புதன், 13 மே, 2015

நான், என் காதல், என் காதலிகள் - பகுதி 9 : போர்க்களமா? சொற்களமா?

போர்க்களமா? சொற்களமா?

திருக்குறள் ஓர் அறநூல் அல்லது ஒழுக்க நூல் என்பதாக ஒரு பொதுவான பிம்பம் தமிழ்மக்கள் மனதில் உண்டு. அறத்துப்பால் குறட்பாக்களே மீண்டும் மீண்டும் பொதுவெளியில் புழங்கிக் கொண்டிருப்பதால் ஏற்பட்ட விளைவாக இருக்கலாம். வள்ளுவருக்காகக் கற்பனையில் வரையப்பட்ட தோற்றம் அவர் பொருளைப்பற்றியும், இன்பத்தைப்பற்றியும் பேசும்போது அவ்வளவாக ஒட்டாமல் போவதாலும் இருக்கலாம்! மேலும், அறம் என்பது பழமை கூடக்கூடச் சிறந்ததாகவும், ஆனால் பொருள், இன்பம் ஆகியவற்றைக் குறித்து ஒரு பழந்தமிழ் நூல் பேசினால் அது காலாவதியாகிவிட்ட கருத்தாகவும் நாம் தவறாகப் புரிந்துகொண்டுவிட்டதும் முக்கியமான காரணங்களாக இருக்கலாம். பொருளும் இன்பமும் மேற்கத்திய கருத்தாக்கங்களில் சொல்லப்பட்டால் அது இன்றைய தேதிக்கு அதிகமாகப் பொருந்துவதுபோல் ஒரு மாயை உருவாகிவிட்டதே இதன் அடிப்படை.

ஆனால் குறட்களின் எண்ணிக்கை அடிப்படையில் பார்த்தால் கூடத் தோராயமாக 50% பொருளுக்கும், 30% அறத்துக்கும், மீதி 20% இன்பத்துப்பால் என்று சொல்லக்கூடிய களவியலுக்கும் கற்பியலுக்கும் வள்ளுவர் ஒதுக்கியிருப்பது தெரிகிறது. ஒரு குறளில் ஏழே ஏழு சீர்களுக்கு மட்டுமே இடமிருப்பதால், வார்த்தைகளையும் எந்த விஷயத்திற்கு எவ்வளவு தேவை என்பதையும் கொஞ்சம் அதீத கவனத்துடனேயே அவர் கையாண்டிருப்பார் என்று நம்புவோம். ஆகவே பொருட்பாலுக்குச் சரிபாதி ஒதுக்கி இருக்கிறார் என்ற வகையில் வள்ளுவத்தை அறநூல் அல்லது ஒழுக்கநூல் என்று எளிதாக ஒதுக்கித்தள்ள முடியாது. அதன் ஒரு பகுதியாகவே இந்தக் கட்டுரை. ஓரிரு இடங்களில் யதேச்சையாக வாசிக்க நேர்ந்த குறட்பாக்கள் இதைக் கொஞ்சம் விரிவாகச் செய்யத்தூண்டின.

'அவை அஞ்சாமை' என்ற அதிகாரத்தில் மூன்று குறட்பாக்கள் வெவ்வேறு விதமாக நாம் கற்றவற்றை, நமக்குத் தெரிந்தவற்றை  ஓர் அவையில் சொல்ல பயந்துகொண்டு அமைதியாக இருந்துவிடுவதைக் குறித்து நூலை வாளுடனும், அவையைப் போர்க்களத்துடனும், பேசுவதைப் போருடனும் ஒப்பிடுகின்றன;

பகையகத்துச் சாவார் எளியர் அரியர்
அவையகத்து அஞ்சா தவர்

வாளொடென் வன்கண்ணர் அல்லார்க்கு நூலொடென்
நுண்ணவை அஞ்சு பவர்க்கு

பகையகத்துப் பேடிகை ஒள்வாள் அவையகத்து
அஞ்சு மவன்கற்ற நூல்

முதற் குறள், போருக்குப்போய் சாவதற்கு வேண்டுமானாலும் எத்தனையோ பேர் அஞ்சாமல் எளிதாக முன்வருவர் ஆனால் கற்றவற்றை ஓர் அவையில் அஞ்சாமல் பேசுவதற்கு ஆட்கள் முன்வருவது அரிது என்கிறது. யோசித்துப் பார்க்கையில் போரில் வெற்றி பெற்றாலும், தோல்வியுற்றாலும், மரணமடைந்தாலும் தான் சார்ந்திருக்கும் பக்கத்தினரால் ஒருவர் கொண்டாடப்படுவார், புகழப்படுவார். ஆனால் அவையில் சோபிக்கவில்லை என்றால் அவமானம் மட்டுமே பரிசாகக் கிடைக்கும் என்பதே காரணம் என்று ஊகித்துக்கொள்ளலாம். போர்க்களம் அனேகமாக உள்ளே நுழைந்துவிட்ட அனைவரையுமே வீரர்களென்று ஏற்பது போல் சொற்களம் ஏற்றுவிடுவதில்லை. பின்னதில்தான் ரிஸ்க் அதிகம் என்பதை விளக்கும் குறள் அது.

இரண்டாவது குறள் மேலும் கொஞ்சம் கடுமையானது. போர் செல்ல தைரியமில்லாதவர்கள் வாள் பயின்று என்ன பயன் உண்டாகிவிடும்? அவையில் எடுத்துரைக்கத் திராணி இல்லாதவர்கள் நூல் பயின்று என்ன பிரயோஜனம்? என்ற கேள்விகளை முன்வைக்கிறது. ஒரு வகையில் நூல் பயில்வதே அவையில் தோன்றத்தானா என்ற கேள்வியை இக்குறள் விதைப்பினும் இரு முக்கிய நல்ல நோக்கங்கள் அதன் பின்னணியில் இருப்பதைக் காணமுடிகிறது; ஒன்று, 'நுண் அவை' என்ற குறிப்பின் மூலம் நூல் பயிலும்போது எவ்வளவு ஆழமாகப் பயிலவேண்டும் என்பதை வலியுறுத்துகிறது. அதாவது மேம்போக்காக இல்லாமல் நுண்ணவையில் பயமின்றிப் பேசுமளவுக்குப் பயிலுதல் முன்வைக்கப்படுகிறது. இரண்டு, அப்படி ஆழமாகக் கற்றவற்றை அவையில் விவாதித்து மேலும் மேம்படுத்திக்கொள்ளாமல் இருந்துவிடுவதையும் மறைமுகமாக இடித்துரைக்கிறது என்றும் பார்க்கலாம்.

மூன்றாவது குறளின் கருத்து போருக்கு அஞ்சிய பேடியின் கையில் வாள் இருப்பது போல் அவைக்கு அஞ்சியவர் கையில் நூல். மேற்சொன்ன குறட்பாக்களின் கருத்தை ஒட்டியதே என்றாலும் இன்னுங்கொஞ்சம் கடுமையான வார்த்தையைப் போட்டுக் கிட்டத்தட்ட திட்டுவது போல் கண்டிக்கிறது. ஒவ்வொரு அதிகாரத்திலும் இப்பொதுத் தன்மையைக் காணமுடியும். சொல்ல வந்ததை முதலில் கொஞ்சம் மென்மையாகச் சொல்ல ஆரம்பிப்பவர் பிறகு சீராகக் கடுமையேற்றிக் கடைசியில் 'இவன் இருந்தால் என்ன இறந்தால் என்ன' என்ற அளவில் முடிப்பார். இவ்வதிகாரத்திலும் 'உளரெனினும் இல்லாரொடு ஒப்பர்' உண்டு. கல்லாதவன் முகத்திலிருப்பது கண்கள் அல்ல புண்கள் என்பார், என்ன கற்றும் தெய்வத்தின் நற்றாள் தொழாமல் என்ன விளங்கும் என்பார், தெய்வத்தைத் தொழாதவள் சொன்னாலும் மழை பெய்யுமென்பார். இவற்றை முரண்களாகப் புரிந்துகொள்ளல் தகாது. கருத்தைக் கற்போர் மனதில் ஆழமாகத் தைப்பது ஒன்றுதான் இந்த உயர்வு நவிற்சிகளின் குறிக்கோள். ஒருவேளை சிரிக்கவைத்து சிந்திக்கவைத்தார் என்பதுபோல சினமூட்டிச் சிந்தனையில் தள்ளும் உத்தியாகவும் இருக்கலாம். 

குறள் வாசிப்பின் சில ருசிகளைக் காட்டிவிடவே இரு கட்டுரைகள் எழுதப்பட்டன. இரண்டாயிரம் வருடங்களாகப் பிழைத்திருக்க அதில் என்னதான் இருக்கிறது என்ற ஆர்வம் கொஞ்சம் போலத் தலைகாட்டி ஓரிரு இதுவரை கேள்விப்பட்டிராத குறட்பாக்களை அனுபவித்தாலே வாசகரைத் தன் பக்கம் இழுத்துத் தன்னில் மூழ்கடித்துக்கொள்ளும் அழகும் ஆழமும் குறளுக்கு உண்டு என்பதைச் சொல்லி இக்கட்டுரையை நிறைவு செய்துவிடுகிறேன்.

இனி இத்தொடரில் ஒவ்வொரு கட்டுரையிலும் ஒரு புத்தகத்தை விரிவாக அறிமுகம் செய்து எழுத உத்தேசம். 

மீண்டும் சந்திப்போம்.

சிவானந்தம் நீலகண்டன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக