ஞாயிறு, 7 செப்டம்பர், 2025

மோதி ஜிஎஸ்டி வரி அதிகமாக விதித்தாரா, இல்லையா!?

பார்த்தீர்களா நண்பர்களே!

நாம இதுவரையில் சொன்னது உண்மையாகிவிட்டது, பூனைக்குட்டி வெளியேவந்துவிட்டது.. 

அதிகமாக இருந்தாத்தானே குறைக்க முடியும்.. 

நாம என்ன சொன்னோம், 

மோதி நம்ம தமிழர்களின் மீது வரி போட்டு கசக்கி எடுத்தார்.. 

சாமானியர்களின் சுருக்குப்பையிலிருந்து காசினை எடுத்து அம்பானிக்கும் டாடாவிற்கும் கொடுத்தார். 

கார்ப்பரேட் அரசாக இருக்கிறது இந்த மோதி அரசு என்று 

ஆக நேற்று குறைத்த வரி குறைப்பினிலிருந்து, வரி அதிகமாக இருந்தது என்பது உள்ளங்கை நெல்லிக்கனி  போன்று தெளிவாகத் தெரிகின்றது. 

ஆக... 

என்றெல்லாம் இன்று ஊடகவிவாதங்களில் விவாதிக்கலாம் நம்ம திராவிட இயக்க, காங்கிரசு, கம்யூனிச சகோதரர்கள்...

ஆனால் உண்மை எதுவென்று பார்க்க தெரிந்துகொள்ள விரும்பி தரவுகளை திருப்பினால், களம் வேறுவித புரிதலை எனக்கு கொடுக்கின்றது, நீங்களும் வாருங்கள் வாசியுங்கள், எனது புரிதல் தவறு எனில் விவாதிப்போம் சரியான புரிதலை மக்களுக்கு எடுத்துரைப்போம். 


வரிக்கு வரி :

ஜிஎஸ்டி வரி,  சமவரி, எளிமைப்படுத்தப்பட்ட வரி என்ற சொற்பதம் 1986களிலிருந்து(காங்கிரசு அரசு) வேகமெடுக்கின்றது.

அதற்கு முன்பு வரிக்கு வரி என்பதாக இருந்தது. 

அதைப்பற்றி தெரிந்துகொள்ள விரும்பினால், இப்போதைய பெட்ரோல் டீசல் மீது விதிக்கப்படுகின்ற வரி கட்டமைப்பினை தெரிந்துகொண்டால் வரிக்கு வரி என்பது என்னவென்று எளிதில் புரியும். 


10 ஏப்ரல் 2025ன் அன்றைய நிலவரப்படி, எண்ணெய் நிறுவனங்கள் செய்யும் உற்பத்தியின் மீது மத்திய அரசு  19.90Rs வரி விதிக்கின்றது .

* உற்பத்தி பொருள்விலை மீது 19.90Rs வரி.

பின்பு அந்த பொருட்கள் மாநிலங்களில் விற்பனை செய்யப்படும்பொழுது மீண்டும் அந்த விலையின் மீது 20-25% தோரயாமாக மாநில அரசு வரி விதிக்கின்றது. 

* பொருள்விலை + மத்தியரசு வரி (19.90Rs ) மீது தோரயாமாக மாநில அரசு 20-25% வரி 

ஆக "வரியின் மீது வரி.. "


தமிழ்நாட்டில் 13% + 11.52ரூ => 21.83ரூ வரி விதிக்கப்படுகின்றது. 

புதுதில்லியில் 19.4% அ 15.39ரூ வரி விதிக்கப்படுகின்றது.






மாநிலங்களுக்கிடையே வரி வித்தியாசப்படுவதினால் விலையிலும் வேறுபாடு இருக்கின்றது.  தமிழ்நாட்டினை விட புது தில்லியில் தோராயமாக 6ரூ விலை குறைவாக இருக்கின்றது. தமிழ்நாட்டில் ஒட்டுமொத்தமாக 101.16ரூபாயாகவும், தில்லியில் 94.72ரூபாயாகவும் பெட்ரோல் விற்கப்படுகின்றது

இதுவே ஜிஎஸ்டியின் கீழ் கொண்டு வரப்படும்பொழுது 50% வரி அமைப்பினில் வைத்தாலும் எண்ணெய் விலை பெருமளவு குறைய வாய்ப்பிருக்கின்றது. 
ஜிஎஸ்டியில் மத்திய மாநில அரசுகள் சமமாக ரூ14.86 வரியாக பெறுகின்றன , ஒட்டுமொத்த விலையானது 89.15ரூபாயாகவும் இருக்கும். 

யார் சரி, எது தவறு என்ற விவாதத்திற்குள்ளே குறிஞ்சி போகவிரும்பவில்லை. 




1986க்கு முன்பு பெரும்பாலான பொருட்களின் மீது வரி இப்படித்தான் இருந்தது யோசித்து பாருங்கள் எவ்வளவு வரி நம்ம சட்டைப்பையிலிருந்து, சுருக்குப்பையிலிருந்து உருவி எடுத்து இருப்பார்கள். 

அப்படியானால் நமது அரசாங்கத்திற்கு பெரும் வருவாய் வந்திருக்கவேண்டுமேயென்றால்.. 

இல்லை என்பதே பதில். 

ஆம்! வரவேண்டிய வருவாய் அரசிற்கு வராமல், பதுக்கல்களும், கள்ளச்சந்தையில் விற்பதுமாக இருந்தது. 

வரி என்பது கெட்ட சொல்லாகவே மக்களின் மனதில் பதிய வைக்கப்பட்டிருந்தது. 


தேர்ந்தெடுக்கப்பட்ட எந்த ஒரு அரசாங்கம் செயற்படவும் வரி என்பது அத்தியவாசியமானது.

மக்களுக்கு நல்லதை, தேவையானதை செய்ய எந்த ஒரு அரசாங்கத்திற்கும் தேவைப்படும் வருவாய் வரியின் முலமாகவே ஈட்டப்படுகின்றது. 

மக்களிடையே ஏற்படும் ஏற்றத்தாழ்வுகளைச் சரி செய்யவும்..

மாற்றுத்திறனாளிகள், ஒடுக்கப்பட்டோர், விதவைகள், பெற்றோர்களை இழந்த குழந்தைகள், முதியோர், பெண்கள் என இவர்களுக்குத் தேவைப்படும் குறைந்தபட்ச உதவிகளைச் செய்யவும்...

பொதுமக்களின் அன்றாட வாழ்க்கைக்குத் தேவைப்படும் பொதுப்போக்குவரத்து, மருத்துவமனை, கல்வி, உணவு போன்றவற்றிற்குத்தேவைப்படும் கட்டமைப்பு கட்டுமானங்களை செயற்படுத்தவும், ஏற்படுத்தவும்...

மாறுபடும் சூழலியலின் சவால்களை எதிர்கொள்ளவும்... 

எந்த ஒரு அரசிற்கும் வரி வருவாய் என்பது அத்தியவாசியமானது. அப்படியெனில் வரி போட்டு அரசாங்கத்தினால் எல்லாவற்றையும் சரி செய்து விடமுடியுமா என்பதற்கு 1950 முதல் 1986 வரை இருந்த இந்தியா முடியாது என்கின்றது.

கொடும் வரியின் மூலம் பதுக்கல்களும், கள்ளச்சந்தையும் பெருக்கெடுத்தது. 


முன்னேறிய கலாச்சாரத்திற்கு சொந்தமாகிய தமிழர்களின் புறநானுற்றில் எப்படி வரிவிதிக்கவேண்டுமென்பது 2000வருடங்களுக்கு முன்பே தெளிவாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது.


காய் நெல் அறுத்துக் கவளம் கொளினே,

மா நிறைவு இல்லதும், பல் நாட்கு ஆகும்;

நூறு செறு ஆயினும், தமித்துப் புக்கு உணினே,

வாய் புகுவதனினும் கால் பெரிது கெடுக்கும்;

அறிவுடை வேந்தன் நெறி அறிந்து கொளினே,

கோடி யாத்து, நாடு பெரிது நந்தும்;

மெல்லியன் கிழவன் ஆகி, வைகலும்

வரிசை அறியாக் கல்லென் சுற்றமொடு,

பரிவு தப எடுக்கும் பிண்டம் நச்சின்,

யானை புக்க புலம் போல,

தானும் உண்ணான், உலகமும் கெடுமே.

மா என்பது மூன்றில் ஒரு பங்கு ஏக்கர் நிலம் ஆகும். 1/3 -> 33.33%

செய் என்பது நான்கில் மூன்று பங்கு ஏக்கர் நிலம் ஆகும். 3/4 -> 75% 


அரசன் கவனமாக வரி விதித்தால் 33% வருவாயே வெகு நாட்களுக்கு வரும். 

கவனமின்றி, கேட்பார் பேச்சு கேட்டு 75% வருவாய் விதித்தால் 

யானை தானே களம் புகுந்து தனக்கு தேவையான உணவினை உட்கொள்ள நினைத்தால் அது தான் உட்கொள்வதை காட்டினிலும் தன் காலால் மிதித்து வீணாக்குவது அதிகமாயிருக்கும். 

ஆக அன்றே எவ்வாறு வரி அமைப்பு இருக்கவேண்டுமென்பதில் பாண்டிய அரசனுக்கு பாடமெடுத்தார் பிசிராந்தையார்... 

சரி இப்ப நிகழ்காலத்துக்கு வருவோம். 


வாட் வரி:

இந்திய விடுதலையின் பொழுது 1950-60களில் சுங்க வரியே (custom duty)  மத்தியரசின் வருவாயில் பெரும் பங்கு வகித்தது. பின்னர் உள்நாட்டு உற்பத்தி பெருகியதால் 65களுக்குப் பிறகு எக்ஸைசு வரி வருவாய் வளரத்துவங்கியது. 1990களில் நடந்த பொருளாதார சீர்திருத்ததிற்குப் பிறகு சுங்கவரியின் பங்களிப்பு குறையத் துவங்கியது. 

உற்பத்தியாளர் தனது மூலப்பொருளின் மீது செலுத்தப்பட்ட வரியை(Input Tax Credit) தனது உற்பத்திப்பொருளின் மீது கழித்துக்கொள்ள இயலாது. வரியின் மீது வரி என்பதாக இருந்ததினால் பொதுமக்களை சென்றடையும்பொழுது அந்தப் பொருளின் விலை அதீதமாக கூடுகின்றது. மேலும் மத்திய மாநில அரசுகள் தனித்தனியே வரி விதிக்கின்ற சூழ்நிலையில் ஒரே பொருளின் விலை வெவ்வேறு மாநிலங்களுக்கிடையே வித்தியாசமாக உள்ளது. 

இந்தச் சூழ்நிலையில் மத்திய அரசு 1986களில் "மாட்வாட்(ModVat)" டினை சில குறிப்பிட்ட பொருட்களுக்கு மட்டும் அறிமுகப்படுத்துகின்றது. 

திருநெல்வேலி பாளையங்கோட்டையில் பிறந்த ராஜா செல்லையாவின் தலைமையில் வரி சீர்திருத்த குழு 1991-93 காலகட்டத்தில் அமைக்கப்பட்டு அவரது பரிந்துரையின் பேரில் வரிசீர்திருத்தம் நடைபெருகிறது. இவர் "இந்திய வரி சீர்திருத்தங்களின் தந்தை" என்றழைக்கப்படுகின்றார்.


2000களில் வாஜ்பாயி அரசாங்கம் மீண்டும் வரிவிதிப்பினை சீரமைக்க முயர்சித்தது. 2000களில் "சென்வாட்(CenVat)" மத்தியில் அறிமுகப்படுத்தப்படுகின்றது. கேல்கர் கமிட்டி அமைக்கப்பட்டது அதன் பரிந்துரையே இன்றைய ஜிஎஸ்டி ஆகும்.

2003களில் மாநிலங்களுக்கிடையே விற்பனை வரியை நீக்கிவிட்டு மதிப்பு கூட்டு வரியை அமல்படுத்த தேவைப்படும் கட்டமைப்பு, ஒற்றுமையை மாநில அரசிடம் வாஜ்பாயி அரசாங்கம் ஏற்படுத்தி இருந்தது.

அதன் விளைவாக, மோதியின் குசராத், ஜெயலலிதா அம்மையாரின் தமிழ்நாடு,  போன்ற மாநிலங்கள் முரண்டு பிடித்தது ஒருபுறம் இருந்தாலும், 2004-05களில் ஆட்சி மாற்றம் ஏற்படினும் காங்கிரசு அரசாங்கம் நாடு முழுவதும் வாட் வரி கட்டுமானத்தை எளிதில் கொண்டு வர முடிந்தது.

உற்பத்தியாளர்கள் Input tax credit எடுத்துக்கொள்ளும் வசதி ஏற்படுத்தப்பட்டது

வாட் கட்டமைப்பினில் உச்சபட்ச வரி விகிதம் நிர்யணக்கப்பட்டது,  எ.கா 14% வாட் வரி என்றால் ஒரு மாநில அரசாங்கம் தேவைப்படில் 11% வரி விதித்துக்கொள்ளலாம், ஆனால் 14% வரி விகிதத்திற்கு மேலே செல்ல முடியாது. அப்படி வேண்டுமாயின் செஸ்(கூடுதல் தீர்வை) மூலம் அதிகரித்துக்கொள்ளலாம். 

இப்பொழுதும் சமவரி என்பது சாத்தியப்படவில்லை, 

இந்தியா பலதரப்பட்ட கலாச்சாரம் கொண்ட நாடு, ஆக

இங்கு சமவரி என்பது தேவையில்லை என்பது சிலரின் கருத்து. 


குறிஞ்சியின் கருத்து யாதெனில் இந்த பூமிப்பந்து ஒற்றைக் கோளமாகும்,

"யாதும் ஊரே யாவரும் கேளீர்" 

என்பதற்கிணங்க, பூமியில் பிறந்த யாவருக்கும் எல்லைகளின்றி,  இந்தப் பூமிப்பந்தில் எடுக்கப்படும் எந்தப் பொருளுக்கும்,  யாவருக்கும் உரிமையுண்டு. நாடுகள், பிராந்திய வேறுபாடு இன்றி நாம் ஒன்றினைவதின் மூலமே முன்னேற்றத்தினை காண இயலும். 

நமது போட்டி என்பது நாடுகளுக்கிடையே அன்றி, கோள்களுக்கு கிடையே மட்டுப்படுத்திக்கொள்ளாமல், பிரபஞ்சங்களுக்கிடையே என்பதாக நமது சிந்தனையை மேம்படுத்திக்கொள்ளவேண்டும். 


மீண்டும் களத்திற்கு வருவோம். 

வாட் வரி விதியமைப்பினை வெற்றிகரமாக நிகழ்த்திகாட்டிய பின்பு 2010களில் காங்கிரசு அரசாங்கம் ஜிஎஸ்டி வரி விதியை நிகழ்த்த மாநில அரசுகளிடையே பேச்சுவார்த்தை நடத்தியது. 

மாநில அரசாங்கங்கள் ஜிஎஸ்டி வரி அறிமுகப்படுத்தப்பட்டால் வரி விதிக்கும் உரிமை பெரும்பாலும் தங்களிடையே இருக்காது என்ற அச்சத்தினை வெளிப்படுத்தாவிட்டாலும், ஜிஎஸ்டி என்பது நுகர்வின் பொழுது விதிக்கப்படும் வரி என்பதால்  பெரும்பாலும் உற்பத்தி மாநிலங்களுக்கும் வரி இழப்பு ஏற்படும், வருவாய் இழப்பு ஏற்படும் என்று தமிழ்நாடு, மகாராட்டிரம், குசராத், ஹரியானா போன்ற மாநிலங்கள் முறுக்கிக்கொண்டு தங்களுக்கு ஏற்படும் வரி இழப்பினை சரிசெய்ய வேண்டும் என்ற வேண்டுகோளை பிரணாப், சிதம்பரம் போன்றோர் நிதியமைச்சராக இருந்த காங்கிரசு அரசிடம் வைத்தது. 

இது பெரும் சவால்தான் காங்கிரசு அரசாங்கத்திற்கும்... 

சவால்களை எதிர்கொள்வதுதான் எந்த ஒரு அரசிற்கும் முதன்மைப் பணியாகும். 

திவாலான நிலையிலிருந்து இந்தியாவினை 90களில் மீட்டெடுத்த நரசிம்மராவ் தலைமையிலான காங்கிரசு அரசில் பங்கெடுத்த மன்மோகன்சிங், சிதம்பரம் போன்றோரின் திறமையின் மீது குறிஞ்சி சந்தேகம் கொள்ளவில்லை. 

ஆயினும் காங்கிரசு அரசு 2010க்குப் பிறகு அரசியல் சூழ்நிலைகளின் புற அழுத்ததிற்கு அஞ்சி அடிபணிந்தது என்பதுவே உண்மை. 

ஆக அவர்கள் செய்யத்தவறியதினை மோதியின் பாஜக அரசின் நிதியமைச்சர் அருண்ஜெட்லி பெரும் பாய்ச்சலோடு செயற்படுத்தினார். 

மாநிலங்களிடையே 2000களில் வாட் வரிக்கு எப்படி ஒற்றுமையை முந்தைய பாஜக அரசு ஏற்படுத்தியதோ அப்படி ஒரு ஒற்றுமையினை பேச்சுவார்த்தை மூலம் நடத்தி சென்றார்.

மாநிலங்கள் வருடந்தோறும் 14% வரி வருவாய் வளர்ச்சியை எதிர்பார்க்கலாம், அப்படி எட்ட இயலாத மாநிலங்களுக்கு மத்தியரசு வருவாய் இழப்பினை செஸ்(கூடுதல் தீர்வை) மூலம் ஈட்டித்தரும் என்றார்.  நேர்முறை வளர்ச்சியை முன்வைத்து மாநிலங்களை சரிகட்டினார்.


5வருடங்களுக்கு வருவாய் இழப்பு ஏற்படின் Compensation cess மூலம் வருவாய் இழப்பு சரி செய்யப்படும் என்று அறிவித்து, ஜீலை 1 2017 திரு. பிரணாப் முகர்ஜி, குடியரசுத் தலைவர் முன்னின்று ஜிஎஸ்டி வரியினை அறிமுகப்படுத்தினார். 

2020-21 களில் கோவிட் கொடும் தொற்றினால் மத்திய மாநில அரசுகளின் வருவாய் நொடிந்து போனது மட்டுமின்றி கூடுதலாக கடன் வாங்கி மக்களின் நலனுக்கு செலவளிக்க வேண்டியிருந்தது. இந்தச் சூழ்நிலையில் Compensation cess, இழப்பிட்டினை கூடுதலாக 5 வருடங்களுக்கு நீட்டிக்க மாநில அரசு கோரியது, மத்தியரசும் ஒத்துக்கொண்டது.

Qn கோயிந்து : சரி இது வரை நீங்கள் பதிவின் முற்பகுதியில் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லவில்லையே... மோதி அதிக வரி விதித்திருந்தார் இப்பொழுது குறைத்துவிட்டார் என்ற குற்றச்சாட்டிற்கு பதில் சொல்லாமால் சங்கம் அங்கம் இங்கும் என்று வெற்றுக்கூச்சலாக பதிலளிக்கின்றீர்கள். 

குறிஞ்சி: ஹாஹா.. இதுவரை மேலே சொன்னதை படித்து களைத்து இருப்பீர்கள். கிழே முன்னாள் நிதியமைச்சர் ப. சிதம்பரம் அவர்கள் பாஜக அரசு 8வருடங்கள் சிர்திருத்திற்கு எடுத்துக்கொண்டதை  விமர்சித்திருப்பதை இணைத்திருக்கிறேன், உங்களின் கருத்து என்னவென்று அறிய ஆவலோடு இருக்கின்றேன். 


இதனைப் பற்றி இன்று அசைபோடுங்கள், பின்பு நாளை வாருங்கள் மோதி அதிக வரி விதித்தாரா இல்லையா என்று விவாதிப்போம். 


ஆதாரம்: 

https://cleartax.in/s/petrol-and-diesel-tax

https://sansad.in/getFile/annex/267/AU135_2VRFOo.pdf?source=pqars

https://ppac.gov.in/prices/vat-sales-tax-gst-rates

https://www.gktoday.in/indirect-taxes-in-india/

https://www.bankbazaar.com/tax/difference-between-vat-and-cenvat.html

https://the1991project.com/sites/default/files/2023-07/1993%20Raja%20Cheliah%20Tax%20Reforms%20Committee%20Report.pdf

https://dor.gov.in/goods-and-services-tax

https://prsindia.org/billtrack/the-goods-and-services-tax-compensation-to-states-bill-2017

https://x.com/nsitharamanoffc/status/1820367406856114631



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக