புதன், 15 மே, 2013

கிராமத்தை வெட்டாதீங்க!

ஏதோ கர்லாக் கட்டையைத் தூக்கிச் சுழற்றுவது போல, எடை அதிகமான நுங்குக் குலைகளைத் தூக்கிச் சுழற்றியபடியே, “பத்து வயதுக்கு மேல உள்ள மரத்திலிருந்து குருத்து, மட்டை, நுங்கு எல்லாம் கிடைக்கும். ஓலைகளை வெட்டி நிலத்துல போட்டு மக்க வெச்சிட்டா அதுவே உரமா மாறிப் போயிடும். பனை ஓலைப் பாய் குளிர்ச்சியானது. அதிக ஆண்டு நீடிக்கக் கூடியது’ என்கிறார் அடைக்கத்தேவன் கிராமத்து இளைஞர் சித்திரவேலு. அதே கிராமத்தைச் சேர்ந்த முதியவர் காளிமுத்து, “ஒரு மீன்பரி தயாரிக்க ரெண்டு குருத்துக்கள் தேவை. இந்த மீன்பரி எளிதில் மடியாது. உப்புத் தண்ணீ பட்டாலும் வீணாகுது. கடல்ல போயி மீன் பிடிக்கற தொழில் உள்ள வரைக்கும், இந்த மீன்பரி உற்பத்தி வேலை அழியாது!’ என்று பனை புகழ் பாடுகிறார்.
“மருத்துவகுணம் நிறைந்த மரம் இது. பனம் பூக்களைக் குடிநீரில் இட்டு அருந்தி வர பல் நோய், அல்சர், நீரிழிவு, நீர்க்கடுப்பு போன்றவை மறைந்து போகும். நுங்கு நீரானது வியர்க்குருவைப் போக்கும். உவர்ப்புச் சுவை கொண்ட அதன் மேல் தோல் சீதபேதியைத் தடுக்கும் ஆற்றல் கொண்டது. பொதுவாக நுங்கு, உடலின் உஷ்ணத்தைக் குறைக்கக் கூடியது. பனங்கற்கண்டு மேக சுரம், அம்மை, நீர்ச்சுருக்கு மற்றும் வறட்டு இருமலுக்குச் சிறந்த நிவாரணி. பதநீர் உடலுக்கு திண்மையும், ஆண்மையும் அளிக்கக்கூடியது. பனங்கருப்பட்டி எனப்படும் பனை வெல்லம், நம் உடலில் உருவாகும் வாதம், பித்தம், கபம் மூன்றினையும் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் அற்புத சக்தி கொண்டது!’ என்பது ஆவணம் கிராமத்தின் சித்த வைத்தியர் ஜீவானந்தத்தின் அறிவுரை. இந்த மூவரையும் மீறி ராமநாதன் சொல்ற கருத்துதான் கலவரமாக்குது.
“ரெண்டு மரத்துல பதநீர் எடுத்து கருப்பட்டி, பனைவெல்லம், பனங்கற்கண்டு தயாரிச்சா ஒரு வருஷத்துக்கு ஒரு குடும்பத்துக்குப் போதும். கடையில் போயி சீனி வாங்க வேண்டிய அவசியமே வராது.



தமிழ்நாட்டில் மட்டும் சுமார் ஐந்து கோடி பனைமரங்கள் இருந்துள்ளன. கடந்த பத்தாண்டுகளில் செங்கல் சூளைகளின் விறகுகளுக்காக மட்டுமே மூன்று கோடி பனை மரங்கள் வெட்டப்பட்டு விட்டன. தூத்துக்குடி, திருச்செந்தூர், கன்னியாகுமரி பகுதிகளிலிருந்து தமிழகத்தின் இதர பகுதிகளில் இருக்கும் செங்கல் சூளைகளுக்கு பனை மரங்கள் வெட்டப்பட்டு லாரி லாரியாகக் கொண்டு செல்லப்படுகின்றன. மிச்சமிருக்கும் பனைமரங்களைப் பாதுகாக்கவும், கிராம ஊராட்சி நீர் நிலைகளின் கரைகளில் புதிதாக பனை மரங்களை உருவாக்கவும், இனிமேலாவது பனை மரங்களை வெட்டாதிருக்கவும் அரசு ஆவன செய்ய வேண்டும்! அப்போ தான் கிராமம்னு ஒண்ணு தமிழ்நாட்டுல இருக்கும். பனைமரத்தை வெட்டுவது கிராமத்தை வெட்டுவதற்குச் சமம்’ என எச்சரிக்கிறார் சேதுபாவாசத்திரம் ராமநாதன்.

நன்றி - கல்கிஸ்ரீரங்கம் திருநாவுக்கரசு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக