செவ்வாய், 22 செப்டம்பர், 2015

நமக்கு நாமே...

ஐயா, ஸ்டாலின் அவர்கள் இரண்டு தினங்களாக நமக்கு நாமே என்ற பெயரில் கன்னியாகுமரியில் தொடங்கி சென்னை வரை மக்களை நேரடியாக சந்திக்க தொடங்கியிருப்பதனை ஆரோக்கியமான விசயமாகவே குறிஞ்சி பார்க்கின்றது. 

களம் மாறவேண்டும், ஆளுபவர்களுக்கு ஆண்டான் அடிமைகளின் உண்மை நிலை புரியவேண்டும் என்பதுவே நமது விருப்பம். குளிரூட்டப்பட்ட வாகனங்களில் இருந்துகொண்டு வெற்றுக் கையை வீசிச் செல்வதை விட வேகாத வெயிலில் காடும் மேடும் அலைந்து மக்களை அவர்தம் இருப்பிடத்திலேயே நேரடியாகச் சென்று பார்க்கும் அரசியல் மேல்நாட்டு அரசியலில் சகஜம் என்றாலும், தமிழகத்திற்கு அது புதிது.

ஆந்திராவில் கூட முன்பு ராசசேகர் ஐயாவும், கடந்த தேர்தலில் சந்திரபாபு ஐயாவும் நடைபயணம் மேற்கொண்டு மக்களை சந்தித்து ஆதரவு திரட்டியிருந்தனர்.

தற்பொழுதுதான் தமிழகத்தின் அனைத்து தரப்பு முண்ணனி அரசியல் தலைவர்களாலும் இதுபோன்ற பிரச்சாரம் எடுத்துச்செல்லப்படுகிறது.

இதனையொட்டி ஸ்டாலின் அவர்களின் நடவடிக்கைகளை இரண்டு நாட்களாக ஒரேடியாக விமர்சனம் என்ற பெயரில் முகநூலில் கிண்டலடிப்பது தேவையற்றது என்பதுவே எமது எண்ணம்.

முன்பு வைகோ அவர்கள் நடைபயணம் மூலம் மக்களை சந்தித்தபொழுது கேலி கிண்டல்களை வைத்த உடன்பிறப்புகளுக்கும் இது பொருந்தும்.

மக்களை நேரடியாகச் சந்திக்கும்பொழுது மக்களின் உற்சாகம் தலைவர்களையும் அறியாமல் தலைவர்களிடம் தொற்றிக்கொள்வது என்பது இயல்பு. அந்த வகையில் உற்சாகமிகுதியில் அவர்கள் செய்யும் சில காரியங்களை ரசித்து விட்டு,  அவர்களது பிரச்சாரத்தின் மையக் கருத்துக்களை விவாதப் பொருளாக்கலாமே, அதுவே நம்மை நேர்மறை அரசியலை நோக்கி செலுத்தும். மற்றபடி கேலி கிண்டல்கள் யாருக்கும் பயன்தராது.

குறிஞ்சியின் விருப்பம் யாதெனில் அரசியல் தலைவர்கள் அனைவரும் கோட்டை, கொத்தளங்களில் அமராமல் குடிசைகளில் அமர்ந்து ஆட்சி செய்ய எத்தனிக்கும் பொழுதே உண்மையான மக்களாட்சி வரும் என்பதாகும்.


நமக்கு நாமே பேரணியில் மக்கள் மத்தியில் ஸ்டாலின் அவர்கள்
மதுஒழிப்பு பேரணியில் வைகோ அவர்கள்

ஒடாமல் மக்கர் செய்யும் பேருந்தினை தள்ளி உதவிபுரியும் அன்புமணி அவர்கள்

மக்களாட்சியில் யாரும் யாரையும் விமர்சனம் செய்யலாம், கேள்வி எழுப்பலாம், கருத்துரிமை எல்லாருக்கும் பொது என்பது அடிப்படையாகும் என்றாலும், இருந்த எடுத்த இடத்திலிருந்து கிள்ளுக்கீரையும் கிஞ்சாத இளைஞர்கள் விமர்சனம் என்ற பெயரில் வகைதொகை இல்லாமல் பெரும்தலைவர்களை கிண்டல் செய்வது என்பது ஆரோக்கியமானச் சமூகமாற்றத்தினை ஏற்படுத்தாது. எப்படி தனிநபர் தொழுகை பயனற்றதோ அதுபோன்றதுவே வெறுப்புணர்வு அரசியலும், கேலி கிண்டல்களும் சமூகத்திற்கு பயனளிக்காது. 

குறிஞ்சியின் தனிப்பட்ட கொள்கையே மற்றவர்களை விமர்சிக்கும் முன்னர் தம்மையே சுயபரிசோதனைக்கு ஆட்படுத்திக்கொள்ளும் காந்தீய சிந்தனையொட்டியதே....

ஆக யாம் நண்பர்களிடம் முதலில் வைக்கும் விண்ணப்பம் யாதெனில் மாதமொருமுறை அல்லது குறைந்தப்பட்சம் வருடமொருமுறை யாதொரு தனிநபர் நலனுக்கும் அப்பால் சமூக சிந்தனையோடு சேவைதனை புரிவோம், பிறகு தலைவர்களை.... விமர்சிப்போம், கிண்டலும் அடிப்போம்..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக