மிகப் பிரம்மாண்டமான வெற்றிப்பெற்ற மோடி பிரதமராக பதவியேற்று ஐம்பது நாட்கள் ஆகப்போகிறது. இணைய அரசியல் விமர்சன உலகம் இப்போதே மோடி இன்னொரு மன்மோகன்சிங் என தீர்ப்பு கொடுத்துவிட்டது. இது சரிதானா அல்லது இந்த 50 நாட்கள் இனி வரும் ஐந்து வருடங்களுக்கான முகவுரையா என பார்ப்போம். இது விமர்சனமல்ல, ஒரு பார்வை மட்டுமே...
உண்மையில் மோடி அவரது ஆதரவாளர்களோ பொது மக்களோ புளகாங்கிதம் அடையும்படியோ கொண்டாடும்படியோ எந்தவிதமான அறிவிப்பையோ சாதனையையோ செய்யவில்லை. பலருக்கு இது ஒரு குறையாக இருக்கலாம். ஆனால் இந்த நிதானம் மிகத்தேவையானது என்றே கருதுகிறோம். இன்னொரு விஷயம், ஏறத்தாழ 7-8 ஆண்டுகள் கழித்து காங்கிரசின் சீர்கேடுகளையும், மன்மோகனின் மெளனத்தையும், ராகுலின் சிறுபிள்ளைத்தனத்தையும், அப்போதைய மத்திய அமைச்சர்களின் ஆணவப்போக்கையும் விமர்சித்து கிழித்துப்போட்ட இணைய உலகம் இவ்வளவு அவசரமாக மோடி அரசும் காங்கிரசு அரசும் ஒன்றுதான் என்ற முடிவுக்கு வரவேண்டுமா என்றும் கருதவேண்டியுள்ளது. சரி, அப்போ மோடி எந்த தப்பையும் செய்யவில்லையா என்று கேட்கிறீர்களா? அப்படி சொல்லவே முடியாது. அதை விரிவாகவே பார்ப்போம்.
மோடியின் சறுக்கல்கள்:
ஒட்டுமொத்த இந்திய மக்களின் மனநிலை புரியாமல் நடந்த மோடியின் தவறான அணுகுமுறையில் முக்கியமானது இந்தியை திணிக்க முயன்றது. எல்லோரும் விவாதித்து ஓய்ந்துபோன விஷயம். காஷ்மீர் முதல் குமரி வரை எதிர்ப்பை சம்பாதித்தபிறகு பின்வாங்குவது போல் காட்டிக்கொண்டது மத்திய அரசு. இது எப்போது வேண்டுமானாலும் உயிர்பெறும் பூதம். பின்வாசல்கள் வழியாக புகை ரூபத்தில் உள்நுழைய வாய்ப்புண்டு. ஆனால் அதை மக்கள் உணரும்போதெல்லாம் மீண்டும் எதிர்ப்பையே எதிர்கொள்ளவேண்டி வரும் என்று அவர்கள் உணரவேண்டும்.
அடுத்து எரிபொருள் விலை உயர்வுக் கொள்கை. மக்கள் காங்கிரசுக்கு பெரும் எதிர்ப்புக்காட்டியது இந்த விஷயத்தில்தான். ஆனால் அதில் எந்த மாற்றமும் இல்லாமல் மாதாமாதம் விலை உயர்வு இருக்கும் என்று கூறியுள்ளது மக்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றம். இனிவரும் காலங்களில்தான் மத்திய அரசு இந்த விஷயத்தில் மக்கள் நலனில் கருத்தாக இருக்கிறதா அல்லது அம்பானியின் வளர்ச்சியில் மட்டும் கருத்தாக இருக்கிறதா என்று முழுமையாக புலப்படும்.
பதவியேற்றவுடன் கறுப்புப்பணத்தை மீட்பது தொடர்பான கூட்டத்தையும் நடத்தி அதற்கு ஒரு குழுவையும் அமைத்தது மத்திய அரசு. சமீபத்தில் சுவிஸ் அரசு இன்னும் அதிகாரப்பூர்வமாக எந்த ஒரு பட்டியலையும் தரவில்லை என்று ஜெட்லி சொன்னது 'வெளிநாட்டில் கறுப்புப்பணம் இல்லை' என்று சொன்னதாக திரிந்ததால் மத்திய அரசு வாங்கிக்கட்டிக் கொண்டது. இது தொடர்பாக இன்னும் வலுவான நடவடிக்கைகள் எடுத்தால்தான் மக்களின் நம்பிக்கையைப் பெற முடியும்.
அடுத்து நீதிபதி கோபால் சுப்ரமணியம் அவர்களின் நியமனத்தில் தலையிட்டு உச்சநீதிமன்றத்தில் கெட்டபெயர் வாங்கியது. ஆரம்பத்திலேயே நீதித்துறையோடு சர்ச்சை என்றால் அது எல்லா தரப்பினரின் நம்பிக்கையையும் சிதைக்கும் என்பதை இன்னும் மோடி உணராமல் இருப்பது அறியாமையா அகம்பாவமா தெரியவில்லை.
மோடி அரசின் அந்நிய முதலீட்டு மோகம் திகைக்கவைக்கிறது. இதுதான் இவர்களின் சுதேசிக்கொள்கையா என்று பலரும் கேள்வி கேட்கிறார்கள். பாதுகாப்புத் துறையில் அந்நிய முதலீடு என்பது நாட்டிற்கு எந்த அளவு நியாயமானது என்பதை மத்திய அரசுதான் விளக்கவேண்டும். சமூக வலைதளங்களில் பலமாக இருப்பதாக பெருமைப்பட்டால் மட்டும் போதாது. அதன்மூலமாக மக்களின் எண்ண ஓட்டத்தையும், விமர்சனங்களையும் புரிந்துகொண்டு அதற்கேற்ப தம்மை திருத்திக்கொள்ள அரசு தயாராக வேண்டும். தேவையான நேரங்களில் மக்களுக்கு தங்கள் கொள்கைகளின் நியாயங்களை விளக்கவேண்டும்.
தமிழக மக்களைப்பொறுத்தவரை மத்திய அரசு எந்த நம்பிக்கையையும் பெறவில்லை. இந்தி திணிப்பு, தேர்தல் பிரச்சாரத்தில் மீனவர் பிரச்சினை பற்றி பேசிய மோடி இப்போது அதைப்பற்றி வாய் திறக்காமல் இருப்பது, உயர்நீதிமன்றத்தில் கச்சத்தீவில் தமிழக மீனவர்கள் மீன்பிடிக்க உரிமையில்லை என்று சொல்லி காங்கிரசு அரசின் போக்கையே கடைப்பிடித்தது (இது முந்தைய அரசின் அறிக்கை என சமாளித்தது தனி காமெடி), ராஜீவ்காந்தி கொலைவழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களை விடுதலை செய்வதில் எதிர்நிலைப்பாடு எடுத்தது என தலைப்புச்செய்தி விவகாரங்களில் பெயரைக் கெடுத்துக்கொண்டது. கேரளாவின் போலி ஒப்பாரியைக் கண்டுகொள்ளாமல் முல்லைப்பெரியாறு மேற்பார்வைக்குழுவை அமைத்ததும், பொது வரவு-செலவுத்திட்டத்தில் தமிழகத்திற்காக சூரிய மின்சக்தி திட்டத்தை அறிவித்ததும் நல்ல சமிக்ஞைகள் என்றே சொல்லலாம். முதல்வர்தான் மத்திய அரசை விடாமல் வற்புறுத்தி நதிநீர் பங்கீடு பிரச்சினைகளில் தமிழகத்திற்கான பங்கை பெறவேண்டும். தென்மாநிலங்களில் கட்சியை வளர்க்கவேண்டும் என்று புதிய தலைவர் அமித் ஷா கூறியுள்ளார். வழக்கமான வட இந்திய மனநிலையுடன் தமிழகத்தை அணுகினால் ஒருபோதும் ஜெயிக்கமுடியாது. தமிழகத்தின் பிரச்சினைகளை ஊன்றி கவனித்து அதற்கு தீர்வுகாண முயன்றால்தான் எந்த ஒரு கட்சியும் இங்கே நிற்கமுடியும் என்பதை அவர் உணரவேண்டும்.
காங்கிரசு அரசில் இருந்தது போலவே இப்போதும் சில மத்திய அமைச்சர்கள் தவறான வார்த்தைகளைப்பேசி பின் பிரச்சினையானதும் சமாளிக்கின்றனர். இதனால் எப்போதும் மத்திய அரசுக்கு தலைவலிதான்.
வரவு-செலவு திட்டக்கணக்கு:
ரயில்வேத்துறை பட்ஜெட்டும், பொது பட்ஜெட்டும் எந்தவிதமான சலனத்தையும் ஏற்படுத்தவில்லை. இவர்கள் அறிவித்துள்ள திட்டங்களின் செயல்பாடுகள் என்ன வேகத்தில் நடக்கிறது,எத்தனை சதவீதம் வெற்றிபெறுகிறது என்பதைப்பொறுத்தே மதிப்பீடு செய்யமுடியும். சூரிய மின்சக்தி திட்டங்கள், வடகிழக்கு மாநிலங்களுக்கான வளர்ச்சி திட்டங்கள், ரூபாய் நோட்டுக்களில் ப்ரெய்லி மொழி, பெண் குழந்தைகள் முன்னேற்றங்களுக்கான புதிய திட்டங்கள், எய்ம்ஸ் மருத்துவமனைகள், ஐஐடி, ஐஐஎம்கள் முதலியவை வரவேற்க வேண்டியவை.
ஈராக் விவகாரம்:
இலங்கை விஷயத்தில், தமிழக மீனவர் கைதுகளில் இதுவரை மத்திய அரசு வேகமாகவோ விவேகமாகவோ செயல்படவில்லை. ஆனால் ஈராக்கில் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளிடம் சிறைப்பட்ட செவிலியர்களை வெளியே சத்தம்காட்டாமல் சகலவிதங்களிலும் முயற்சி செய்து அவர்களை மீட்ட மத்திய அரசையும், வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜையும் பாராட்டியே தீரவேண்டும். இதே விவேகத்தை நாட்டின் சகல பகுதிகளிலும் ஏற்படும் பிரச்சினைகளில் காட்டவேண்டும்.
இதுவரை கடிவாளம் மோடி கையில்தான் என்கிற தோற்றமே இருக்கின்றபடியால் மத்திய அரசின் எந்த ஒரு செயலுக்கும் அவரே பொறுப்பாக்கப்படுவார். தேர்தல் பிரச்சாரங்களில் தன்னை செயல்வீரராகக் காண்பித்துக்கொண்ட மோடி அதை நிரூபிக்கவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். மொத்தத்தில், ஐம்பது நாட்களைக் கடக்கும் மோடி அரசு பெருமிதமடைய எந்த காரணமும் இல்லாமலே இருக்கிறது. யார் என்ன சொன்னாலும் குறைந்தபட்சம் ஒரு வருடம் கழித்துத்தான் அரசின் பாதை நமக்குத் தெரியும். நல்லதே நடக்கும் என நம்புவோம்.




கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக