வெள்ளி, 5 ஜூலை, 2013

மன்னித்து விடு திவ்யா...!


கருத்துப் போராட்டங்களும், தர்க்க விவாதங்களும்
இன்னும் நீளும்...
சட்டம் ஒழுங்கின் நிதர்சனமும், குமுறும் பழி உணர்வும்
போட்டி போடும்...

சாதி ஆதிக்கத்தின் மாநிலம் தழுவிய வெற்றி...
சமநிலை சமுதாய எதிர்பார்ப்பின் தோல்வி...

உன் காதலின் மரணத்தை பட்டாசு வெடித்து
கொண்டாடினார்களாம், பாதகர்கள்...

காதுகளைப் பொத்தி வெடிச்சத்தத்தை மறுதலிப்பதைத் தவிர
வேறென்ன செய்துவிட முடியும் எங்களால்...

காதல் தேவதையின் கால்விலங்குகளின் பூட்டை
இன்னொரு முறை இழுத்துப்பார்த்து திருப்தியடைந்தனர்...

இருட்டில் இன்னமும் சாவியைத் தேடும் பாவனையில்
நாங்கள்...

இது வழிநடத்தப்படும் சமூகம்
வழிகாட்டும் சமூகம் அல்ல...

விவாதிக்கும் சமூகம்தான்
களத்தில் வென்று காட்டுமளவுக்கு
நாங்கள் வெட்டியாயில்லை...

ஒரு இளம்பெண்ணின் இயல்பான
ஆசைதான் உனது...
என்ன செய்வது...?

சாதிப்பித்தேறிய இந்த சமூகத்தில்
இரு தனி நபர்களின் காதலைக் கூட
இங்கு சில அரசியல்வாதிகள்தான்
அங்கீகரிக்கவேண்டியிருக்கிறது.

தந்தையை இழந்தாய்...
சுதந்திரத்தை இழந்தாய்...
இளமையின் நாட்களை இழந்தாய்...
இப்போது கணவனையும் இழந்தாய்...

இன்னமும் நாங்கள்
இறந்த உடலைப் பிரேதப்
பரிசோதனை செய்துகொண்டிருக்கிறோம்...
உன் உணர்வுகளின் மரணத்தைப்
பற்றி பிறகு பேசுவோம்...

மன்னித்து விடு திவ்யா...!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக