்பாக கீழ் மற்றும் நடுத்தர வர்க்கத்தினரே சீரழிகின்றனர். சங்ககாலம் முதல் குடி தமிழனின் தொட்டில் பழக்கம் என்ற சொத்தை வாதமெல்லாம் சரி, நான் கேட்கும் கேள்வி 90களின் கடைசி வரை நம்மில் எத்தனை பேர் குடிவிற்பனை செய்யும் கடையை பொதுமக்கள் அதிகம் புழங்கும் பேருந்து நிறுத்தம், கோவில், பள்ளிக்கூடம், முக்கிய கடைவீதிகளில் பார்த்திருக்கிறோம், ஏன் சில இடங்களில் மக்கள் வசிக்கும் வீட்டருகே கூட கடையை அமைத்து கல்லா கட்டுகின்றனர். சாராயம் வாங்க கூசி குறுகி ஒழிந்து வாங்கிய காலம் போகி இப்போழுது தைரியமாக மூக்குமுட்ட குடித்துவிட்டு பொது இடங்களில் செய்யும் அலப்பறைகள் சொல்லிமாளாது. டிஜிட்டல் ஊடகங்களில் ஆய்வாளர் முதல் பால்மணம் மாறா பச்சிளம் குழந்தைகள் குடிப்பது வரை கண்டு களிக்கிறோம். பொதுப்போக்குவரத்துக்களில் டீசல் வாடையைத்தான் கடந்தகாலங்களில் முகர்ந்திருந்தேன் இப்பொழுது வீசும் காற்றெல்லாம் குடியின் மணம். நம் சகோதரிகள் வீதியில் நடமாட அச்சப்படுகின்றனர். சரி இனி விகடனார் வாரந்தோறும் உங்களோடு பேசுவார்....
குறிப்பு: இது விழிப்புணர்வு கட்டுரையே, அரசியல் நோக்கம் யாதுமில்லை என்பதை தெளிவுபடுத்தவிரும்புகிறேன், குடி தமிழகத்தினை விட்டு விலகி ஒடவேண்டும் என்பது மட்டும் நமது விருப்பம்..

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக