ஞாயிறு, 20 ஜூலை, 2014

மோசடி செய்யலாமா ​மோடி சர்க்கார் ?


அ​ன்னிய முதலீடு என்பதே மோசடி, இந்திய தேசத்தில் அனைத்து வளமும் உண்டு என்று பழங்கதையெல்லாம் ​விட விரும்பவில்லை; ஆயினும் அது உண்மைதான் என்பேன். முதலில் அன்னிய முதலீட்டினால் நன்மைதான் விளையுமா?

​கிராமங்களிலே குத்தகை எடுத்தவர்களை குறிப்பிடும்பொழுது வெள்ளாமை பண்ணியவன் விரலா சூப்புவான் என்பார்கள். அதுபோல்தான் அந்நிய முதலீடும், லாபம் வரும் வரையே இந்தியாவில் தங்களது முதலீட்டினை விட்டுவைப்பர். லாபம் வராதபொழுது அனைத்து முதலீட்டினையும் வாரிசுருட்டி எடுத்து சென்றுவிடுவர். இது இந்த அரசுக்கும் தெரியாமல் இருக்காது. குறுகிய காலத்தில் நிறைய வளர்ச்சி காட்டலாம் என்பது அந்நிய முதலீட்டை வரவேற்பதற்கான ஒரு காரணமாக இருக்கக்கூடும். ஆனால் ஒருநாள் லாபம் இல்லாமல் வெளிநாட்டுக்காரன் ஓடிவிட்டால்நாம் திரும்ப இன்னொரு வெளிநாட்டுக்கையை அல்லவா எதிர்பார்க்க நேரிடும். நீண்டகாலம் எடுத்துக்கொண்டாலும் உள்ளூர் முதலீடு கையை விட்டுப்போகுமா?




காப்பீடு துறையில் அந்நிய முதலீடு:

எனக்கு குறிப்பாக காப்பீடு துறையில் அந்நிய முதலீட்டினை வரவேற்பது என்பது நகைச்சுவையாக தெரிகிறது. ஒரு காப்பிட்டு அலுவலகம் அமைக்க என்ன  தேவை கோடிகோடியாக பணம் தேவையா? இல்லை அப்புறம் எட்டுக்கு எட்டில் ஒரு அறை அதில் ஒரு மேசை இரண்டு நாற்காலி இருந்தால் போதாது. ​பின்பு ஏன் இப்படி?

LIC எல்லாருடைய கண்ணையும் உறுத்துகிறது என்று புரிகிறது. இங்குள்ள பொதுத்துறை வங்கிகள் ஏற்கனவே காப்பீடு சேவையை வழங்கிகொண்டுதான் உள்ளது. வேண்டுமானால் அதை மேலும் தீவிரப்படுத்தலாமே ஒழிய மடத்தனமாய் எதுவும் செய்யாமலிருக்கலாமென்பேன்.

இன்றைய நிலையில் எ​த்தனை தனியார் தனியார் காப்பீடு நிறுவனங்கள் ஒழுங்காக நமது Claim-களை நமக்கு நேர்மையுடன் திருப்பி செலுத்துகிறது. இந்த நிலையில் இந்த துறையில் அந்நிய நாட்டவர் வந்தால் அவர்கள் பணத்தினை வாரி சுருட்டி ஒடிவிட்டால் என்ன பண்ண முடியும். ​மேலும் தனியார் காப்பிட்டு நிறுவனங்களின் பாலிசிகளில் நிர்வாக கட்டணங்களும், ஏஜென்ட் கமிசன்களும் அதிகம் என்பதே பொதுவான கருத்து. ஒப்பீட்டு பாருங்கள் உண்மை புரியும்.

ராணுவத்தில் அந்நிய முதலீடு:

1970​களில் பாகிஸ்தான் போரின் போது ராணுவத்திற்கு எரிபொருள் சப்ளை பண்ண மறுத்ததாலே, அன்றைய பிரதமர் இந்திராகாந்தி அனைத்து தனியார் எண்ணெய் நிறுவனங்களையும் பொதுத்துறை நிறுவனமாக்கினார்.

இ​ந்த நிலையில் ராணுவத்தில் அந்நிய முதலீடு என்பது ஆபத்தாய் போய் முடியும்.  ​சாதாரண நிலையில் எல்லாமே நன்கு போகும் ஆனால் போர் என்று வந்துவிட்டால் நமது ராணுவ தளவாடங்களுக்கு இவர்கள் அதிக விலை வைக்கலாம்; இல்லையெனில் சப்ளை செய்ய மறுக்கலாம் அல்லது நமது எதிர்தரப்புக்கும் இதைப் போன்ற தளவாடங்களை அளிக்கலாம்.

இ​ப்போதைய ராணுவ பொதுத்துறை நிறுவனங்கள் சோம்பேறியாய் உள்ளது என்பதினால் மேலும் சில போட்டி பொதுத்துறை நிறுவனங்களை இந்திய தனியார் முதலாளிகளின் கூட்டணியுடன் ஆரம்பித்து இங்கு போட்டித்தன்மையை உருவாக்கவேண்டும். அதைவிட்டு விட்டு அந்நிய முதலீடு என்பது ஆபத்து.



இ​தற்கெல்லாம் மோடி பதில் வைத்துள்ளாரா பார்க்காலாம்?


ஆனால் நம்மிடையே பதில் உள்ளது, அதை பார்க்கும் போது உங்களுக்கு நகைச்சுவையாய் தெரியலாம் ஆனால் சாத்தியமே.

சீரிய சிந்தனையும் காட்சிக் கனவும், பல்துறை ஞானமும் மூன்று பேருக்கு அவசியம் என்பேன். முதலாமவர் ஆசிரியர் ஏனெனில் ஒரு சமூதாயத்தினை கட்டி எழுப்பவர் அவரே; இரண்டாமவர் பத்திரிக்கையாளர் ஏனெனில் சமூகத்தின் நல்லதை தட்டிக்கொடுத்தும் அநியாயத்தை தட்டிக்கேட்பவரும் அவரே; மூன்றாமவர் தலைவன் அவரே சமூகத்தினை அடுத்த இடத்திற்கு எடுத்து செல்பவர்.  

அதிகாரிகள் சொல்வதை அமல்படுத்துவது எவ்வளவு அவசியமோ அவ்வளவு அவசியம் சுயமுனைப்பும்.  ஆட்சியாளர்கள் இந்த தேசத்தின் தேவை என்ன என்று அறிந்திருக்கவேண்டும். ஏனெனில் நாளை ஐந்து வருடங்களுக்கு பிறகு அவர்களே மக்களை சந்திக்கப்போகிறார்கள் அதிகாரிகள் அல்லவே.  ஆக திட்டங்கள் என்னைப் பொருத்தவரையில் க்களின் தேவைகளுக்கெற்ப ஆட்சியாளர்களின் சிந்தனையில் உதிக்கவேண்டும். அதை எப்படி அமல்படுத்துவது என்பதை வேண்டுமானால் அதிகாரிகள் துணை கொண்டு நிறைவேற்றலாம்.  

நான் அறிந்தவரையில் இந்திய ​வரலாற்றின் கரையில் சில தலைவன்களை குறிப்பிடுவேன் சிந்தனைகளும் கனவுகளும் கொண்டவர்கள் என்று. கரிகால் சோழன், ராஜராஜ சோழன், முகமது பின் துக்ளக் (அவர் காமெடியாகிப் போன கதை வேறு), அக்பர், காமராசர் அந்த வரிசையில் சமகாலத்தலைவர்கள் எவரையும் என்னால் காண இயலவில்லை பார்ப்போம் வருங்காலத்தில் அப்படி யாரும் தோன்றுகிறார்களா...

அ​ந்நிய முதலீடு என்பதே அவசியமற்றது. இந்தியர்களிடையே குறைந்தபட்சம் ஐம்பதுலட்சம் கோடி வரை முதலீட்டினை பெறலாம். இங்கு குறிப்பிடத்தக்கது அனைத்தும் வெள்ளைப் பணமே.

ஆம் வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்களில் குறைந்தபட்சம் இருபது லட்சம் பேரிடம் சுமார் ஒருகோடி தொகையினை நீண்டகால தவணையில் குறைந்தபட்சம் பதினைந்து ஆண்டுகள் டெபாசிட் செய்ய சொல்லலாம். அவர்களுக்கு குறைந்தபட்சம் பதினைந்து சதவீதம் வட்டி அளிக்கலாம். மோதிஜி சந்தோசப்பட்டால் டிவிடன்ட் போன்ற கூடுதல் சலுகைகளும் அளிக்கலாம்.

மேலும் உள்நாட்டில் இன்றைய அரசு மற்றும் கார்ப்பரேட் நிறுவன உழியர்களிடமும், சுயதொழில் முனைவோர் மற்றும் தனியார் முதலாளிகள் இவர்களிடம் மீதமுள்ள 30லட்சம் கோடியையும் பெறலாம். இ​து சாத்தியமே.

இப்பொழுது அந்நிய நாட்டு நிறுவனங்களுக்கு எவ்வளவு சலுகைகள், சகாயங்கள் என்பதை பாருங்கள் நான் சொல்ல வருவது சாத்தியமே. 

இது குறித்து ஏற்கனவே விகடனில் வந்த கட்டுரையில் ஒரு பகுதியை பகிர்கிறேன்.

முதலீட்டைவிட 10 மடங்கு அதிக சலுகைகள்!
2005-ல் அ.தி.மு.க ஆட்சியில் நோக்கியா தொழிற்சாலை அமைக்க ஒப்பந்தம் கையெழுத்தானது. பிறகு வந்த தி.மு.க ஆட்சியும் நோக்கியாவை ஆதரித்து வரிச் சலுகைகளை வாரி வழங்கியது.

சிப்காட்டுக்குச் சொந்தமான 210 ஏக்கர் நிலம், ஒரு ஏக்கர் 4.5 லட்சம் என்ற கணக்கில் 99 வருட குத்தகைக்கு நோக்கியாவுக்கு வழங்கப்பட்டது. இதில் சிப்காட்டுக்கு ஏற்பட்ட இழப்பு 7.4 கோடி ரூபாய். பத்திரப் பதிவுக் கட்டணம் கிடையாது. நோக்கியா நிறுவனம், தன் தேவைக்குப் போக மீதமுள்ள இடத்தை பிற நிறுவனங்களுக்குக் குத்தகைக்கு விட்டுக்கொள்ளலாம். மாநிலமே மின்வெட்டில் புழுங்கினாலும் நோக்கியாவுக்குத் தடையில்லா மின்சாரம் உறுதி. தொழிற்சாலைக்குத் தேவையான மின்சார விநியோகத்துக்காக, ஆலையின் உள்ளே அரசு செலவில் ஒரு துணை மின் நிலையம் அமைத்துத் தரப்பட்டது. நோக்கியா, தன் சொந்த செலவில் மற்றொரு துணை மின் நிலையத்தை அமைத்துக்கொண்டது. அதன் செலவில் 50 சதவிகிதத்தை அரசே தந்தது. அதில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை நோக்கியா விற்பனை செய்துகொள்ளலாம். அதன் மீது வரி கிடையாது. நோக்கியா சிறப்புப் பொருளாதார மண்டலத்தில் இருந்து, தேசிய நெடுஞ்சாலையை இணைக்கும் சாலை வசதி, அரசு செலவில் செய்து தரப்பட்டது.

வாட் வரியாகவும், விற்பனை வரியாகவும் மத்திய, மாநில அரசுகளுக்கு ஆண்டுதோறும் நோக்கியா எவ்வளவு செலுத்துகிறதோ, அந்தத் தொகையை மாநில அரசு திருப்பித் தந்துவிடும். இந்த வகையில் 2005 தொடங்கி 2011-ம் ஆண்டு வரை நோக்கியாவுக்கு, தமிழக அரசு கொடுத்த தொகை சுமார் 850 கோடி ரூபாய். நோக்கியா ஒரு சிறப்புப் பொருளாதார மண்டலம் என்பதால், சுங்க வரி, உற்பத்தி வரி ஆகியவை கிடையாது. இந்த வகையில் 2005-06 மற்றும் 2006-07 ஆகிய இரு ஆண்டுகளில் மட்டும் நோக்கியா பெற்ற வரிச் சலுகை 681 கோடி ரூபாய். நோக்கியாவுக்கு 20 சதவிகித வருமான வரியும் கிடையாது. இதனால் ஆண்டுதோறும் மத்திய அரசுக்கு ஏற்படும் இழப்பு சுமார் 700 கோடி ரூபாய். எட்டு ஆண்டுகளுக்குக் கணக்கிட்டால் இந்தத் தொகை மட்டும் 5,600 கோடி ரூபாய். இப்படியாக நோக்கியா பெற்றுள்ள மொத்த வரிச் சலுகையின் மதிப்பு, எப்படியும் 10 ஆயிரம் கோடி ரூபாய் வரும். ஆனால், நோக்கியாவின் முதலீடு வெறும் 1,125 கோடி ரூபாய் மட்டுமே. முதலீட்டைவிட 10 மடங்குத் தொகையை வரிச் சலுகைகளாக மட்டுமே பெற்றுள்ளது நோக்கியா. முக்கியமாக, இந்த அனைத்து வரிச் சலுகைகளும், நோக்கியாவுக்கான உதிரி பாகங்களை தயாரித்து வழங்கும் அதன் துணை நிறுவனங்களுக்கும் வழங்கப்பட்டுள்ளன.  

தனது உற்பத்தியின் மூலம் நோக்கியா ஈட்டிய லாபம், தனிக் கணக்கு. ஒரு மாதத்துக்கு 1.3 கோடி செல்போன்கள் வீதம் தயாரித்து, 75 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்தது நோக்கியா. இதன் மூலம் 2006-2013 காலகட்டத்தில் ஈட்டிய மொத்த வருமானம் சுமார் 1.5 லட்சம் கோடி ரூபாய். இதில் 20 சதவிகிதம் லாபம் எனக்கொண்டால், 30 ஆயிரம் கோடி ரூபாய் வருகிறது. இப்படி... வரிச் சலுகையாகவும் லாபமாகவும் பல்லாயிரம் கோடியை அள்ளிக்கொண்ட நோக்கியா, தன் தொழிலாளர்களுக்கு வழங்கிய ஊதியம் சொற்பத்திலும் சொற்பம்!

எ​ட்டாயிரம் பேருக்கு பத்தாயிரம் சம்பளம் என்று வைத்தாலே வருடத்துக்கு 96கோடி பத்து வருடங்களுக்கு 960கோடியை கொடுத்துள்ளனர். க நமது வரிப்பணமும் வளமும் வீண்.

பின்லாந்து நாட்டைச் சேர்ந்த நோக்கியா நிறுவனம், தன் செல்போன்களில் பயன்படுத்தும் மென்பொருளுக்கான ராயல்ட்டி தொகையை, தன் தாய் நிறுவனத்துக்கு செலுத்தி வருகிறது. அந்த வகையில் நோக்கியாவின் இந்தியத் தொழிற்சாலையில் பயன்படுத்தப்பட்ட மென்பொருளுக்கான ராயல்ட்டி தொகையாக, 2005-ம் ஆண்டில் இருந்து இதுவரை சுமார் 20,000 கோடி ரூபாய் பின்லாந்துக்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்தப் பணத்துக்கு டீ.டி.எஸ் பிடித்தம் செய்து, இந்திய வருமான வரித் துறைக்குச் செலுத்த வேண்டும். அதை நோக்கியா செலுத்தவில்லை. அந்தத் தொகை அபராதம், வட்டி என அதிகரித்து 21,153 கோடியாக உயர்ந்துள்ளது. நோட்டீஸ் அனுப்பியும் கட்டவில்லை என்பதால், டெல்லி உயர் நீதிமன்றத்தில் வருமான வரித் துறை வழக்குத் தொடர்ந்தது. அதைத் தொடர்ந்து நோக்கியாவின் சொத்துக்கள் முடக்கப்பட்டன. இது மத்திய அரசுடன் உள்ள வழக்கு.

தமிழக அரசுடன் மற்றொரு வழக்கு உள்ளது. புரிந்துணர்வு ஒப்பந்தப்படி, சென்னை நோக்கியாவில் உற்பத்திச் செய்யப்படும் செல்போன்களில் 50 சதவிகிதத்தை ஏற்றுமதி செய்ய வேண்டும். அப்படி ஏற்றுமதி செய்வதாகச் சொல்லித்தான் வரிச் சலுகைகளைப் பெற்றுவந்தது நோக்கியா. ஆனால், 80 சதவிகித செல்போன்கள் உள்நாட்டிலேயே விற்கப்பட்டிருப்பதாக சொன்ன தமிழக அரசு, இந்த வகையில் மாநில அரசுக்கு 2,400 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டிருப்பதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது. நீதிமன்றம், 'மொத்த வரியின் 10 சதவிகிதமான 240 கோடியை வைப்பு நிதியாகச் செலுத்த வேண்டும்’ என இடைக்கால உத்தரவு பிறப்பித்தது. இந்தத் தொகையையும் செலுத்த முடியாது என இப்போது நோக்கியா தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.  

நோக்கியா மட்டுமல்ல... இந்திய அரசு பெருமைப்பட்டுக்கொள்ளும் பெரும்பாலான வெளிநாட்டு நிறுவனங்கள், கடைசியில் கடும் வரி ஏய்ப்பில்தான் ஈடுபடுகின்றன. வோடஃபோன் நிறுவனத்தின் 11,000 கோடி வரி ஏய்ப்பு பிரச்னை, நாடு தழுவிய அளவில் பேசப்பட்டது. ஷெல், கூகுள் ஆகியவை மீதும் வரி மோசடி சர்ச்சைகள் உள்ளன. 2005-06வது நிதி ஆண்டில் இந்தியாவில் செயல்பட்ட 1,915 பன்னாட்டு நிறுவனங்களில் 411 நிறுவனங்கள் வரி ஏய்ப்பில் ஈடுபட்டதாக நாடாளுமன்றத்திலேயே அறிவித்தார் அப்போதைய நிதித் துறை இணை அமைச்சர் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம்.

அப்படியெனில் இந்த பட்ஜெட்டில் நல்ல சங்கதிகளே இல்லையென்று சொல்லிவிடமுடியாது.

தூத்துக்குடி துறைமுக விரிவாக்கத்திட்டம் 11000 கோடியில் மோடி சர்க்காரின் மிக முக்கியமான திட்டம், இது தென்தமிழகத்தின் நீண்ட நாள் கோரிக்கை, இலங்கை சமீபத்தில் தீவிரமாக தனது துறைமுகங்களை விரிவாக்கத் தொடங்கிய பிறகு தூத்துக்குடி துறைமுகத்தின் விரிவாக்கமும் தவிர்க்கமுடியாதது. முந்தைய இரு காங்கிரசு அரசாங்கத்தில் கப்பல் மற்றும் துறைமுகங்களின் பொறுப்பு தமிழகத்தை சார்ந்தவர்களிடம் இருந்தபொழுதும் (ஒருவர் திராவிட கட்சி மற்றொருவர் காங்கிரசை சார்ந்தவர்) அவர்கள் துரும்பைக் கூட எடுத்தப் போட சம்மத்திக்காத பொழுது, என்னைப் பொருத்தவரையில் இது மோடி பிரச்சாரத்தின் பொழுது சொன்னதை செய்யத் துவங்கிவிட்டாரோ என்றே பார்க்கின்றேன்.

இதற்கு முந்தைய அரசாங்கங்கள் சென்னையே தவிர மற்றைய தமிழகத்தை கண்டுகொள்ளவே இல்லை, அதன்விளைவே இன்று சென்னை மூச்சு பிடிக்கும் அளவுக்கு திணறுகிறது. மவுலிவாக்கம் மயானவாக்கமானது. வளர்ச்சி என்பது உடல் முழுவதும் இருந்தால்தான் வளர்ச்சி, தலையில் மட்டும் இருந்தால் அது கட்டி. சென்னை 20ஆண்டுகளுக்கு முன்பு வரை வசிக்கும் நகரமாக இருந்தது. இன்று வாழ்வாதாரத்திற்க்காக வாழும் நகரமாகிவிட்ட சூழ்நிலையில் சென்னையை மாற்றி அமைக்கும் நிலை வேண்டும், அதை இந்த திராவிட கட்சிகள் செய்யாது.

இந்த நிலையில் பொன்னேரியில் அமையவிருக்கும் ஸ்மார்ட் சிட்டி திட்டமும் வரவேற்க்கத்தக்கது. என்ன அது ஒரு 200கிமீக்கு அப்பால் அமைந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

​சிறு, குறு தொழில்களுக்கு ஆதரவு தர முடிவுசெய்திருப்பதும் நல்ல விசயமே.

நாடு முழுக்க ஐஐடிக்களும், ஐஐம்களும் மற்றும் எய்எம்ஸ்களும் பரவலாக அமைப்பது நல்ல முயற்சி.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக