வெள்ளி, 31 அக்டோபர், 2014

வைகோவும் கூட்டணி குழப்பங்களும்


 இணையத்தில் மதிமுகவினரே புலம்பும் அளவுக்கு ஆக்கிவிட்டது வைகோ-ஸ்டாலின் சந்திப்பும் அவர்களின் 'கூட்டணி மகிழ்ச்சி' அறிக்கைகளும். கொள்கைகளுக்காக வைகோவை ஆதரித்தவர்கள் கோபப்பட, வைகோ என்கிற தலைவரை மட்டுமே பின்பற்றுபவர்கள் மெளனம் காக்கின்றனர்.



  இப்போது அல்ல, செப்டம்பர் 15 அன்று நடந்த மதிமுக பூவிருந்தவல்லி மாநாடு முடிந்ததிலிருந்தே மீண்டும் திமுகவுடன் கூட்டணி என்கிற பேச்சு ஆரம்பித்துவிட்டது. சொந்தத்தொகுதியிலேயே தோற்கடிக்கும் இந்த மாக்களை வைத்துக்கொண்டு எப்படி தனியே காலம் தள்ளுவது என்கிற விரக்தியாக இருக்கலாம். பதவி ஏற்புக்கு ராஜபக்சேவுக்கு அழைப்பு விடுத்து தமிழகத்தை அவமானப்படுத்திய மோடியுடன் நிற்கமுடியாது என்கிற நிர்ப்பந்தம் காரணமாக இருக்கலாம். ஆனால் இவற்றையெல்லாம் புறம் தள்ளிவிட்டு கொள்கைகளுக்காக உறுதியாக நிற்பார் வைகோ என்கிற எதிர்பார்ப்பு பொய்யாகிவிட்டது. இருதரப்பின் எதிர்பார்ப்பு கூட்டணிதான் என்பது வெளிப்பட்டபின்பு இனி 2016-ல் வேறு முடிவு எடுத்தாலும் அது மக்களிடையே நிற்காது. மதிமுகவினருக்கு இது விரக்திக்காலம்.

    சரி, ஏன் திமுகவுடன் கூட்டணி வைக்கக்கூடாது? இன்று அல்லுசில்லு இயக்கங்கள் எல்லாம் இலங்கைத்தமிழர் நலனுக்காக குரல் கொடுத்தாலும் பல வருடங்களாக இந்த விடயத்தில் உறுதியாக நின்று, எதிலும் முதல் குரல் கொடுப்பவர் வைகோதான். அதேநேரம் ஈழ விவகாரத்திலும் 2009 தமிழினப்படுகொலை நடந்ததிலும் எதிரிகளை விட மோசமான துரோகியாக நடந்துகொண்டது திமுக. இன்றுவரை அந்தக் கட்சியின் தலை முதல் முடி வரை இலங்கையில் இலட்சக்கணக்கானோர் மாண்டதற்கு துளியும் வருத்தப்படவில்லை. அவ்வப்போது டெசோ நாடகம் மட்டும் நடந்தது. அதுவும் 'இப்போ பாரேன், தலீவர் நாளைக்கு டெசோ பத்தி பேசுவார்' என்று எந்தெந்த சூழல்களை திசைதிருப்ப திமுக தலைவர் டெசோவை பயன்படுத்தினார் என சாதாரண அரசியல் பார்வையாளனுக்கும் புரிகிற அளவுக்கு அசிங்கமாக நடந்தது. திமுக தலைவருக்கு இன்றுவரை புலிகள் அழிந்தது 'சகோதர யுத்தத்தினால்தான்'. ஏனென்றால் 'ராஜபக்ச மனம் கோணாமல்' நடந்துகொள்ளத் தெரிந்தவர் அவர். இப்படியொரு துரோகக்கட்சியுடன் வைகோ கரம் கோர்ப்பது மிச்சமிருக்கும் அவரது நல்லெண்ண சித்திரத்தை அழிக்கும் செயலாகும்.

  வைகோவுக்கு வேறு வழியில்லையா? பச்சையாக சொன்னால் இல்லை.தனியே நின்றாலும் தேசியக்கட்சியுடன் நின்றாலும் தோல்வியையே பரிசளிக்கும் மக்களுக்காக யோசிப்பதை விட என்ன செய்தாலும் கேள்வி கேட்காமல் உடனிருக்கும் கட்சிக்காரர்களைப் பற்றி யோசிக்கவேண்டுமே. கண்டிப்பாக அவருக்கு மூன்றாவது நான்காவது கட்சியாக இருக்க விருப்பமிருக்காதுதான். ஆனால் எதை நம்பி தனியே நிற்பது? திமுக கூட்டணி பற்றி கேள்வி கேட்பவர்கள் இதற்கு பதில் சொல்லமாட்டார்கள். நாம் இங்கு வைகோவை ஆதரிக்கவில்லை. இருபுறமும் இருப்பவர்களின் மனநிலையே எடுத்துரைக்கப்படுகிறது.

  ஆக வைகோ பக்கம் சொந்த நியாயங்கள் இருந்தாலும் துரோகி திமுகவுடன் கைகோர்ப்பது கட்சியின் எதிர்காலத்தை குழிதோண்டி புதைப்பதற்கான ஆரம்பகட்டமாகவே தெரிகிறது. இணைய மதிமுக நண்பர்கள் பல விளக்கங்கள் வைத்திருக்கலாம். ஆனால் அவர்கள் நினைவில் வைக்கவேண்டியது அதிமுக முன்னே நின்று அவமானப்படுத்தியது, திமுக முதுகுக்குப் பின்னே நின்று அவமானப்படுத்தும். பழி சுமக்க தயாராவீர் மறுமலர்ச்சிக் கழகத்தினரே!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக