வியாழன், 25 ஏப்ரல், 2013

வெற்றி உங்களை நெருங்க - பிரேமா சொல்லும் வழிகள்!

இந்த ஆண்டுக்கான “சார்ட்டர்ட் அக்கவுண்டன்ட்’ (சி.ஏ) தேர்வில் இந்தியாவிலேயே முதலிடம் பிடித்திருக்கிறார் பிரேமா. தமிழ்ப் பெண், ஆட்டோ டிரைவரின் மகளாக இருந்த, வறுமை வாட்டியபோதும் குறிக்கோளோடு படித்து சாதனை படைத்திருக்கிறார் இவர். +2 மாணவர்களின் ஒளிமயமான வாழ்விற்கு இவர் தரும் சில யோசனைகள்.

+2ங்கிறது ஒருவரின் எதிர்காலத்தை தீர்மானிக்கிற முக்கிய கட்டம். எதிர்காலத்தில் என்னவாகணும் நெனைக்கிறோமோ அதற்கான முதல் படி. அதனால் திட்டமிட்டுச் செயல்படணும்.
 
 

சிலருக்கு படிக்கும் போது பெரிய கனவெல்லாம் இருக்காது. படிப்போம். மார்க் கெடச்சா மேற்படிப்புக்குப் போவோம். இல்லேன்னா வேறு வேலை எதையாவது பார்த்துக்கலாம்னு இருப்பாங்க. இந்த எண்ணம் தவறு. நமது லட்சியம் என்னங்கிறதை முதல்லேயே தீர்மானிச்சிட்டு அதற்கேற்ப செயல்படணும். அதுக்குத்தான் கனவு காணுங்கள்னு அப்துல் கலாம் சொல்லியிருக்கிறார்.

உதாரணமாக என்னையே எடுத்துக்கலாம். +2வில் நான் “அக்கவுண்ட்ஸ்’ குரூப் எடுத்தேன். அதனால், பொறியியல், மருத்துவம் படிக்க வழியில்லை. இருந்தாலும், அந்த கோர்ஸில் பெரிய படிப்பு சி.ஏ.ங்கிறதை தெரிய வந்துச்சு. அதைப் படிக்கணும்னு நெனைச்சேன். ஆனால் +2வில் சயின்ஸ் குரூப் எடுத்தவங்களுக்கு மருத்தும், பொறியியல் மட்டுமில்லாமல் தோட்டக்கலை, விவசாயம், ஃபாரஸ்டரி, நர்ஸிங், பிசியோதெரபி மாதிரியான படிப்புகள்னு நிறையவே இருக்கு.

இலக்கில்லாமல் பயணித்தால் ஊர் போய்ச் சேர முடியாதுங்கிறது நம் முன்னோர் மொழி. அதனால் சரியான இலக்கை திட்டமிடணும். தொழிற்கல்லூரிகளில் சேர இப்ப நுழைவுத் தேர்வு கிடையாது. +2வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்வு செய்யறாங்க. கல்லூரிகளின் எண்ணிக்கையும் அதிகம். அதனால் இடம் கிடைக்குமோ, கிடைக்காதோ என்கிற தயக்கம், பயம் தேவையில்லை.

ஏதாவது சாதிக்கணும்னு நெனைக்கிறவங்களுக்கு போட்டி மனப்பான்மை இருக்க வேண்டியது அவசியம். மதிப்பெண்கள் எடுப்பதில் போட்டி இருக்கணும். சராசரி மார்க் எடுத்தால் போதுங்கிற எண்ணம் வெற்றியை தராது.

வறுமை உடல் சோர்வை தரலாம். ஆனால் ஒரு போதும் மனச் சோர்வைத் தராது. அதை மனதில் கொள்வது நல்லது. இளமையில் வறுமையில் வாடியவர்கள்தான் பின்னாட்களில் சாதனையாளர்களாக வந்திருக்காங்க. அதை மனசில் வச்சுக்கிட்டாலே போதும்.

படிக்கும்போது நாமே சுயமாக தேர்வெழுதிப் பார்க்கலாம். கேள்விகளைத் தயார் செய்து நமக்கு நாமே ஒரு கட்டுப்பாட்டை விதிச்சுக்கிட்டு பரீட்சை எழுதலாம். நாமே விடைத்தாள்களை திருத்தாமல் ஃப்ரெண்ட்ஸ் கிட்ட கொடுத்து திருத்தச் சொல்லலாம். இப்படி ரெண்டு மூணு முறை பண்ணினீங்கன்னா போதும். அந்தப் பாடத்தில் நாம் எக்ஸ்பர்ட் ஆவது நிச்சயம். அதனை நான் பிராக்டீஸ் செய்திருக்கிறேன்.

அதற்காக நண்பர்களுடன் கூட்டு சேர்ந்து படிப்பதெல்லாம் வேலைக்கு ஆகாது. இதனால் தேவையற்ற பேச்சுதான் வளரும். நேரில் பார்ப்பதைத் தவிர்த்து, படித்த விவரங்களை சுருக்கமாக போனில் பேசித் தெரிஞ்சுக்கலாம். இதனால் கால விரயம் இருக்காது. நண்பன் அல்லது தோழி நிறைய படிச்சிட்டாங்களோ என்கிற தேவையற்ற படபடப்பும் வராது.

எதை, எப்படிப் படிக்கணும்கிறதை நன்றாகத் திட்டமிடணும். அனைத்துப் பாடங்களுக்கும் சமமான முக்கியத்துவம் தரணும். சாய்ஸில் விட்டுவிடலாம்னு நினைக்கக்கூடாது. ஒருவேளை நாம படிச்சது வரலேன்னா அனைத்தும் வீணாயிடும் அதேபோல் ஒரு பாடத்தைப் படிச்சிட்டு, மற்றதை அப்புறம் பார்த்துக்கலாம்னு இருக்கக் கூடாது.

'ஒரு முறை எழுதினால் மூணுமுறை படிச்சதுக்கு சமம்’னு சொல்வாங்க. அதனால் படிச்சதை எழுதிப் பார்ப்பது அவசியம். குறைந்தபட்சம் ஒரு முறையாவது எழுதிப் பாருங்கள்!

நன்றி - குமுதம், எஸ். அன்வர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக