குறிஞ்சியில் வரும் நண்பர் சிவானந்தம் அவர்களின் எழுத்தில் மற்ற கட்டுரைகளை தவறவிட்டிருந்தால்
http://kurinjinet.blogspot.in/search?q=சிவானந்தம்
வாசிப்பது எப்படி?
http://kurinjinet.blogspot.in/search?q=சிவானந்தம்
வாசிப்பது எப்படி?
இக்கட்டுரை குறிப்பிடுவது 'ஆனைக்கும் அதுதான் பூனைக்கும் அதுதான்' (one size fits all) என்று நேராய்ப்போய் இடதுபுறம் திரும்பி, நன்றாகக் காற்றோட்டமுள்ள, வெளிச்சம் விழும் இடத்தில் உட்கார்ந்து முதல்பக்கத்தைத் திறத்துகொள்ளவும்...என்று சொல்லவிழையும் 'எப்படி' அல்ல. அது அவரவர் வசதிவாய்ப்பைப் பொறுத்தது. அதன் முக்கியத்துவமும் குறைவுதான். இங்கு எழுத முயற்சிப்பது வாசிப்பில் - சடாரென புலப்பட்டுவிடாத - அனுபவத்தினாலும் கவனத்தினாலுமே உணர்ந்துகொள்ளக்கூடிய சிலவிஷயங்களை. அவற்றை முன்கூட்டியே தெரிந்துகொண்டு அதை மனதிற்கொள்ளுவதன்மூலம், 'எப்படி ' வாசிப்பது என்பது.
சுருக்கமாகப் "படைப்பூக்கம் (creativity), சிந்தனை, பயிற்சி" ஆகிய மூன்றும் வாசிப்பதற்கு அத்யாவசியம் என்பதை எடுத்துக்காட்டிவிடுவதே இக்கட்டுரையின் முக்கிய நோக்கம். இவை மூன்றும் உட்காரணிகள் (அதாவது வாசிப்பவரைச் சார்ந்தது) என்பதால் இம்முக்கியத்துவம் உண்டாகிறது. வெளிக்காரணிகளான புத்தகத்தின் பொருள், மொழி (அ) எழுதப்பட்டவிதம், பக்க எண்ணிக்கை, இன்னபிறவற்றையெல்லாம் பெரும்பாலும் வாசிப்பவர் தன் தேவைக்கேற்ப தேர்ந்தெடுத்துக்கொள்ள முடியும். இறுதியில் அவற்றைக்குறித்தும் சில ஆலோசனைகள் சொல்லப்பட்டுள்ளன.
'கைவந்த கலை' என்ற வழக்கு இன்றும் புழக்கத்திலுள்ளது. கலை கைவரவேண்டுமென்றால் படைப்பூக்கம், சிந்தனை, பயிற்சி ஆகிய அனைத்துக்குமான உழைப்பை ஓரளவுக்காவது கொடுக்க வேண்டும். இவை மூன்றும் தனித்தனி அம்சங்கள் என்றபோதிலும் ஒன்றையொன்று நிறைவுசெய்யும் இயல்புள்ளவை; பின்னிக்கொண்டுகிடப்பவை. இயன்றவரையில் பிரித்தாராய்ந்து பார்ப்போம். கலை கைவந்தபின் கிடைக்கும் அந்தரங்கமான அனுபவம் மனிதனாகப் பிறந்ததையே கொண்டாடச்செய்யும் ஒன்று.
முதலில் படைப்பூக்கத்துக்கு வருவோம்.
வாசிப்பு ஓர் எந்திரத்தனமான ஒரு செயலல்ல. மாறாக இயல்பாகவே அது மிகுந்த படைப்பூக்கம் உள்ளது. எப்படி? ஒரு வகையில் ஒரு புத்தகம் எத்தனைபேரால் வாசிக்கப்படுகிறதோ அத்தனைமுறை அது மறுபடைப்பு செய்யப்படுகிறது. அதாவது புத்தகம் ஒன்றுதான், எழுதியவர் அதே ஆள்தான் என்றாலும் வாசிப்பவரின் பயிற்சி, அதனால் ஆகிவந்த மனவிரிவின் அளவைப்பொறுத்து அந்த புத்தகத்தின் படைப்பாளியே சிந்தித்திராத கோணங்களிலெல்லாம் அதன் எல்லைகளை வாசகனின் சிந்தனை விரித்துச்செல்லமுடியும். அதேபோல் ஒரே புத்தகம் வாசகனின் வயதைப்பொறுத்து அதன்பொருளும் தாக்கமும் அடியோடு மாறிவிடுகிறது. நல்ல புத்தகங்கள் காலத்தால் அழியாமல் வாழ்ந்துவருவதற்கு பெரும்பாலும் படைப்பாளியின் மேன்மையே காரணமாகப் புரிந்துகொள்ளப்பட்டாலும் அது தலைமுறை தலைமுறையாக உயிருடன் கடந்துவருவது வாசகர்களின் ஒவ்வொரு வாசிப்பிலும் அது மீள்படைப்பு செய்யப்படுவதால்தான் என்பதை ஒதுக்கிவிடமுடியாது.
ஒரு திரைப்படத்தை அனேகமாக நூற்றுக்கு நூறுபேருமே மணிக்கணக்கில் ஒரே இடத்தில் அமர்ந்து பார்த்துவிடமுடிகிறது. ஆனால் வாசிப்பது ஆக அரிதான காரியமாக இருக்கிறது. அப்படியே முயன்றாலும் விரைவிலேயே கடினமான செயலாகத் தோன்றி கைவிடப்பட்டுவிடுகிறது. ஏன்? முக்கியமானது மேலே குறிப்பிட்ட படைப்பூக்கப் பிரச்சனைதான். காட்சிகள் திரையில் தோன்றுகையில் பார்வையாளர் அதற்கு எதிர்வினை (react) புரிந்தால் போதும். திரைப்படம் உருவாக்கப்படுவதற்கு அபாரமான படைப்பூக்கம் வேண்டும் ஆனால் அதைப்பார்ப்பதற்குத் தேவையில்லை. பார்ப்பவர் ஒரு கண்ணாடிபோலத்தான். திரை நகரும் வேகத்திற்கு மனம் நகர்ந்தாகவேண்டியிருப்பதால் எதையும் சிந்திக்கவாய்ப்பில்லை. இல்லையேல் அடுத்த காட்சியுடன் தொடர்பறுந்துபோகும். ஆனால் வாசிப்பு வாசிப்பவரை வினை (act) புரியச்சொல்கிறது. வரிகளை வாசிப்பவர் காட்சிகளாக மனத்திரையில் அவற்றை புரொஜக்ட் செய்யவேண்டியிருக்கிறது. மனத்திரையில் மெல்ல எழுந்துவரும் அக்காட்சியின் துல்லியமும், தெளிவும், வேகமும் முற்றிலும் வாசிப்பவரைச் சார்ந்தது, எழுதியவர் என்னதான் அற்புதமாக எழுதிவிட்டாலும்கூட. இது தன்னியல்பாக படைப்பூக்கம் மிகுந்த செயல். அல்லவா?
![]() |
| வாசிப்பும் மனதின் விரிவும் |
மேலும் வாசகர்கள்தான் இலக்கியங்களை, காவியங்களை அவற்றின் ஆசிரியர்கள் மனதில் நினைத்து எழுதியதற்கும் மேலான உயரங்களுக்கெல்லாம் வாசிப்பின் மூலம் எடுத்துச்செல்கிறார்கள். மகாவித்வான் மீனாக்ஷிசுந்தரம்பிள்ளை ஒரு பழம்பாடலுக்கு ஐம்பது வெவ்வேறு விளக்கங்கள்வரை கொடுத்தார் என்று அவரின் மாணாக்கர் உவேசா பதிவுசெய்திருந்ததை பெருமாள்முருகன் குறிப்பிட்டிருந்தார். அப்பாடலை எழுதியவர் ஐம்பது விதமாகப்பொருள்படும்படி எழுதவேண்டும் என்று நினைத்து எழுதியிருக்க வாய்ப்புகள் மிகவும் குறைவு. வாசிப்பவன் தன் படைப்பூக்கத்தால் படைப்புக்களி க்கும் மகத்தான பங்கு இது. தன் ஞானத்தையும் படைப்பாளியின் மேல் நன்றி கலந்த பரிசாக ஏற்றிவிடும் மகத்தான தருணம் இது.
இரண்டாவது, சிந்தனை.
இசையின் இனிமைக்கு அதில் வரும் ஒலி எந்த அளவுக்குப் பங்களிக்கிறதோ அதே அளவு அவ்வொலித்துண்டுகளினிடையே வரும் மௌனங்களும் பங்களிக்கின்றன என்று சொல்லப்படுவதுண்டு. அதேபோல் வரிகளை வாசிப்பதன் அதேயளவு - ஏன் கொஞ்சம் அதிகமாகவே - முக்கியத்துவம் 'வரிகளுக்கிடையே யோசிப்பதற்கு' உண்டு. உண்மையில் வரிகளை வாசிப்பது வெறுமே படிப்பதே. அது வாசிப்பாக மாறும் ரகசியம் அவ்வரிகளை வாசகன் சிந்தித்து, தனக்குத்தானே வாதப்பிரதிவாதங்கள் செய்துகொண்டு அது அவன் இருப்பில் நிலைகொள்ளும்போதுதான்.
வரிகளுக்கிடையே யோசிப்பதென்று சொன்னாலும் ஒவ்வொரு வரிக்கும் யோசித்தாகவேண்டியதில்லை; அது ஆய்வாளர்களின் வேலை. அனுபவிப்பவர்களின் வேலை அல்ல. ஆனால் புத்துணர் வாசிப்பாளர்கள் அவ்வப்போது சிந்தையில் தொகுத்துச் சிந்தித்துக்கொண்டே வாசிக்கும் பழக்கத்தை ஆரம்பத்திலேயே உருவாக்க முயற்சிப்பது நல்லது, அது புனைவானாலும் சரி வேறெதுவானாலும் சரி. இந்த நோக்கத்துடன் வாசிக்கத்தொடங்கினால் கொஞ்ச நாட்களிலேயே ஒரு வித்தியாசத்தை உணரலாம். அதாவது வாசிப்பு நிகழ்கையில் எழுதியவரின் அல்லது பாத்திரங்களின் உணர்ச்சிகளோடு முழுவதுமாக ஒன்றிப்போய்விடுவதும் வாசித்தபின்பு அதிலிருந்துவிலகி நின்று புறவயமாக (objectively) சிந்திப்பதும் நிகழும். மெதுவாகவோ வேகமாகவோ ஒரு வாசகனுக்கு இது நிகழ்ந்தாக வேண்டும். ஆகவே இதைக்குறித்த கவனம் அவசியம்.
இது நிகழ்வதை உணரமுடியாமல் போனால் வாசிப்பின் அளவையும் வேகத்தையும் குறைத்துக்கொண்டு ஒவ்வொரு காட்சியும் அல்லது செய்தியும் சிந்தனையில் 'உரைத்த' பிறகே அடுத்த பகுதிக்கு நகரவேண்டும். இதை அழுத்திச்சொல்வதன் காரணம் வாசிக்கவேண்டுமென்று முடிவுசெய்து ஒன்றன்பின் ஒன்றாக புத்தகங்களை வாசிக்கையில் இரண்டாவது வாசித்தது முதலாவதுடன் இணையவேண்டுமேயொழிய முதலாவதை அழித்துவிட்டு அதில் அமர்ந்துவிடக்கூடாது என்பதற்காக. அனேக வாசிப்பவர்களுக்கு இது நிகழ்கிறது. வாசித்ததை தனக்குச்சொந்தமாக ஆக்கிக்கொள்வதற்கான சிந்திப்பு நிகழாததன் பொருட்டே இப்பிரச்சனை.
இறுதியாகப் பயிற்சி.
இசைப்பயிற்சி, உடற்பயிற்சிபோல் வாசிப்பும் ஒரு பயிற்சியே. 'வாசிப்பது ஏன்?' கட்டுரையில் படிப்பதும் வாசிப்பதும் அவற்றின் நோக்கத்தின் அடிப்படையில் வேறுபடுத்திக் காட்டப்பட்டிருந்தது. பயிற்சிக்கான தேவையின் அடிப்படையிலும் ஒரு வேறுபாடு உண்டு. படிப்பதற்கும் பயிற்சி வேண்டும்தான் ஆனால் அது சைக்கிள்விடப் பழகுவதுபோன்ற ஒன்று. தட்டுத்தடுமாறி விழுந்து எழுந்து, குரங்குபெடல் போட்டு, கம்பிக்குத்தாவி, கோணிக்கோணி ஓட்டி ஒரேயொருமுறை நேராக ஓட்டிவிட்டால் தீர்ந்தது. பிறகு ஒரு பத்துவருடங்கள் கழித்து ஓட்டமுயன்றாலும் ஓட்டலாம். ஆனால் வாசிப்புக்குப்பழக இனிமேல்தான் முதல் புத்தகத்தைத் தொடப்போகிறேன் என்பவர்களுக்கு சில ஆண்டுகள் பயிற்சிதேவைப்படலாம். தினசரி அவசியமல்ல என்றாலும் இக்காலகட்டத்தில் வாரக்கணக்கில் நீண்ட இடைவெளிகள் விழாமலிருப்பது அவசியம். ஏற்கனவே கொஞ்சம் வாசிப்புள்ளவர்கள் ஓராண்டாவது தொடர்வாசிப்பைக் கைக்கொள்ளவேண்டும். எந்த படைப்பூக்கமுள்ள செயலும் ஒரு குறைந்தபட்ச உழைப்பைக்கோரத்தான் செய்யும். இதுவே வாசிப்பதைக் கடினமான விஷயமாகத் தோற்றமளிக்கவும் செய்கிறது.
புத்துணர் வாசிப்புக்கு ஆறேழு வயதுவரை ஆரம்பகால வாசிப்பவராகவும் பன்னிரு வயதுவரை இடைநிலை வாசகராகவும் வளர்ந்த நாடுகளில் வயது வரம்பு அனுமானிக்கப்பட்டுள்ளது. தோராயமாக வைத்தாலும் பத்து வயது ஒரு கட்டம், பதினைந்து வயது ஒரு கட்டம். புத்தகங்களின் கருப்பொருளும் கடினமும் அதற்குத்தகுந்த அளவில் கவனத்துடன் வடிவமைக்கப்படுகின்றன. படிப்படியான அப்பயிற்சி இல்லாத அல்லது வாய்க்காத நிலையில் ஒருவர் திடீரென random-ஆக ஒரு புத்தகத்தை வாசித்துவிட நினைப்பது குருவி தலையில் பனங்காய் வைத்த கதையாக ஆகிவிடும். அது வாசிப்பின் மீதான வெறுப்புக்கே வழிவகுக்கும். எனினும் பயப்படவோ, மனம் தளரவோ வேண்டியதில்லை. ஆரம்பத்திலேயே சுமையாகவல்லாமல் வாசிப்பைச் சுவையாக மாற்றி கைக்கொண்டால் இப்பயிற்சிக்காலம் திரில்லான, பரபரப்பான, சுகமான அனுபவமாகவே இருக்கும்.
ஓரளவுக்கு வாசிப்பு கைவந்துவிட்டதா என்று சோதித்துக்கொள்ளவும் ஓர் எளிய வழியுண்டு. ஒரு கதையையோ கட்டுரையையோ வாசித்துவிட்டு அதன் உள்ளடக்கத்தை (content) பின்புலம் (context) குலையாமல் சொந்தவார்த்தைகளில் சுருக்கமாக வெளிப்படுத்த முடிந்தால் போதும். இதைப் புறவயமாக நமக்கு நாமே எடைபோட்டுச் செய்துகொள்ளமுடியும். கம்பசூத்திரம் ஏதுமில்லை; கொஞ்சம் முயற்சி, கொஞ்சம் பயிற்சி அவ்வளவுதான். வாசிப்பு ஓரளவுக்குக் கைவந்தபின் அடுத்தபடியாக வாசித்ததன் உட்பொருள் (subtext) ஏதும் உண்டா என்று பார்க்கலாம். பிறகு தொடர்பு (correlation), பகுப்பு (analysis), தொகுப்பு (compilation) என்று மேன்மேலும் மேலெடுத்துக்கொண்டு போய்க்கொண்டே இருக்கலாம். ஒரு தாகமுள்ள வாசகன் படைப்பாளியாக உருவாகமுயலும் ஒரு வேதிவினையின் அடுத்தடுத்த படிகள் இவை. ஆச்சரியப்படும் வகையில் எந்த நிலையிலும் முழுமைகொண்டது; அந்தந்த அளவில் வாழ்க்கைக்குப் புதிய அர்த்தங்களைத் தரும் பயிற்சி இது.
கோடையில் வயலை உழுவார்கள். வேண்டாத களைச்செடிகள், புற்பூண்டுகள் உழப்படும்போது மண்பிரள்வதால் அவற்றின் வேர்கள் வானைப்பார்த்துக்கொண்டு கிடக்கும்; அப்படியே வெயிலின் உக்கிரத்தில் வாடி இறந்தும் போகும். அதைக் 'கோடைப்புழுதி அடித்தல்' என்று சொல்வதுண்டு. ஒரு சால் அடிக்கும்போது மண் கட்டிகள் கரடுமுரடாகப் பெரிதாகப் பெயரும். இரண்டாம் சால், மூன்றாம் சால் அடிக்கும்போது சன்னஞ்சன்னமாகப் புழுதிக்கு சமானமாக அம்மண்கட்டிகள் பொடிந்துவிடும். வாசிப்பில் நிகழ்வதும் அதுவேதான். ரெண்டுமூணு சால் குறுக்கும் நெடுக்குமாக ஓட்டிப்பார்த்தால் தெரிந்துவிடும், வாசிப்பும் கைவரக்கூடிய கலைதான் என்று.
சரி, வாசிப்பதன் அடிப்படை தெரிந்துவிட்டது. பிறகென்ன? கிடைத்ததை வாசிக்கத்தொடங்கவேண்டியதுதானே?. ..ம்ம்ம்...கொஞ்சம் நிதானம் வேண்டும். 'கையில் சுத்தியல் கிடைத்தவன் கண்ணுக்கு பார்ப்பதெல்லாம் ஆணியாகத்தெரியும்' என்றோர் ஆங்கிலப்பழமொழி உண்டு. அப்படி இறங்கிவிட வேண்டாம். இவ்விடத்தில்தான் வெளிக்காரணிகளை கவனிக்கவேண்டும்.
இவற்றில் தலையாயது - அதுவும் குறிப்பாக வாசிப்பின் ஆரம்பகட்டத்தில் - தனிப்பட்ட ஆர்வம், உற்சாகம் எதிலிருக்கிறதோ அதைச்சார்ந்த வாசிப்பிலிருந்து தொடங்குவதுதான். இப்பொருத்தம் (compatibility) மிக அவசியம். பள்ளிப்புத்தகங்களைத் தவிர எதுவும் வாசிக்காமலேயே வளர்ந்துவிட்டவர்கள் தற்போது வயதுவந்துவிட்டவர்களாக இருப்பினும் பயிற்சி இல்லாத காரணத்தால் வாசிப்பில் கவனச்சிதறல் அதிகமாகவும் கிரஹிக்கும் சக்தி குறைந்தும் இருக்கும். ஆகவே எல்லோரும் நன்றாக இருப்பதாகச் சொல்கிறார்களே என்று எந்த புத்தகத்தையும் தடாலடியாக வாசிக்க முயல்வது மிகத்தவறு.
ஓர் உண்மைச்சம்பவம். God created the integers என்றொரு புத்தகம், ஸ்டீபன் ஹாக்கிங் எழுதியது. இவருடைய Brief history of time-ம், The grand design-ம் ஏற்கனவே வாசித்திருந்ததால் கொஞ்சமும் யோசிக்காமல் முதலில் குறிப்பிட்ட புத்தகத்தை ஆவலுடன் கைக்காசுபோட்டு வாங்கிப் புரட்டினால் பத்திருபது பக்கங்களுக்குள்ளாகவே 'ஆசையிருக்கு தாசில் பண்ண, அழகுயிருக்கு கழுதை மேய்க்க' என்ற சொலவடை ஞாபகம் வந்தது. சொலவடையாக இல்லாமல் கொஞ்சம் கௌரவமாகப் பழமொழியாகச் சொன்னால் 'முடவன் கொம்புத்தேனுக்கு ஆசைப்பட்டது போல'. காரணம் என்ன? வாசிக்க சுவாரஸ்யமான ஆசிரியரது மற்ற இரு புத்தகங்கள் சாதாரண வாசகர்களுக்காக எழுதப்பட்டவை; ஆகவே வாசிக்கப் பொருந்தின. அதாவது கணிதமோ அறிவியலோ சராசரியாகத் தெரிந்தால்போதும் அவற்றை வாசிக்க. ஆனால் இந்த 1300+ பக்கங்கள் கொண்ட தலையணையோ மனித இனத்தின் முன்னேற்றத்துக்குத் தலைக்கற்களாக விளங்கிய கணிதக் கண்டுபிடிப்புகளை அலசி விளக்குவது. இது ஆகிற கதையா? எனவே தேர்வு முக்கியம்; இது பொருத்தத்தின் அடிப்படையில் அமையவேண்டும்.
அதே வேளையில் தேர்வின்பாற்பட்டு ஒரு நற்செய்தியும் உண்டு. ஓர் உதாரணம் ஔவையாரின் நல்வழி. நாற்பது வெண்பாக்களைக் கொண்டதால் நல்வழி நாற்பதென்றும் சொல்லப்படுவது. வாசிக்க ஆரம்பித்த புதிதில் பழந்தமிழ் இலக்கியங்களின்மீது ஓர் ஏளனமான, இவை 'காலாவதியான சரக்குகள்' என்ற எண்ணமிருந்தது. ஆகவே அவை கசந்தன. தப்பித்தவறி ஆர்வ உந்தலால் வாசிக்கமுயன்றாலும் மூளை அவற்றை உள்வாங்க மறுத்து தர்ணாவில் இறங்கியது. ஆரம்பத்தில் வாசித்துக் குப்பையென கைவிடப்பட்ட இன்னூல் பிறகு மெல்ல மெல்ல வெண்பாவிதிகளில் ஆர்வம் வந்தபிறகு ஆச்சரியப்புதையலாக மாறியது. மேலும் கொஞ்ச காலத்தில் வரலாற்றுணர்வுடன் பார்வை மாறியபோது, இது ஆயிரம் வருஷத்துக்கு முற்பட்டசங்கதி என்ற ஒற்றை நினைவே வரிவரியாக, வார்த்தை வார்த்தையாக வாசித்துப் புளகாங்கிதம் அடையவும் வைத்தது. குப்பை (என நினைத்தது) கோபுரக்கலசமானது.
நற்செய்தி இதுதான். இன்று ஒன்றை வாசிக்க இயலவில்லை என்பதோ நினைவில் இருத்த இயலவில்லை என்பதோ ஒரு பிரச்சனையே அல்ல. காலப்போக்கில் தொடர்வாசிப்பில் வெகுசாதாரணமாக விஷயங்கள் மாறிவிடும்; பலசமயங்களில் நேரெதிர் துருவங்களுக்குக்கூட. இன்று தேர்வுசெய்ததில் விலக்கப்பட்டவைகள் தானாகவந்து சேர்ந்துகொள்ளும் வாய்ப்புகள் அதிகம். வாசிப்பு வாசகனை எந்த அளவுக்கு பக்குவப்படுத்துகிறது என்பதையும் இது காட்டுகிறது. ஏனென்றால் புத்தகம் அதேதான் அல்லவா? திடீரென்று எப்படிப்பொருந்தியது? ரசவாதம் நிகழ்ந்தது யாரிடம்?
இன்னொரு முக்கிய வெளிக்காரணி புத்தகம் எப்படி அச்சிடப்பட்டுள்ளது என்பது. பொடிப்பொடி எழுத்தில், இடைவெளியே இல்லாமல், பத்திகள் என்ற ஒரு விஷயம் இருப்பது இவர்களுக்குத் தெரியுமா என்று சந்தேகம் வரக்கூடியவகையில் இருக்கும். சில நல்ல புத்தகங்களை வாங்கிவைத்தும் இந்த அற்பக்காரணத்துக்காக வாசிக்கவியலாமல் போயிருக்கின்றன. The mismeasure of man என்றொரு புத்தகம், Stephen Gould என்ற பேராசிரியர் எழுதியது. ஒரு மனிதனை, அவன் புத்திசாலித்தனத்தை IQ என்ற ஒரு ஒற்றை எண்ணுக்குள் சுருக்குவதிலுள்ள அபத்தங்களை அறிவியல்பூர்வமாக விளக்கி வாதிட்டிருக்கிறார் என்று கேள்விப்பட்டு ஆசையுடன் வாங்கியது. கடந்த நான்கு வருடங்களில் நாற்பதுமுறை கையில் எடுத்து மீண்டும் எடுத்த இடத்திலேயே வைத்ததற்கு முக்கியக்காரணம் அதன் எழுத்தின் அளவும், அச்சிடப்பட்டிருக்கும் விதமே. இன்னொரு சொந்த அனுபவம் - இதே காரணத்துக்காக - அமர்த்யாசென் எழுதி பெங்குவின் பதிப்பகம் வெளியிட்ட The argumentative indian. வாசிப்பின் ஆரம்பகட்டத்தில் இருக்கும்போது இதுமாதிரி விஷயங்களால் வாசிப்பு சுணங்கிவிடாமல் பார்த்துக்கொள்ளவதும் அவசியம்.
எல்லாம் ஓகே. வாசிக்க ரெடி. எப்படியும் நேரமும் உழைப்பும் இதற்கு செலவாகப் போவதால் (பணம் வேண்டுமென்றே விடுபட்டுள்ளது. ஆரம்ப வாசிப்பிலிருக்கும்போது தேவையுமில்லை. நூலகம் போதும். நம்மூரில் அழிந்துவரும் பொது நூலகங்களைப் பிழைக்கவைத்த புண்ணியமும் கிடைக்கும்) எது முதலில் வாசிக்கவேண்டியது? புனைவா, அபுனைவா? சாதக பாதகங்கள் என்ன? இவற்றில் ஏதாவது ஒன்றின்பக்கம் காதல் வந்து சாய்ந்துவிடுவதால் வாசகனுக்கு இழப்பேதுமுண்டா? மேலோட்டமாகப் பார்த்தால் உணர்வுபூர்வமாக வாசிக்க புனைவும், அறிவுபூர்வமாக வாசிக்க அபுனைவும் போலத் தோன்றுகிறது. இது உண்மைதானா?
அடுத்த கட்டுரையில் அலசுவோம்.
- சிவானந்தம் நீலகண்டன்



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக