ஆமாம். இந்த உலகமே மனநோயாளிகளின் உலகமாக மாறிக்கொண்டேயிருக்கிறது போன்ற பிரமை . குறிப்பாக இணைய உலகம் நமக்கு காண்பிக்கும் செய்திகள் நாம் எப்போதும் விரும்பத்தகாத பக்கங்களையே மீண்டும் மீண்டும் காண்பித்து உலகமே இப்படித்தான் என்னும் மாயவலையை உருவாக்குகிறது. 'ஓஹோ' என்று சொல்லிவிட்டு நகர்கிற சங்கதி இல்லை இது. உதாரணத்திற்கு ஒன்று, ஜப்பானில் ஒரு நகரத்தில் ஒரு பள்ளிச்சிறுவனின் பிணம் கண்டெடுக்கப்படுகிறது. அவனது கழுத்தை அறுக்க முற்பட்டு அதனால் உண்டான கொடூரமான காயங்களால் உயிர் துறந்திருக்கிறான் அந்த சிறுவன். தொடர்ந்த விசாரணைகளில் இணையத்தில் பதிவேற்றப்படும் ஐ.எஸ் தீவிரவாதிகளின் மரணதண்டனைகளால் ஈர்க்கப்பட்ட ஒரு பதின்ம வயது சிறுவன் தன் நண்பனிடமே அதை சோதித்துப்பார்த்ததன் விளைவுதான் அந்தகொலை. இந்தக்கொலையால் கொடூரமான கொலைகளை அடிக்கடி சந்திக்காத ஜப்பான் நாடு மொத்தமும் அதிர்ந்து போயிருக்கிறது. இது ஒரு உதாரணம்தான்.
'நல்லதும் இருக்கு, கெட்டதும் இருக்கு... நாம்தான் நல்லதைப்பாத்து தெரிஞ்சுக்கணும்' என்பது அடிக்கடி இணைய வசதியைப் பற்றிய விவாதத்தில் சொல்லப்படும் சொற்றொடர். ஆனால், தற்போது நம்மை ஆதிக்கம் செலுத்தும் சமூக வலைத்தளங்களில் பரபரப்புக்காக வரைமுறையின்றி பரப்பப்படும் எதிர்மறைச் செய்திகளே அதிகம். ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளின் மரண தண்டனைகளில் தொடங்கி நடிகைகளின் வாட்ஸ் அப் புகைப்படங்கள் வரை இப்போதெல்லாம் தகவல்கள் பரப்பப்படுவதே முதன்மை செய்தி ஊடகங்களில்தான். ஒருவரை மண்டியிட வைத்து கொடூரமாக கழுத்தை அறுப்பது, உயிரோடு கூண்டுக்குள் வைத்து கொளுத்துவது, வரிசையாக படுக்கவைத்து சுடுவது, உயரமான கட்டிடங்களின் மாடியிலிருந்து தூக்கிப்போடுவது என தீவிரவாதிகள் விதவிதமான தண்டனைகளை நிறைவேற்றுகிறார்கள். நன்றாக ஊன்றி கவனித்தால் ஒன்று புரியும். சர்வதேச செய்தி ஊடகங்கள் இவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க கொடுக்கத்தான் இவர்களது தண்டனைகள் கொடூரம் மிகுந்ததாக ஆகின்றன. இதுதான் இவர்களை மனநோயாளிகளாக அடையாளங்காட்டுகிறது. அது மட்டுமல்ல, இவர்கள் ஒட்டுமொத்த சமூகத்தின் மத்தியில் இந்த வன்முறை உணர்ச்சியைத் தூண்டி விடுகின்றனர். அந்த விதை(அல்லது களை?) எங்கே வழிகிடக்கிறதோ அங்கே முளைக்கிறது. அவ்வப்போது இந்தியர்கள் உட்பட பலர் ஐ.எஸ் தீவிரவாதிகளுடன் இணைய முயற்சிப்பதும் கைதாவதும் இந்தத் தூண்டுதலின் காரணமே. இப்படி காட்சி வடிவமாக தேசங்கள் கடந்து மனிதர்களின் மனநலனைக் கெடுத்து அந்த இயக்கத்தில் சேராமலே சக மனிதனுக்கு தீங்கு விளைவிக்கும் அளவுக்கு ஒரு இயக்கம் ஆகிவிட்டதன் உதாரணம்தான் அந்த ஜப்பான் சிறுவன் படுகொலை.
அடுத்ததாக, பயனுள்ள செய்தித்தொடர்பு சாதனமாக பயன்படுத்தப்படவேண்டிய வாட்ஸ் அப் போன்ற செயலிகள் இன்று பெருமளவில் ஆபாச தகவல்களையே பரப்பும் சாதனமாக வளர்ந்திருக்கிறது. இது இந்தியாவில் மட்டும்தானா அல்லது மற்ற நாடுகளிலும் இப்படித்தானா என்று தெரியவில்லை. சில ஆண்டுகளுக்கு முன்பு வரை பயந்து பயந்து மறைவில் பார்க்கப்பட்ட ஆபாசப்படங்கள் அலைபேசிகளின் வருகைக்குப் பிறகு சாதாரண விஷயமாகிவிட்டது. அதையும் தாண்டி அடுத்தவர் அந்தரங்கத்தை படமெடுத்து அதை பரபரப்பாக பகிர்வதுதான் தற்போதைய நிலை. அதிலும் சில வாரங்களாக 'X நடிகையின் ஆபாசப்படம், வாட்ஸ் அப்பில் பரபரப்பு' என்று முதன்மை ஊடகங்களே செய்தி பரப்புகின்றன. இதுதான் ஊடங்களுக்கு அழகா? தேவையில்லாமல் அடுத்தவர் மனதைக் கெடுக்கும் செய்திகளையோ படங்களையோ தவிர்ப்பதுதானே தர்மம்? ஆனால் இன்றைய உலகில் 'அதிகபட்ச ஹிட்கள்'தான் தர்மம். அது யார் மனதை எப்படிக் கெடுத்தாலும் பரவாயில்லை. இதன் பட்டாம்பூச்சி விளைவு என்ன தெரியுமா? பத்தாம் வகுப்பு படிக்கும் சிறுவன் ஆறாம் வகுப்பு படிக்கும் சிறுமியைக் கற்பழிக்க முயற்சி செய்து கொலை செய்தது. விசாரணையில் அலைபேசியில் பார்த்த ஆபாசப்படங்கள்தான் தன்னை தூண்டிவிட்டது என்று வாக்குமூலம் கொடுத்திருக்கிறான் அந்த சிறுவன். இந்த சிறுவனின் மனநிலை இப்படி பிறழ்ந்ததற்கு என்ன காரணம்?
'மச்சான், அந்த நடிகையோட லிங்க் அனுப்புடா' என்று வெளிப்படையாக ஃபேஸ்புக்கில் கேட்குமளவிற்கு இளைஞர்களை பாதித்து இருக்கிறதென்றால் அதற்குக் காரணம் ஆபாசத்தை பரப்பும் நமது மனநிலையா அல்லது தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியா?
இயல்பிலேயே எதிர்மறை விஷயங்களிடம் அதிகமாக ஆட்படக்கூடிய மனித மனதை ஆன்மீகம், கடவுள் பயம் என்று கட்டுப்போட்டு வைத்தார்கள் நம் தாத்தனும் பாட்டியும். ஆனால் விஞ்ஞான, தகவல் தொழில் நுட்ப வளர்ச்சி அவற்றையெல்லாம் அடித்து தூரம் தள்ளிவிட்டது. எங்கோ நடக்கிறது என்று அளட்சியப்படுத்தமுடியாத அளவுக்கு உலக நடப்புகளின் தாக்கங்கள் நம்மை சூழ்ந்துள்ளன. மேற்சொன்ன சம்பவங்கள் அதன் ஒரு துளிதான். இது கற்பனை அல்ல.
தான் கணிணியில் உட்கார்ந்திருக்கும்பொழுது தொந்தரவு செய்பவர்களிடம் எரிந்து விழுவதில் தொடங்கி காணொலிக்காட்சிகளின் வீரியத்தினால் அடுத்தவருக்கு தீங்கு விளைவிப்பது வரை நம்மை மனரீதியாக சமநிலையில்லாத ஆளாக்கக்கூடிய தற்கால சாதனங்களின் பிடியிலிருந்து நம்மை எப்படி காத்துக்கொள்ளபோகிறோம்? நம் வீட்டிலிருக்கும் உறவுகள் சரியான வழியில் செல்கிறார்களா? நம்மை சுற்றியிருக்கும் மனிதர்கள் சரியானவர்கள்தானா என்று எப்படி நம்புவது? உங்களிடம் விடையிருக்கிறதா?




கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக