புதன், 7 ஆகஸ்ட், 2013

கொண்டாடப்படவேண்டிய மனிதர் இவரே!

இன்று ஜிம்மி வேல்ஸின் பிறந்தநாள், வாழ்த்துக்கள் ஐயா. 


சமீப காலங்களில்ஆப்பிள் நிறுவனத்தின் முந்தைய தலைமை செயல் அதிகாரியான ஸ்டிவ்ஜாப்ஸ்-ஐ அதிக நண்பர்கள்  தலையில் வைத்து கொண்டாடுகின்றனர், ஆனால் என்னைக் கேட்டால் இதற்கு தகுதியானவர்கள் சி மொழியின் கண்டுபிடிப்பாளர் டென்னிஸ் ரிட்சி அல்லது விக்கிபீடியாவை நிறுவிய ஜிம்மி வேல்ஸ் போன்றோர்தான். இதனை நண்பர்கள் உணர்வார்களா. 


​மேலும் ஜிம்மி வேல்ஸின் பிறந்தநாள் தொடர்பாக விகடனில் வந்த கட்டுரை கிழே:


விக்கிபிடியாவின் விக்கிபீடியா 


தண்ணீரின் வரலாறு என்றாலும் தலைவர்களின் வரலாறு என்றாலும் நாம் உடனடியாக நாடுவது விக்கிபீடியாவைத்தான். நம் வாழ்வில் தவிர்க்க முடியாத அங்கமாகிவிட்ட அறிவித் தேடலின் சுரங்கமான விக்கிபீடியாவை உருவாக்கிய ஜிம்மி வேல்ஸின் பிறந்த நாள் இன்று!

எல்லாவற்றின் வரலாற்றை நமக்குச் சொல்லும் ஜிம்மி வேல்ஸின் வரலாறும் மிக சுவாரஸ்யமானது. இவரின் அப்பா பல்பொருள் அங்காடி ஒன்றில் வேலைப் பார்த்துக்கொண்டிருந்தார். வீட்டிலேயே கல்வி பயின்றுகொண்டிருந்த ஜிம்மி வேல்ஸை மாண்டிச்சேரி கல்விமுறை வார்த்து எடுத்தது.

பொருளாதாரம் படிக்க கல்லூரிக்குச் சென்றார். பின் ஸ்டாக் எக்ஸேங்கில் வேலைப் பார்த்தார். அதோடும் ஒட்டமுடியாமல் வெகு விரைவில் அதிலிருந்து விலகியவருக்கு நெட்ஸ்கேப் நிறுவனம் தன் பங்குகளைப் பொதுமக்கள் வாங்கலாம் என்று அறிவித்ததும் அதில் பங்குகள் வாங்கினார். கவர்ச்சிக்கரமான படங்களைத் தேடித்தரும் போமிஸ் எனும் தளத்தை நடத்தினார். அது ஓரளவு லாபம் ஈட்டித்தந்தது.

பிறகுதான் நுபீடியா எனும் தளத்தை தொடங்கினார் ஜிம்மி வேல்ஸ். இதில் அறிவுபூர்வமான கட்டுரைகளை உருவாக்கினார். பல கல்வியாளர்களிடமிருந்து கட்டுரை பெறுவது இதன் நோக்கமாக இருந்தாலும் இதில் பல சிக்கல்கள், ஓரிரு கட்டுரைகளை வெளியிடுவதற்குள் போதும் போதுமென்றாகிவிட்டது ஜிம்மிக்கு. சாங்கர் என்பவர் ஆசிரியராக இருந்து கட்டுரைகளை எடிட் செய்துகொடுத்தும் சமாளிக்க முடியவில்லை. அப்போது ஜிம்மிக்கு தீடீரென்று தலையில் பல்பு எரிந்தது. இந்தத் தளத்தை ஏன் பொது தளத்திற்கு கொண்டுசெல்லக் கூடாது. அப்படி செய்வதன் மூலம் இது இன்னும் விரிவடையுமே என்று எண்ணத்தில் இத்தளத்துக் கட்டுரைகளை யார் வேண்டுமானாலும் எழுதலாம் யார் வேண்டுமானாலும் எடிட் செய்யலாம் எனும் விதிமுறையோடு விக்கிபீடியாவைத் தொடங்கினார்.

விக்கிபீடியா தொடங்கியபோது உள்ளுக்குள் பயம் இருக்கத்தான் செய்தது ஜிம்மிக்கு. கட்டுரைகள் வருமா, வந்தாலும் காப்பிரைட் பிரச்சனைகள் சூழ்ந்துவிடுமோ என்ற பயம்தான் அது. ஆனால் எதிர்பார்த்தைவிட வந்த கட்டுரைகளின் எண்ணிக்கை இவரை மலைக்க வைத்தது. விக்கிமீடியா என்கிற அமைப்பை உருவாக்கி அதன் மூலம் விக்கிபீடியாவை நடத்துவதற்கான நிதி திரட்டலை தொடர்ந்து செய்ய ஆரம்பித்தார் மனிதர்.

ஒரு விஷயத்தில் தெளிவாக இருந்தார் ஜிம்மி வேல்ஸ். விக்கிபீடியாவில் விளம்பரங்களை வெளியிடக்கூடாது. அது எப்பொழுதும் இலவசமாகவே இருக்கும் என்பது தான் அது. இந்த புள்ளிவிவரம் உங்களுக்கு ஒரு புரிதலை தரலாம் அப்படி விக்கிபீடியா தளத்தில் வீடியோ விளம்பரங்கள் அனுமதிக்க படுமென்றால் ஐந்து பில்லியன் டால்ர அளவுக்கு மதிப்பு உயரும். அங்கே தான் விக்கி மாறுபடுகிறது, இதன் உரிமையாளர்கள் நம்மைப்போல் எளிய மனிதர்களே. நாமே கட்டுரைகளை எழுதுகிறோம்,தொடர்ந்து எடிட் செய்கிறோம். இதற்கென்றே இப்பொழுது எண்பதாயிரம் நபர்கள் முழு மூச்சாக இயங்குகிறார்கள் என்பது அடுத்த சங்கதி. கிட்டத்தட்ட இரண்டு கோடியே நாற்பது லட்சம் கட்டுரைகள் விக்கிபீடியாவில் உள்ளது. உலகில் கூகுள்,யாகூ,பேஸ்புக்,மைக்ரோசாப்ட் தளங்களுக்கு அடுத்து அதிக நபர்கள் வரும் தளம் விக்கிபீடியா தான்.

ஒட்டுமொத்த மனித அறிவும் எல்லா மனிதருக்கும் இலவசமாக போய் சேர வேண்டும் என்பதே என் கனவு. அது தான் நடந்து கொண்டிருக்கிறது. பிழையான தகவல்கள் விக்கிபீடியாவில் கொட்டிகிடைக்கின்றன என்பதை மறுக்க முடியாது. அதே சமயம் அறிவார்ந்த விஷயங்களை உலகின் எளியவருக்கும் திறந்து விட்ட மாயத்தை அது செய்திருக்கிறது.

தொடர்ந்து கட்டுரைகள் எகிறிக்கொண்டே இருக்கின்றன. அதை விட சுவாரசியமான விஷயம் விக்கிபீடியாவின் சாகசத்தில் பிரிட்டானிகா தளம் தன்னுடைய ஹார்ட் காப்பி பதிப்பை நிறுத்தி விட்டது என்பது தான். தகவல் புரட்சிக்கான விதை போட்ட ஜிம்மியின் சொத்து சில மில்லியன்களில் இருக்கும் அவ்வளவே. பணத்தை விட மனிதர்களுக்கு அறிவை சேர்த்தலே உன்னதம் என்று முனைப்புடன் செயலாற்றும் அவருக்கு ஹாப்பி பர்த்டே சொல்லுவோம். (இந்த கட்டுரையும் கட்டற்ற களஞ்சியமான விக்கிபீடியாவின் உதவியுடன் எழுதப்பட்டது )

-பூ.கோ. சரவணன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக