வெளிப்படையாக ஒப்புக்கொள்ள தயங்கினாலும் சென்னைவாசிகள் இந்நேரம் முகலிவாக்கம் சம்பவத்தில் இருந்து வெளியில் வந்திருப்பார்கள். உயர்ந்துகொண்டே இருக்கும் மொத்த பலி எண்ணிக்கையும், அவ்வப்போது வெளிவரும் 'அதிசயமாக உயிர் பிழைத்த' சம்பவங்களும்தான் சுவாரசியமான பேசுபொருளாக இருக்கும்.
உண்மையான அபாயம்:
இதுவரை ஏரிகளையும், குளங்களையும் வளைத்து வளைத்து குடியிருப்பு பகுதிகளாக்கியதன் அதிகபட்ச அபாயம் மழைக்காலங்களில் வெள்ளம் புகுவதாக மட்டுமே இருந்தது. இப்போதுதான் அதன் உண்மையான அபாய எல்லை என்ன என்பது மக்களுக்கு தெரிந்துள்ளது. இதுவரை சுமார் 50 பேர் பலி; இன்னும் 30 முதல் 40 பேர் வரை சிக்கியிருக்கலாம் என்பது இந்த கட்டுரை அடிக்கும்போதுவரை உள்ள கடைசிகட்ட செய்தி. இது ஒரு குறைந்தபட்ச ஊகமாக இருக்கமுடியும் என்பதுவே பரவலான கருத்து. சனிக்கிழமை மாலை பெரும்பாலான கட்டிடத்தொழிலாளர்கள் சம்பளம் வாங்கிகொண்டிருந்தனர்; சம்பளம் வாங்கிவிட்டவர்களும் மழை காரணமாக அங்கேயே ஒதுங்கியிருந்தனர்; பெரும்பாலான வெளிமாநிலத்தொழிலாளர்கள் அங்கேயே தங்கியிருந்தனர் போன்ற விஷயங்கள் உண்மையான உயிரிழப்பின் எண்ணிக்கை பற்றிய அச்சத்தை அதிகரிக்கின்றன. வழக்கம்போல அரசு இயந்திரம் இப்போதுதான் தூக்கத்திலிருந்து எழுந்து 'நடவடிக்கை' எடுக்க ஆரம்பித்துள்ளது.
குற்றவாளிகள்:
இந்த சம்பவத்தில் உண்மையான குற்றவாளிகள் யார்? 'ரமணா' படத்தில் வருவது போல ஏரி/கால்வாய் ஓரமாக கட்டிடம் கட்ட அனுமதி அளித்தவர்கள் முதல் மண் பரிசோதனை செய்தவர்கள், அந்த பகுதியிலேயே இதுவரை யாரும் கட்டாத 11 மாடிக் கட்டிடத்திற்கு அனுமதி அளித்தவர்கள், கட்டும்போது வந்து சோதனை செய்யாத சிஎம்டிஏ அதிகாரிகள் என சம்பந்தப்பட்ட அரசு அலுவலர்கள் அனைவரும் குற்றவாளிகளே... அதன்பிறகு 'இடி விழுந்தது' என ஏளனம் பேசிய அந்த கட்டிடத்தின் உரிமையாளர்கள், ஒப்பந்ததாரர்கள் என அவர்களும். ஆனால் எந்த விதத்திலும் தன் ஈகோ பாதிக்கப்படக்கூடாது என எண்ணும் ஜெயலலிதா 'கட்டிடம் கட்ட அனுமதி வழங்கியதில் எந்த தவறும் இல்லை' என ஒரே வரியில் அனைத்து அரசு அலுவலர்களையும் காப்பாற்றிவிட்டார். மிச்சமுள்ள குற்றவாளிகளிடம் பேரம் நடந்துகொண்டிருக்கும். அப்பாவி அல்லது குற்றத்தில் மிகச்சிறு பங்குடைய பொறியாளர்கள் கடைசியில் பலிகடா ஆக்கப்படுவார்கள். படிப்பவர்களை நம்பிக்கையிழக்கச்செய்வதற்காக அல்ல, நிஜமாகவே உண்மையான பெரும் குற்றவாளிகள் இதில் தண்டனை பெறப்போவதில்லை. உங்கள் முன் கண்கட்டுவித்தை மட்டுமே நடக்கப்போகிறது...
பாதிக்கப்பட்டவர்கள்:
உயிரிழந்தவர்கள் மட்டுமா பாதிக்கப்பட்டவர்கள்? அந்தக் கட்டிடத்தில் குடியேற பணம் கொடுத்தவர்கள், சீல் வைக்கப்பட்ட பக்கத்து கட்டிடத்திற்கும் பதிவு செய்து பணம் கொடுத்தவர்கள், இந்தக் கட்டிடம் இடிந்த பாதிப்பில் சேதமான சுற்றிலுமுள்ள குடியிருப்புகளைச் சேர்ந்தவர்கள், காயத்தால் நிரந்தர ஊனமடைந்து எதிர்காலம் கேள்விக்குறியானவர்கள்... எத்தனை எத்தனை பேர்... இவர்கள் எடுக்கவேண்டிய போராட்டங்கள் பெரிது. ஊடகங்கள் மெல்ல மெல்ல இந்த சம்பவத்தை மறந்தபின் அல்லது மறைத்தபின், மக்கள் திரும்ப இன்னொரு பில்டருக்கு இன்னொரு ஏரிக்கரையோர அடுக்குமாடி குடியிருப்புக்கு பணம் கொடுக்க ஆரம்பித்தபின், மாநில அரசு இன்னொரு மலிவுவிலை திட்டத்தை ஆரம்பித்து விவாதங்களுக்கு பிள்ளையார் சுழி போட்டபின்னும் இவர்கள் போராட்டம் நீண்டுகொண்டிருக்கும்.
ஊடகங்கள்:
இந்த சம்பவத்தில் ஊடக தர்மம் பட்டவர்த்தனமாக பல்லிளித்தது. ஒரு விளம்பரப்பலகை போதும் ஊடகங்களுக்கு, அந்தக் கட்டிடத்தின் ஜாதகத்தையே கொண்டுவர... ஆனால் கடைசிவரை நில உரிமையாளர் யார், கட்டிடம் கட்டுவது யார், 'இடி விழுந்ததால்தான் கட்டிடம் நொறுங்கியது' என்று தெனாவட்டாக பேசிய பாலகுரு யார் என பல விவரங்களை அப்பாவியாக பொது மக்களுடன் சேர்ந்து தாங்களும் தேடிக்கொண்டிருந்தனர். சென்னையில் நடந்த இந்த மிகப்பெரிய விஷயத்தை எப்படியெல்லாமோ அலசலாம். ஜூவியை படிப்பவர்களுக்கு நன்றாகத்தெரியும். ஆனால் அட்டைப்படத்தில் உப்புப்பெறாத நடராசன் - ஹூசைனி விவகாரத்தை போட்டு வாசகர்களுக்கு அதிர்ச்சி அளித்தது ஜூவி. அப்போதே தெரிந்துவிட்டது ஊடகங்கள் இந்த விஷயத்தில் எப்படி செயல்படும் என்று...
இன்று முதல் சிஎம்டிஏ சென்னை முழுவதும் நூற்றுக்கணக்கான கட்டிடங்களை ஆய்வு செய்யப்போகிறதாம். இவர்கள் ஏதாவது கட்டிடத்தை சீல் வைப்பார்கள், கட்டிட உரிமையாளர்கள் நீதிமன்றம் சென்று தடையுத்தரவு வாங்குவார்கள். தி.நகரில் விதிமுறை மீறிக் கட்டப்பட்ட கட்டிடங்கள் என்ன ஆயிற்று? யாருக்காவது தெரியுமா? இப்படி எல்லா விஷயத்திலும் ஏமாற்றப்பட்டது சாட்சாத் பொதுஜனம் தான். நேர்மையாக சொல்லப்போனால் இனி மக்கள்தான் தாங்கள் வாங்கும் வீட்டைப்பற்றி ஆராயவேண்டுமே தவிர நடந்த விபத்திற்கோ இனி நடக்கப்போகும் விபத்துக்களுக்கோ அரசு எந்தவித செங்கலையும் நகர்த்த முயற்சி செய்யாது என்பது அப்பட்டமான, கசப்பான உண்மை.
இதுவரை பல உயிர்களை மிகச்சிரமப்பட்டு மீட்டுக்கொடுத்த, இன்னும் இரவுபகல் பாராமல் மீட்புப்பணியில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் தேசியப்பேரிடர் மேலாண்மைக்குழு, தீயணைப்புத் துறையினர், காவல்துறையினர் அனைவருக்கும் குறிஞ்சியின் மனமார்ந்த நன்றிகள்.






கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக