வரும் மே 16ம்தேதி மோடி அசுர பலத்துடன் ஆட்சியை பிடிப்பார் என்று ஒரு புறமும், தொங்கு நாடாளுமன்றம் அமையுமென்று ஒருபுறமும் கணிப்புகள் அடித்துவிடுகின்றன. அப்படி தொங்கு நாடாளுமன்றம் அமையுமென்றால் மூன்றாவது அணிக்கு ஆதரவு கொடுப்பதின் மூலம் முலாயம் சிங்கையோ, ஜெயலலிதாவையோ பிரதமராக்கி மோடியை தடுக்கலாம் என்பது காங்கிரசு பெருந்தலைவர்களின் கனவு... காங்கிரசின் இந்த பிளான் “பி” திட்டங்களை பற்றியும் செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன.
ஏன் மோடி வந்துவிடுவதை தடுக்க நினைப்பது மதசார்பின்மை புடலங்காய்க்காகவா இல்லை, கார்ப்பரேட்களின் கூடாரமாய் இந்தியா மாறிவிடக்கூடாது என்பதற்க்காகவா இல்லையில்லை, மக்களின் நலனுக்காகவா. ஆம் அதுதான் உண்மை மக்களின் நலனுக்காகவே அது தான் பெற்ற மக்களின் நலனுக்காகவே. அவ்வளவும் ஊழல் பணத்தினை காக்கவேண்டும், வழக்கு, சிறை போன்றவற்றை தடுக்கவேண்டும். மேலும் மோடி ஆட்சியில் அசுரபலத்துடன் அமர்ந்துவிட்டால் அடுத்த பத்தாண்டுகளுக்கு அவரை அங்கிருந்து நீக்குவது கடினம் என்பதாலும் காங்கிரசு இவ்வாறு நினைக்கின்றது.
டெல்லியிலுள்ள நமது நண்பர்கள் வெள்ளி இரவு நமக்கு தந்த தகவல் ராகுல் எதிர்கட்சி வரிசையில் அமரலாம் என்ற எண்ணத்திலே இருக்கிறார் என்றனர். இந்த கட்டுரையே நாம் எழுதி முடிக்கும் முன்னர் அது குறித்து அவரே வெளிப்படையாக அறிவித்துவிட்டார். ஆக இப்பொழுது இந்த தகவல் பழம் கஞ்சியாகிவிட்டது, பரவாயில்லை நாம் இதன் சாதகபாதகங்களை ஆராய்வோம்.
ராகுலின் எண்ணமே சரியான முயற்சி என்போம். கட்சிக்கு உண்மையாக உழைப்பவரை எதிர்கட்சியில் இருக்கும்பொழுதே அடையாளம் காணமுடியும். ஏஜென்ட்களும், வியாபாரிகளும் கட்சியை விட்டு ஆளும் தரப்பை நோக்கியே நகர்ந்து போவர்.
இந்த முடிவு எடுப்பதற்கு மிகுந்த தைரியம் வேண்டும், இது வாழ்வா சாவா என்ற நிலையை நோக்கி காங்கிரசை எடுத்துச் செல்லும். ஏனென்றால் இது அதிமுக மாற்றி திமுக, திமுக மாற்றி அதிமுக என்ற ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை ஆட்சியை பங்கிட்டுகொள்ளும் களம் அல்ல. எதிர்தரப்பில் ஆர்எஸ்எஸ் என்ற மாபெரும் அமைப்பு சார்ந்த நிறுவனங்கள் எல்லா மாநிலங்களிலும் வரும் காலத்தில் ஊடுருவி நிற்பர். இது காங்கிரசின் ஆத்மார்த்த தொண்டனைத் தவிர அனைத்து பேரையும் நீர்த்துப் போகச் செய்யும். கட்சியை அடிமட்டத்திலிருந்து மீண்டும் வளர்த்தெடுக்க நேரிடும்.
ஆயினும் இது எதிர்தரப்பினரை முன்னே விட்டு பின்னே துரத்தும் ஒரு செயலே. எதிர்தரப்பு சொன்னதை செய்யாவிட்டால் மக்களிடையே அவர்களை அம்பலபடுத்துவது எளிது. அதைவிட்டு விட்டு பிளான் பியை செயற்படுத்தினால் அது தற்காலிகமாகவே மோடியை அரியனையிலிருந்து அப்புறப்படுத்தும். மூன்றாவது அணியனர் என்பது இன்றளவில் சுயநலத்தோடு செயல்படும் ஒரு அணி. அதனை வைத்து விளையாடுவது தற்கொலை விளையாட்டுக்கு சமம். அவர்களது கறையும் காங்கிரசின் தலையிலேயே விடியும்.
மற்றுமொரு கோணத்தில் பார்ப்போம். ராகுலின் முதலீடுகள் எல்லாம் வெளிநாடுகளில் பத்திரமாக உள்ளது. உள்நாட்டிலே அவரை நோக்கி கை உயர்த்துவது என்பது கடினம். இங்கு எதிர்கட்சி வரிசையில் உட்காருவது என்பது பிரியங்காகாந்திக்கே ஆபத்து. வதேரா ஆடிய ஆட்டங்கள் அப்படி. வடமாநிலமெங்கும் முறைகேடாக நிலங்கள் குவித்து வைத்திருப்பதால் பிரியங்காவின் சப்தநாடியும் அடங்கிவிடும் பாஜக ஆட்சியை பிடிக்கும் எனில், மோடி பெரிதாக எதுவும் செய்ய தேவையிருக்காது., அதனால்தான் இன்று அவர் சக்தி முழுமையும் மோடிக்கு எதிராக கொடுக்கிறார். அப்படியெனில் ராகுல் ரொம்ப நல்லவரா?
இந்த கட்டுரை ராகுலை மற்றொரு கோணத்தில் கழுகு பார்வை பார்க்கின்றது. எனவே அது பற்றி மற்றொரு சந்தர்ப்பத்தில் பேசுவோமே.
ராகுல் காந்தியை விதூசகராகவே நம்மில் பலபேரும் நினைத்துக்கொண்டிருக்கிறோம். அம்மாஞ்சி, பிளைக்கத்தெரியாத பிள்ளை என்று. உண்மை அதுவன்று. அவரை சுற்றி பல நிபுணர்கள் கொண்ட அணியினர் உள்ளனர். அவர்களின் நிலைப்பாட்டினை இன்று வரை சோனியா அம்மையாரை சுற்றியுள்ள அரசியல் வியாபாரிகள் தடுத்துவிடுகின்றனர். இனி அது நடக்காது. ஆக ராகுலின் கையில் முழுமையாக காங்கிரசின் அரசியல் அதிகாரங்கள் வரும். பழம்பெருச்சாளிகள் வேறு இடம் தேடவேண்டும்.
ராகுல் ஒரு பேட்டியில் சொன்னார். நான் அரசியலில் சாமன்யனும், இளைஞர்களும் இடம்பெறவே விரும்புகின்றேன். ஆயினும் அது ஒரே கட்டத்தில் என்னால் நடத்த சாத்தியம் இருப்பதில்லை. பத்து சதவீதம் பேர்தான் ஒவ்வொரு தேர்தலிலும் என்னால் புதியவர்களை புகுத்த முடியும். ஆம் அது உண்மைதான். அவரால் மட்டுமல்ல யாராலும் ஒரே நேரத்தில் இந்தியாவை மறு சீரமைப்பு செய்யமுடியாது. ஆக இங்கு ராகுல் தனித்து தெரிகிறார் என்பேன்.
அவரது நதி நீர் இணைப்புதிட்டம் குறித்த கருத்தில் குறிஞ்சியும் உடன்படுகின்றது. அது பற்றி ஏற்கனவே நாம் பதிவிட்டது.
நதி நீர் இணைப்பு திட்டம் என்பது மிகப்பெரும் தவறு. இயற்கையை நம்மால் வென்றெடுக்க முடியாது. மத்திய ஐரோப்பாவில் ஒரு நாட்டில் நதிநீர் இணைப்பு திட்டம் தோல்வியிலேயே முடிந்துள்ளது. நன்னீர் கடலுக்குள் செல்லாமல் கடல் நீரின் உப்புத்தன்மை அதிகரித்து கடலியல் உயிரினங்கள் அழிந்துள்ளதாக ஒர் ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. நமக்கு மட்டுமானதல்ல இந்த பூமி “இது எல்லா உயிரினருக்கும் பொதுவானது”.
ஒரு சொட்டு நீரும் கடலுக்கு அனுப்பாமல் இருந்தால் நதியின் முகத்துவாரம் நன்னீரையே பார்க்க முடியாது, எந்த நதியிலும் முகத்துவாரம்தான் செழிப்பு மிக்கது கங்கையின் முகத்துவாரமான வங்கத்திலே பெரும் விவசாயம் நடைபெறுகின்றது. அவ்வளவு ஏன் காவிரியின் முகத்துவாரமான டெல்டா பகுதிதான் தமிழக நெற்களஞ்சியம்.
ஒரு திராவிட கட்சியின் ஆட்சியில், காவிரியில் தூர் வாருகின்றேன், தென்பெண்னையாற்றில் தூர் வாருகின்றேன் என்று உலக வங்கியில் ஐந்தாயிரம் கோடிக்கும் அதிகமாக கடன் வாங்கினார்கள். நமக்கு யாருக்காவது தெரியுமா அவர்கள் தூர் வாரினார்களா இல்லையா என்று. அந்த நதிகளில் எல்லாம் நீர்பெருக்கெடுத்து ஒடுகிறதா நண்பர்களே. நீங்கள் அதில் ஊழல் என்று குற்றச்சாடினையும் வைக்கமுடியாது. அரசியல்வாதிகள் என்ன கூறுவார்கள் தெரியுமா நண்பர்களே, நாங்கள் தூர்வாரியதை வெள்ளத்தில் நதி மூடிவிட்டது என்பார்கள், ஆக நதி நீர் இணைப்புதிட்டம் என்பதும் பெரும் ஊழலுக்கு வழி வகுக்கும் என்பேன்.
இங்கு மேலும் நான் குறிப்பிடவிரும்புவது மழையே இந்த தேசத்தில் பொய்த்துகொண்டு வருகின்றது. அப்படி இருக்க மழை வரும் என்று நம்பி பெரும் பணத்தினை (பில்லியன் டாலர் கோடிகள்) அதனில் போட்டுவிட்டு பலன் வராவிட்டால் யாரிடம் போய் நாம் நிற்பது.
முதலில் தெலுங்கு கங்கை திட்டமான கிருஷ்ணா நதிநீர் - சென்னை குடிநீர் திட்ட இணைப்பின் பலா பலன்களை நன்கு ஆராய்வோம். பிறகு நதி நீர் இணைப்பு திட்டம் பற்றி விவாதிக்கலாம்.
பொறுங்கள், நான் நதி நீர் இணைப்பு திட்டத்தின் எதிரி அல்ல, முதலில் நாம் நம்மீது உள்ள கறையினை துடைத்திடுவோம், ஆம் ஏரி குளங்களை ஆக்கிரமிக்கமால் வீடுகள் கட்டாமல் விட்டாலே, நமக்கு தற்பொழுது பெய்யும் மழையே உபரியாக கடலில் கலக்காமல் நமது குளங்களில் தங்கியிருந்து நம் மண்ணின் நீர்வளத்தினை அதிகரிக்கும். காமராசர் காலத்திற்கு அப்பால் எத்தனை குளம், ஏரி புதிதாக அமைத்திருக்கிறோம்? இருக்கின்ற குளத்தினையெல்லாம் அபார்ட்மென்டுகளும், காலேஜ்களும் கட்டிவிட்டு நதி நீர் இணைப்பு திட்டம் பற்றி பேச வெட்கமாயில்லை நமக்கு.
முதலில் மரம் நடுவோம் மழை பெறுவோம் :)
ராகுல் மாற்றத்தினை பேச்சளவிலே வைத்திருப்பதாலும், ஊழல் கறைபடிந்த அவரது சகாக்களினை இதுவரை அப்புறப்படுத்தாலும் அவரது குரல் எடுபடவில்லை, இனி எதிர்கட்சிவரிசையில் அமர்ந்தால் குற்றம்சாட்டப்பட்டவர்களின் மீது நடவடிக்கை எடுப்பது என்பது ஆளும்தரப்பின் பொறுப்பாகிறது. எனவே ராகுலின் குரல் மெல்ல மெல்ல எடுபடும். மேலும் கெஜ்ரிவால் எல்லாம் வெகுவேகமாக மக்களின் நாடியை பிடித்துக்கொண்டிருந்த பொழுது ராகுல் குடிசைப்புறங்களில் கூழ் குடிப்பது என்பதெல்லாம் பழைய காட்சிகள், அதையெல்லாம் நம்பியது அவரை குப்புறத்தள்ளியது என்பேன். சரி பார்ப்போம். இனி அவரது அரசியல் எவ்வாறு செல்லுமென...
இந்த தேர்தலில் மோடிக்கு ஈடாக கடும் உழைப்பு உழைத்திருக்கிறார், இருந்தும் அவருக்கு பெயர் கிடைக்கவில்லை என்பது ஆச்சரியமாக உள்ளது. மோடிக்கும் ராகுலுக்கும் உள்ள ஒரே வித்தியாசம் மோடி நம்பிக்கையுடன் பிரச்சாரத்தினை எதிர்கொள்கிறார், ஐக்கிய முன்னனியின் தோல்விகள் ராகுலின் நம்பிக்கையை குலைக்கிறது.
ராகுலுக்கு மாற்று என்பது பிரியங்கா அல்ல:
ஆனால் நாம் பயப்படுவது என்பது பிரியங்கா காந்தியை ராகுலுக்கு மாற்றாக முன்னிறுத்துவது என்பதே. அது தற்கொலை முயற்சிக்கு சமம். ஒரே நாளில் குடும்பத்தலைவியான பிரியங்கா காந்தி எப்படி இந்த தேசம் முழுமையையும் முன்னோக்கி எடுத்தசெல்வார் என்பது? மேலும் அவர் இன்றளவும் வதேராவின் மனைவியாகவே மனதளவிலும் செயலிலும் செயற்படுகின்றார். அவரது பிரச்சாரம் முழுவதும் மோடியை பற்றி பேசுவது, வதேராவை எங்கு சிறையில் அடைத்துவிடுவார்களோ என்று பயந்துதான் ஒழிய மக்கள் நலமல்ல...
சில பத்திரிக்கைகள் தற்போது பிரியங்கா சார்புடன் எழுத ஆரம்பித்துள்ளன. அவர் ஒன்றும் பரிசுத்தமானவர் அல்ல, எல்லா அரசியல்வாதிகள் போலத்தான் அவரும்...கணவர் மீது நிலமோசடி புகார் சொன்னால் அதை தனிப்பட்ட அவமானமாக எடுத்துக்கொள்கிறார். டெல்லியில் அரசு வீட்டை ஆக்கிரமித்துள்ள புகாரும், இமாச்சலில் முறைகேடாக சொத்து வாங்கியுள்ள புகாரும் உள்ளது.
ஆக ராகுலுக்கு மாற்று என்பது பிரியங்கா அல்ல.
படங்கள்: இந்தியாடுடேவிலிருந்து எடுக்கப்பட்டது.



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக