வெள்ளி, 31 மே, 2013

கணினியே தெரியாதவர்களும் கலக்கலாம் வாருங்கள் விளையாடுவோம் … பகுதி 003


உங்கள் வகுப்பில் எத்தனை பேர் இருக்கிறார்கள்? அவர்கள் அத்தனை பேர்களுடைய மதிப்பெண்களும் தெரியுமா? அவர்களில் யார் அதிகபட்சம் பெற்றிருக்கிறார்கள் என்று தெரிந்து கொள்ள வேண்டுமா?

முந்தைய பகுதிகளில் சொல்லப்பட்ட வழிமுறைகளைப் பின்பற்றினால் எளிதில்விடை கண்டுபிடித்துவிடுவீர்கள். 


இது சாதாரணமாக, ஓரளவு விசயம் தெரிந்தவர்கள் செய்துவிடக் கூடிய வேலை. நான் விவரமானவன். எனக்கு இதெல்லாம் ஒரு வேலையே இல்லை...ஊதிவிடுவேன் ஊதி என்கிறீர்களா? உங்களிடம் இன்னொரு பெரிய பொறுப்பைக் கொடுத்தால் என்ன செய்வீர்கள்?
ஒரு தெருவில் ஐம்பது வீடுகள் இருக்கின்றன. ஒவ்வொரு வீட்டுக்காரரும் எவ்வளவு சம்பாதிக்கிறார் என்கிற விவரம் உங்களிடம் கொடுக்கப்படுகிறது. அவர்களுள் அதிகம் சம்பாதிப்பவர் யார் என்று தெரிய வேண்டும். மிகவும் குறைவாகச் சம்பாதிப்பவர் யார் என்பதையும் அறிய வேண்டும். கவனியுங்கள். அந்தத் தெருவில் 50 வீடுகள் இருக்கின்றன. இந்தத் தெரு முடிந்தது. அடுத்த தெரு. 60 வீடுகள். இன்னொரு தெரு 100 வீடுகள். கண்டுபிடிக்கும் வேலையை முடித்துவிடுவீர்கள். இப்போது அந்த ஊர் மொத்தத்தையும் கணக்கில்எடுத்துக் கொள்ள வேண்டும். அடுத்தபடியாக அந்த ஊராட்சி முழுவதற்கும். அப்புறம்... வட்டம்..மாவட்டம்..மாநிலம்..நாடு என்று விரித்துக் கொண்டே போக வேண்டும்.

என்ன ஆகும்? முதலில் உங்கள் பட்டியலில் உள்ள பத்தியில் 50 பதிவுகள் இடம் பெற்றிருக்கும். அடுத்து 60. அப்புறம் 100. பதிவுகளின் எண்ணிக்கை 50, 110, 210 என்று வளர்ந்து கொண்டே போகும். போகட்டும். கவலை இல்லை.

இப்போதைக்கு நீங்கள் 10,48,576 பதிவுகள் வரை ஒரே ஒரு பத்தியில் இடம் பெறச் செய்ய முடியும். உத்தேசமாக உங்களால் பத்து இலட்சம் எண்களை நொடியில் அலசி ஆராய்ந்துவிட முடிகிறது. அன்றாட வாழ்க்கையில் நீங்கள் இவ்வளவு பெரிய , நீளமான பட்டியலை ஆராய்ந்து கொண்டிருக்க அவசியம் ஏற்படாது. உங்களுக்குத் தெரிந்த சிறிய உத்தி ஒன்றை வைத்துக் கொண்டு என்னென்ன ஆராய்ச்சிகளைச் செய்ய முடியும் என்பதை அலசுங்கள்.

உங்கள் திருமணத்திற்கு வந்தவர்கள் அன்பளிப்பு அளித்திருப்பார்கள் இல்லையா? அதை ஒரு பெரிய நோட்டில் எழுதி வைப்பது வழக்கம். யார்அதிகபட்ச மொய் வைத்திருக்கிறார்கள் என்று பார்க்கலாமா? யார் அற்பமாக மிகக் குறைந்த தொகை செலுத்தி இருக்கிறார்கள் என்று தேடலாமா? மொத்தம் எவ்வளவு கணக்குக் காட்டுகிறது என்று பார்க்கலாமா? கையில் இருப்பதற்கும் கணக்கில் வருவதற்கும் ஏன் வித்தியாசம் வருகிறது என்கிற காரணத்தைக் குடையலாமா? மொய் எழுதும் வேலையைச் செய்த உங்களது ஒன்றுவிட்டசித்தப்பாவின் மேல் சந்தேகம் வருகிறதா?

இதற்கெல்லாமா கணினியைப் பயன்படுத்திக் கொண்டிருப்பது என்று கேட்க நினைப்பீர்கள். பெரும்பாலானவர்களின் வீடுகளில் கணினி உறங்கிக் கொண்டிருக்கிறது. ஆகாத வேலைகளை அதில் செய்து கொண்டிருப்பவர்கள் அதிகம். உங்களைத்  தேடி ஓர் ஓய்வு பெற்ற முதியவர் வருகிறார். தம்பி..என்னுடைய 35 வருட சேவைக்காலத்தில் நான் வாங்கிய மொத்தச் சம்பளம், அகவிலைப்படி போன்ற விவரங்கள் வேண்டும். இந்த நோட்டில் மாதா மாதம் வாங்கிய விவரங்களை எழுதி வைத்திருக்கிறேன்.. எனக்குச் சில கணக்குகளைப் போட்டுத் தர வேண்டும் என்பார்.

உங்களால் உதவ முடியுமா? உங்களுக்கே அப்படியொரு தேவை வரும் என்பதைக் கற்பனை செய்து பார்க்கிறீர்களா? ஆகவே பயன்பாட்டு அடிப்படையில் சின்னச் சின்ன வேலைகளை எப்படிச் செய்வது என்று தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள். இதில் நீங்கள் தெளிவாக இருந்தால் எவ்வளவு பெரிய சிக்கல் ஆனாலும் எளிதாகத் தீர்த்துவிடும் திறமை வந்துவிடும்.

இப்போது கொஞ்சம் உங்கள் சிந்தனைக்கு ஓய்வு கொடுங்கள். மனம் போனபடி சில எண்களைக் கிறுக்குங்கள். மனம்போனபடி என்பதை மறந்துவிடாதீர்கள். ஒரேயொரு நிபந்தனை – உங்களது பட்டியலில் இடம் பெறும் எண்கள் 1 முதல் 100 என்கிற எல்லைக்குள்தான் இருக்க வேண்டும்.
1,2,3 என்று ஏறுவரிசையிலோ, 100,99,98 என்று இறங்கு வரிசையிலோ இருக்கக் கூடாது. எந்த ஒழுங்கிற்கும் கட்டுப்படாத வரிசையாக இருக்க வேண்டும். கிடுகிடுவென்று எண்களை எழுதிக் கொண்டே செல்ல வேண்டும்.எத்தனை எண்களை, எவ்வளவு வேகமாக எழுத முடிந்திருக்கிறது? விரைவில் களைத்துப் போய்விட்டீர்களா? சலிப்புத் தட்டுகிறதா? கணினியிடம் வேலையை விட்டுவிட்டால் தேவலாம் என்று தோன்றுகிறதா? அதற்கு என்ன வழி என்று சிந்தியுங்கள். தெரிந்தவர்கள் உடனே தெரிவியுங்கள். தெரியாதவர்கள் காத்திருங்கள்.

முந்தைய பகுதிகள்: 
பகுதி 2 - http://kurinjinet.blogspot.in/2013/05/002.html
பகுதி 1 - http://kurinjinet.blogspot.in/2013/05/001.html

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக